03-1446528701-vaiko-tirumada-600
 
வாக்கு “பதிவு” என்ற புதிய பகுதியில் சமூக ஆர்வலர் பாரதி சுப்பராயன் எழுதினார். இப்போது மூத்த பத்திரிகையாளர் சுந்தரேசன் எழுதுகிறார். கட்டுரையாளர்களின் கருத்து அவர்களது சொந்தக்கருத்துக்களே. – ஆசிரியர்
அத்தனை சாலைகளும் ரோம் நகரை நோக்கிச் செல்கின்றன என்ற பதத்தைப்போல, அத்தனை அரசியல் தலைவர்களும்  தே.மு.தி.க.  தலைவர் விஜயகாந்தின் முடிவை எதிர்நோக்கி பார்த்திருந்தார்கள்.
அப்படி விஜயகாந்துக்காக ஆசை ஆசையாக காத்திருந்தவர்களில் மக்கள் நலக்கூட்டியக்கத்தவர்களும் உண்டு. அதிலும் வைகோதான் வருந்தி வருந்தி அழைத்தார்.
தங்கள் கூட்டணிக்கு விஜயகாந்த் வர வேண்டும் என்று அவர் விரும்புவதும், சந்தித்து பேசுவதும் தவறில்லை. ஏனென்றால் வைகோதான் மக்கள் நலக்கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர். ஆனால் விஜயகாந்த் என்ன செய்யப்போகிறார் என்பதை அறியாமலேயே தே.மு.தி.க. மாநாட்டுக்கு  மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் வாழ்த்து அனுப்பியது அதிகப்படியான விசயம்.
அதே போல, “விஜயகாந்த் தி.மு.கவுடன் சேர மாட்டார்” என்று தினந்தோறும் சொல்லிக்கொண்டிருந்தார் வைகோ.
இன்று தமிழகத்தில் அமைந்திருக்கும் கூட்டணிகளில் “குறைந்தபட்ச பொதுக்கொள்கையோடு”  அமைந்ந்திருப்பது மக்கள் நலக்கூட்டணிதான். இதில் எந்த கொள்கையும் இல்லாத விஜயகாந்தின் தே.மு.திகவை இவர்கள் வருந்தி வருந்தி அழைத்ததே ஆச்சரியம்தான். இந்த அழைப்புகள், மக்கள் நலக்கூட்டணியின் மீது மதிப்பு வைத்திருக்கும் வாக்காளர்களிடம் ஆதங்கத்தையே ஏற்படுத்தியது.
மக்கள் நலக்கூட்டணியினர் ஒரு விசயத்தைப் புரிந்துகொள்ளவே இல்லை.
அக்ககூட்டணியில் உள்ள கட்சியினர் வாக்குகளைவிட, அவர்கள் மீது நம்பிக்கை கொண்ட வாக்காளர்கள் அதிகம்.  அந்த வாக்காளர்களுக்கு விஜயகாந்த் மீது எந்தவித மரியாதையும் கிடையாது. விஜகாந்தின் தான்தோன்றித்தனமான பேச்சு, கொள்கையற்ற அரசியல் ஆகியவற்றின் மீது அதிருப்தி உள்ளவர்கள்தான் அந்த வாக்காளர்கள்.
அந்த வாக்காளர்கள், ம.ந.கூட்டணி மீது இப்போது மரியாதை வைத்திருக்கிறார்கள். ஓரளவு பொதுத்திட்டத்துடன் இருக்கும் கூட்டணி. ஊழலற்ற அரசியல்தலைவர்கள் என்கிற எண்ணம் ம.ந.கூட்டணி மீது அவர்களுக்கு இருக்கிறது.  தலித் கட்சியான விடுதலை சிறுத்தைகளுக்கு சரிக்குச் சரியான முக்கியத்துவம் அங்கு தரப்படுவதையும் இவர்கள் விரும்புகிறார்கள். ஏனென்றால் சமீப காலத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.கவுடன் விடுதலை சிறுத்தை கூட்டணி வைத்தபோது இந்த அளவுக்கான அரசியல் மரியாதை கிடைத்ததில்லை என்பது கண்கூடு.
ஒருவேளை மக்கள் நலக்கூட்டணிக்கு விஜயகாந்த் வந்திருந்தால், அவரே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பார். அப்படி நடந்திருந்தால், இந்த கட்சி சாராத…  ம.ந.கூட்டணி ஆதரவாளர்கள் விலகிப்போயிருப்பார்கள்.  மாற்று தேடியிருப்பார்கள்.
