migrant_1_20150921.jpg

ற்போது 40 லட்சம் அகதிகள் பல திசைகளிலிருந்தும் ஐரோப்பா நோக்கி பயணித்தவண்ணம் இருக்கின்றனர். எத்தனை தடைகள், சிக்கல்கள், ஆபத்துக்கள் இருந்தாலும் அவற்றையும் மீறி, சட்டப்படியோ, ஆவணங்களில்லாமலோ ஏதோ ஒரு ஐரோப்பிய நாட்டில் தஞ்சம் புகுவதே தங்கள் எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதாகும் என அவர்கள் நினைக்கின்றனர்.

சிரியா, ஆஃப்கானிஸ்தான், சோமாலியா, லிபியா, எரீட்ரியா, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, தெற்கு சூடான், காங்கோ நாட்டு மக்கள் மற்றும் மியான்மாரில் வதைபட்டுக்கொண்டிருக்கும் ரோஹிங்கயா முஸ்லீம்கள் இப்படி நீள்கிறது அகதிகள் பட்டியல்.

அண்மையில் துருக்கி கடற்கரையோரம் ஒதுங்கிய மூன்று வயது சிறுவன் அயன் குர்டியின் உயிரற்ற உடல் ஒட்டுமொத்த உலகின் மனசாட்சியை உலுக்கிவிட்டது.

ஆனால் கடந்த சில மாதங்களாகவே இப் பிரச்சினை உக்கிரமாகிக் கொண்டே வந்திருக்கிறது. கடந்த ஆகஸ்டில் ஆஸ்திரியத் தலைநகர் வியன்னா அருகே  சாலையோரம் சில நாட்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய ட்ரக்கை உடைத்துத் திறந்தபோது, அழுகிப்போன உடல்கள் வெளியே வந்து விழுந்தன, 71 உடல்கள். மத்தியதரைக் கடல்பகுதியில் மட்டும் ஐரோப்பா செல்ல முயலும் ஆப்பிரிக்க அகதிகள் 2,500 பேர் மரித்திருக்கின்றனர்.

இன்னொன்றையும் நாம் இங்கே நோக்கவேண்டும். பிழைப்புதேடி வெளிநாடுகளில் குடியேறுவோர் ஏறத்தாழ 25 கோடி பேர். அவர்கள் தங்கள் சொந்தங்களுக்கு அனுப்பி வரும் தொகை 436 பில்லியன் டாலரைத் தாண்டும். (கணக்குத் தெரிந்தவர்கள் டாலருக்கு இவ்வளவு என்று தெரிந்து பெருக்கிப் பார்த்துக்கொள்ளுங்கள்!)

இத் தொகை வளம் பெற்ற நாடுகளின் வளர்ந்துவரும் நாடுகளுக்கு அளித்துவரும் உதவியை விட கூடுதலாகும். அந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்தது வெளிநாடுகளில் பணிசெய்வோரின் உழைப்பு.

அது மட்டுமல்ல ஜெர்மனி போன்ற நாடுகளில்,  மக்கள் வாழுங் காலம் கூடக் கூட, முதியோரின் எண்ணிக்கை அதிகரிக்க வேலை செய்வதற்கு ஆட்கள் பஞ்சம். அப் பஞ்சத்தை சமாளிக்க உதவுவதே இப்படி பிழைப்பு தேடி வருவோர்தான்.

அந்தந்த நாட்டு கலாச்சாரம் பாழ்பட்டுவிடுமே என்ற கவலை இருக்கிறது, ஐசிஸ் அல் கொய்தா போன்றவற்றின் கொடூரங்களும் முஸ்லீம் அகதிகளுக்கெதிரான சூழலை உருவாக்குகிறது. ஆனால் மாறி வரும் உலகச் சூழலில் பல்வகைப்பட்ட மக்களுடனும், வாழ்முறைகளுடனும் இயைந்து வாழப் பழகிக்கொள்ளவேண்டும் என்கின்றனர் வல்லுநர்கள்.

அகதிகள் பிரச்சினை குறித்து அமெரிக்காவின் பிரின்ஸ்டவுன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பிரபல பேராசிரியர் பீட்டர் சிங்கர்,  அவுட்லுக் ஆங்கில வார இதழுக்கு அளித்த பேட்டியில் சிரியாவின் உள்நாட்டு யுத்தத்தின் விளைவாக மட்டும் தற்போதைய பிரச்சினை உருவாகவில்லை. ஆப்பிரிக்காவிலிருந்தும் நல் வாழ்வு தேடி பலர் வருகின்றனர் என்று சுட்டிக்காட்டுகிறார்.

”அமெரிக்கா மேற்காசியப் பிராந்தியத்தில் தலையிட்டதன் பின்னணியில் உருவான குளறுபடிகள் இந்த அகதிப் பயணங்களுக்கு ஒரு முக்கிய காரணம் என்றாலும், சவூதி அரேபியா, வளைகுடா நாடுகள், இவற்றில் நிலவும்  அடக்குமுறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் சாதாரண மக்களை விரட்டுகின்றன என்பதை மறக்கலாகாது.

”மேலும் ஐரோப்பா ஒட்டுமொத்தமாக அவர்களைப் புறக்கணிக்கிறது என்று கூறுவதும் தவறு. இன்னும் சொல்லப்போனால் ஜெர்மனி மிக அதிக எண்ணிக்கையில் அகதிகளுக்குப் புகலிடம் கொடுப்பதனால் அந்நாட்டில் அகதிகளுக்கெதிராக பிரச்சாரம் செய்யும் வலதுசாரி சக்திகள் வலுப்பெறக்கூடும்.

”அதே நேரம் தற்போது துருக்கி, ஜோர்டன் மற்றும் லெபனான் நாடுகளில்தான் அதிக எண்ணிக்கையில் தஞ்சம் புகுகின்றனர். இந்நிலை மாறவேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்கமுடியாது.” என்றும் பேராசியர் சிங்கர் வலியுறுத்துகிறார்.

–  த.நா.கோபாலன்