qqq

விஷால்: “அம்மா”வுக்கு அடங்கிய பிள்ளை!

டிகர் சங்க தேர்தலில் வென்ற பாண்டவர் அணியின் நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பின்போது, விஷால் சொன்ன ஒரு வார்த்தைதான் மிக முக்கியமானது.

அது, “காவிரி பிரச்சினை போன்ற விசயங்களில் கடந்த காலத்தில் நடிகர் சங்கம் போராடியது போல இனியும் நடக்குமா” என்ற கேள்விக்கு, “எந்த அரசியல் சார்ந்தபோராட்டங்களிலும் தென்னிந்திய நடிகர் சங்கம்போராடாது’’ என்று பட்டென பதில் அளித்தார்  விஷால்.

அந்த பதிலில் பொதிந்திருக்கும் அர்த்தம் கவனிக்கத்தக்தது. அது மட்டுமல்ல.. கேள்வி முடிந்த அடுத்த விநாடி பதில் வந்த வேகமும் அதைவிட கூர்ந்து கவனிக்கத்தக்கது. 

நடிகர் சங்க தேர்தல் நடந்தபோதே, “அ.தி.மு.க. உறுப்பினர்கள் யாருக்கும் வாக்களிக்கலாம். ஆனால் தேர்தலில் போட்டியிடக்கூடாது” என்று வெளிப்படையாகவே அறிவித்தார் அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா.

நடிகர் சங்க தேர்தலை மட்டுமல்ல.. நடிகர்களையும் தள்ளி வைக்க நினைக்கிறார் முதல்வர் என்பது அப்போதே  தெரிந்துவிட்டது.

தனது கூட்டணியில் இருந்தாலும், தன் கட்சி சின்னத்தில் நின்று எம். எல்.ஏவாக வெற்றி பெற்றவர் என்றாலும் நடிகர் சரத்குமாரை அவ்வப்போது தட்டிவைத்தபடியே இருந்தார்

வடிவேலு மாதிரி, “எவ்வளவு அடிச்சாலும் தாங்குவேன்” என்று சிரித்தபடியே சரத் இருந்தாலும்கூட, ஜெயலலிதா. சட்டமன்றத்திலேயே சரத்தை ஜெயலலிதா சொன்னதும் நடந்தது.

இதனால், நடிகர் சங்க தேர்தலில் சரத்துக்கு எதிரான விஷால் அணி்க்கு ஆளுங்கட்சியின் கடாட்சம் கிடைக்கும் என்று பலரும் கணித்தார்கள். ஆனால் இந்தத் தேர்தலை, ஒரு பொருட்டாகவே ஜெயலலிதா எடுத்துக்கொள்ளவில்லை என்பதே உண்மை. 

தன்னை சந்திக்க நேரம் கேட்ட சரத் – விஷால்  இரண்டு அணியினருக்குமே நேரம் ஒதுக்கவில்லை “சந்திக்க வாய்ப்பில்லை” என்ற தகவல்கூட முறையாக இரு அணியினருக்கும் தெரிவிக்கவில்லை.

ஜெயலலிதாவும் திரைத்துரையில் இருந்து வந்தவர்தான். ஆனால், அ.தி.மு.க.வில் கொள்கைபரப்பு செயலாளராக இருந்து, தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் சென்று, எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு பலவித சோதனைகளை சமாளித்து கட்சியை மீட்டு முதல்வர் ஆனவர். “இப்பல்லாம் ரெண்டு படம் ஓடிட்டாலோ சி.எம். ஆகணும்னு பலருக்கு கனவு வந்திடுது” என்கிற எண்ணவோட்டமே ஜெயலலிதாவுக்கு இருக்கிறது.

ஆகவே ஒட்டுமொத்தமாக நடிகர்களை தள்ளிவைக்க விரும்புகிறார்.

அதே போல நடிகர்கள், காவிரி, ஈழம்.. என்று பொதுப்பிரச்சினைக்காக குரல் கொடுப்பது,  போராட்டம் நடத்துவதை எல்லாம் அவர் விரும்பவில்லை.

“நடிப்பு உங்கள் தொழில். அதோடு இருந்துவிடுங்கள்” என்ற கருத்தில் இருக்கிறார். 

அதனால்தான், நேற்று நடிகர் சங்க செயற்குழு கூடும் நிலையில்.. நேற்று முன்தினம் ஆளும் தரப்பிலிருந்து கலைப்புலி தாணுவுக்கு ஒரு தகவல் அனுப்பப்பட்டது.   “பொது விசயங்களில் ஈடுபட மாட்டோம் என்று அவர்களை அறிவிக்கச் சொல்லுங்கள்” என்பதுதான் அந்த தகவல். 

அதை அவரும் சிரமேற்கொண்டு, விஷாலிடம் தகவலை சொல்லிவிட்டார். 

ஆளும் தரப்பில்  இருந்து தகவல் கொண்டு வந்தவர் என்கிற “மரியாதையால்”தான் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது  முதல் ஆளாக மேடையேறி விசால் அணிக்கு வாழ்த்து தெரிவித்தார் கலைப்புலி தாணு. 

வென்ற இந்த அணிக்கு எதிராக, சரத் அணிக்கு ஆதரவளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இன்னொரு விசயம்.

ஆளும் தரப்பிலிருந்து சொல்லப்பட்ட படியே, “பொது விசயங்களில் தலையிட மாட்டோம்” என்று சொல்லிவிட்டார் விசால். 

“விஷால் எடுத்தது நல்ல முடிவு. அதே போல மக்கள் பிரச்சினைக்கு மட்டுமல்ல.. ஓட்டு கேட்டும் வரக்கூடாது என நடிகர்கள் முடிவெடுக்க வேண்டும்”  என்பதே மக்களின் விருப்பம்.