1
 
லுவலகத்தின் வாசசலில் சர்ரென்று வந்து நின்றது நியூஸ்பாண்ட் வந்த கார். அவரை வாழ்த்தி வரவேற்பதா, வசைபாடி வரவேற்பதா என்ற குழப்பத்தில் இருந்தோம் நாம்.
காரைவிட்டு இறங்கிய நியூஸ்பாண்ட், சட்டென நமது மன ஓட்டத்தை முகத்தைப் பார்த்தே கணித்துவிட்டார்.  “என்ன பாஸ்..! என்னை திட்டுவதா வாழ்த்துவதா என்ற குழப்பமா?” என்றார்.
“அட.. சரியாக கண்டுபிடித்துவிட்டீரே..”
“அது இருக்கட்டும். விசயத்துக்கு வாரும்…!”
“ஆளும் தரப்பில் உள்ள ஐவர் குழு, மேலிடத்து ரெய்டுக்கு பயந்து தனி ஆவர்த்தனம் செய்யப்போவதாக சொன்னீர். அதில் ரெய்டு நடந்துவிட்டதாக தகவல்கள் வந்துவிட்டன.  இதை முன்கூட்டியே சொன்னதற்காக உம்மை பாராட்டுவதா..? நீர் சொன்னது போல அவர்கள் தனி ஆவர்த்தனம் செய்யாமல், அதே கட்சியில் தொடர்கிறார்களே..  ஆகவே  உம்மை  வசைபாடுவதா என்ற குழப்பம்தான்!”
“ஓ… அதுதானா விசயம்? ஐவர் அணியினர் தனி ஆவர்த்தனம் செய்வதற்குத்தான் திட்டமிட்டார்கள்.  அதற்காக கூடிக்கூடி பேசினார்கள்.  இது மேலிடத்துக்கு தெரிந்துவிட்டது. ஆகவே அவர்களுக்கு மிக காட்டமான தகவல் சென்றது. அதாவது தனியாக செயல்பட முயன்றால் விளைவு கடுமையாக இருக்கும் என்பதுதான் செய்தியின் சாரம். மேலிடத்தின் கோபத்துக்கு ஆளானவர்கள் அனுபவித்த கடுமையான விளைவுகளை ஐவர் அணியினரும் அறிவார்கள் அல்லவா?   ஆகவேதான் பயந்துகொண்டு கட்சியிலேயே நீடிப்பது என்று முடிவெடுத்துவிட்டார்கள்!”
“ஓ…!”
“இதற்கிடையேதான், நான் ஏற்கெனவே சொன்னது போல ரெய்ட் நடந்திருக்கிறது. ஐவரிடமிருந்தும் சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாயை மேலிடம் கைப்பற்றியதாக பல இடங்களில் இருந்தும் தகவல் பரவி வருகிறது.!”
“ஆமாம்.. நாமும் கேள்விப்பட்டோமே..!”
“ஆம். ! மாநிலத்தின் சட்டசபை தொகுதிகளை ஐந்து பாகங்களாக பிரித்து இந்த ஐவரைத்தான் பொறுப்பாளர் ஆக்கியிருக்கிறார்கள் என்ற  தகவலை கேள்விப்பட்டீரா..”
“பட்டோம்… மீண்டும் அந்த ஐவருக்கு பதவி உயர்வா..”
“பதவியாவது, உயர்வாவது? அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் அனைத்துக்கும் இவர்கள்தான் செலவு செய்ய வேண்டும் என்பது மேலிடத்தின் உத்தரவு!”
“அடக்கடவுளே!”
“இப்படித்தான் ஐவரும் புலம்புகிறார்கள். ரெய்ட் செய்து பணத்தையும் பிடுங்கி விட்டார்கள். அதோடு தேர்தல் செலவையும் நம் தலையில் கட்டுகிறார்களே..  என்று!”
“ஓ..”
“ஆமாம்..! இதனால் ஒரு வார இதழே நின்று போய்விட்டது தெரியுமா?
“புரியவில்லையே..!”
“ஐவரில் அமைதியானவர் இருக்கிறாரே…  முன்னாள் தலைமை மாண்புமிகு…”
“ஆமாம்..”
“அவர், ஒரு வார இதழை சில மாதங்களுக்கு முன் துவக்கினார். அதாவது வேறு ஒருவர் பெயரில்..!”
“ஓ…”
“அந்த வார இதழ் பரவலாக மார்க்கெட்டில் இடம் பிடித்தது. ஆனால் இந்த ரெய்டு, தேர்தல் செலவு ஆகியவற்றுக்கு பிறகு, வார இதழை நிறுத்திவிட்டார்!”
“அடப்பாவமே..!”
“இதில் காமெடி என்னவென்றால், அதில் பணி புரிபவர்களுக்குகூட உண்மையான ஓனர் யார் என்பது தெரியவில்லை. நின்று போன பிறகுதான் விசயம் தெரிந்திருக்கிறது!”
“அது சரி..!”
“ஆனால் இன்னொரு மாண்புமிகு, சத்தமில்லாமல் ஒரு இதழை நடத்தி வருகிறார்.. !”
“யார்.. எந்த இதழ் அது?”
“பரபரப்பான செய்திகளை வெளியிடும் அந்த இதழில் மின்துறை மற்றும் மது விவகாரம் குறித்து எந்த வித செய்தியும் வரவே வராது. இதிலிருந்தே அது எந்த இதழ் எந்த மாண்புமிகு என்பதை எல்லாம் கண்டுபிடித்துக்கொள்ளலாம்!”

  • நம் பதிலை எதிர்பாராமல் கிளம்பிவிட்டார் நியூஸ்பாண்ட்.