ருத்ரமாதேவி  யார்?

அனுஷ்கா நடித்து பெரும் எதிர்பார்ப்போடு வெளியான ருத்ரமாதேவி திரைப்படம் தற்போது தமிழகம், ஆந்திரா, தெலுங்கானாவில் ஓடிக்கொண்டிருக்கிறது.  இந்த ருத்ரமாதேவி யார்?

சொல்கிறார் சமூக ஆர்வலர் கே.எஸ். ராதாகிருஷ்ணன்.

 

ru

 

ருத்ரமாதேவியின் வரலாறு திரைப்படமாக வரப்போகிறது என்ற பின்தான், “ யார் இந்த ருத்ரமாதேவி”  என்று பலர் அறிய முற்பட்டுள்ளனர்.

அரியபெரிய தியாக சீலர்களை சினிமா உலகம் சொன்னபிறகுதான் அறிய முற்படுவது வேதனை மட்டுமில்லாமல் அது ஒரு களங்கமும் கூட.

ருத்ரமாதேவி என்றால் அந்த திரைப்படத்தில் நடிக்கும் கதாநாயகி பற்றிதான் மக்களுக்குச் சிந்தனை ஓடுகின்றதே ஒழிய, ருத்திரம்மா தேவி யார் என்ற வரலாற்றை உண்மையாக நேர்மையாக நினைத்துப்பார்க்க வேண்டும்.

தக்காணப் பீடபுமியில் பெண் வீராங்கனையாக வாரங்கல்லைத் தலைமையாகக் கொண்ட மாபெரும் போராளி மட்டுமில்லாமல் மக்கள் நலனில் அக்கறைமிக்க ஆட்சியும் நடத்தியவர் தான் ருத்ரமாதேவி. சினிமா உலகம் சொல்லியபிறகுதான் நம்முடைய முன்னோர்களுடைய பெருமைகளை அறியவேண்டி இருக்கின்றது என்ன செய்ய?

கி.பி. 1259 முதல் 1295 வரை தக்காணத்தில் வாரங்கல்லை ஆண்ட காகதீய அரசிதான் ருத்ரமாதேவி .வாரங்கல்லை ஆண்ட கணபதிதேவரின் மகளான இவர், தம் தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து அரசியாக முடிசூட்டிக் கொண்டார். கிழக்குச் சாளுக்கியத்தில் நைதவோலுவின் இளவரசனான வீரபத்திரன் என்பவரை மணம் செய்துகொண்டார்.

இவரது தொடக்கக்கால ஆட்சியில் சிற்றரசர்கள் பலர் தொல்லை கொடுத்து வந்தனர். அரசிக்கு உறுதுணையாக இருந்த அம்பதேவர் உதவியுடன் அத்தொல்லைகளை அடக்கினார். யாதவத் தலைவர் மகாதேவர் இவரை எதிர்த்துப் போர்செய்து தோல்வி அடைந்தார். இப்போர்களில் ருத்திரமாதேவியின் பேரன் பிரதாபருத்திரன் வெற்றிவாகை சூடினான். ருத்திரமாதேவி கி.பி. 1280 – ஆம் ஆண்டு பிரதாபருத்திர தேவரை இளவரசராக நியமித்தார்.

எட்டாண்டுகளுக்கு பின் அம்பதேவர் ஒய்சாளர், யாதவர் ஆகியோரைத் துணைக்கு சேர்த்துக் கொண்டு, ருத்திரமாதேவிக்கு எதிராகப் போர் தொடுத்தார். 1291 – இல் பிரதாபருத்திரர் அதனை அடக்கி வெற்றிவாகை சூடினார். 1295 – இல் ருத்திரமாதேவி காலமானபோது பிரதாபருத்திரர் ‘இரண்டாம் பிரதாபருத்திரர்’ என்ற பெயருடன் முடிசூட்டிக் கொண்டார்.

ksr

கே.எஸ்.இராதாகிருஷ்ணன் https://www.facebook.com/ksradhakrish?fref=photo