அப்போது, விஜயகாந்த் மூலமாக கிடைக்கும் வாக்குகளும், இந்த நான்கு கட்சிகளின் தீவிர உறுப்பினர்களின் வாக்குகளும் மட்டுமே ம.ந.கூட்டணிக்கு கிடைக்கும்.
இப்போது “தனித்து போட்டி” என்பதாக விஜயகாந்தும், “கேப்டனை  முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்களுடன் கூட்டணி” என்று பிரேமலதாவும் அறிவித்திருக்கிறார்கள்.
உடனே, “நாங்கள்தான் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்க தயாராக இருக்கிறோமே” என்று தே.மு.தி.கவுடன் கூட்டணிக்கு போக முயற்சிக்கக்கூடாது.
ஒரு வேளை அப்படி ஒரு கூட்டணி அமைந்து, தேர்தலில் சில பல தொகுதிகளை வாங்கிவிடுகிறது என்று வைத்துக்கொள்வோம்.
அப்போது கணிசமான தொகுதிகளில் வெல்லும் வேறு (திமுக அல்லது அதிமுக) கட்சியுடன் விஜயகாந்த் கூட்டணி வைக்க அல்லது வெளியிலிருந்து ஆதரித்து “கிங் மேக்கராக” இருக்க தயங்க மாட்டார். அப்போதும் மக்கள் நலக்கூட்டணிக்கு தோல்விதான் கிடைக்கும்.
ஆகவே, இப்போது கூட்டணியில் இருக்கும் நான்கு கட்சிகளுடனே தேர்தலை சந்திக்க வேண்டும்.
சரி, இப்படி நடந்தால் ம.ந.கூட்டணி நான்கு கட்சிகளோடு ஆட்சியை பிடித்துவிடுமா?
நிச்சயம் நடக்காது. எத்தனை தொகுதி வெற்றி பெறும்.. அல்லது டெபாசிட் பெறும் என்பதையும் உறுதியாக கூற இயலாது.
இதற்காக மக்களை குறை சொல்லக்கூடாது. மக்கள் முட்டாள்கள் அல்ல. தேர்தல் நேரத்தில்  திடுமென அமைந்த கூட்டணியை உடனே ஆட்சிக்கட்டிலில் அமர்த்திவிடமாட்டார்கள்.  வரும் தேர்தலில் வாங்கப்போகும் ஓட்டுக்கள், வெற்றி பெறப்போகும் தொகுதிகள் பற்றி கவலைப்படாமல் இந்த நான்கு கட்சிகளும்  பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும்.
அது மட்டுமல்ல.
தேர்தல் முடிவு எப்படி இருந்தாலும் சரி.. இதே நால்வர்  அடங்கிய ம.ந.கூட்டணி  தொடர்ந்து மக்களுக்கான போராட்டத்தில் ஈடுபட வேண்டும். அடுத்து வரும் ஆட்சிக்காலத்தில்.. யார் ஆட்சி அமைத்தாலும் சரி.. இந்த நால்வர் கூட்டணி மக்களுக்காக தொடர்ந்து போராட வேண்டும்.
“இந்த நால்வர் கூட்டணி, உறுதியான கூட்டணி..” என்ற எண்ணம் மக்கள் மனதில் அப்போதுதான் பதியும்.  அடுத்து வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் கணிசமான ஓட்டுக்களைப்பெறும். எதிர்க்கட்சி அந்து பெரும் அளவுக்கு  தொகுதிகளையும் பெறக்கூடும்.
யார் கண்டது… மேற்கு வங்காளத்தில் நடந்தது போல பிற்காலத்தில் இங்கு மக்கள் நலக்கூட்டணி, கூட்டணி ஆட்சி கூட அமைக்கலாம்.
ஆனால், உடனடி பலன் கிடைக்கும் என்பதாக (தவறான) கணக்கு போட்டு, மீண்டும் விஜயகாந்தை அழைத்தாலோ தமாகாவை அழைத்தாலோ “தேர்தலுக்கு தேர்தல் கூடிப்பிரியும் கட்சிகள்தாம் இவை” என்ற எண்ணத்தையே மக்கள் மனதில் ஏற்படுத்தும்.  கட்சிக்கு அப்பாற்பட்டு இன்று ம.ந.கூட்டணிக்கு கிடைத்திருக்கும்  அபிமானிகளை இழக்கும்.
என்ன செய்யப்போகிறது ம.ந.கூட்டணி?
எப்படியாவது இந்த தேர்தலை கடந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு கண்டவர்களை கூட்டணிக்கு இழுக்க அலைபாய போகிறதா.. மக்கள் மீது நம்பிக்கை வைத்து தேர்தலுக்குப் பிறகும் நான்கு கட்சிகளும் இணைந்து மக்களுக்கா போராடப்போகிறதா?