ராகுல்காந்திக்கு எதிராக மேனகா பிரச்சாரம்.. பா.ஜ.க.அதிரடி திட்டம்

Must read

ந்திராகாந்தியின் மகன் சஞ்சய்காந்தி விமான விபத்தில் இறந்த பின் அந்த குடும்பம் சிதறுண்டு போனது. இந்திராகாந்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால்- சஞ்சய் மனைவி மேனகா, தனது மகன் வருணுடன் –மாமியார் வீட்டை விட்டு வெளியேறினார்.

இந்திராவும், ராஜீவும் இறந்த பின்னும் காட்சிகள் மாறவில்லை. மேனகா ஒரு பாதையிலும், ராஜீவ் மனைவி சோனியா வேறு பாதையிலும் அரசியலில் பயணிக்கின்றனர்.

மேனகா  தன் மகனோடு பா.ஜ.கவில் ஐக்கியமாகி தனி ‘ரூட்’டில் சென்று கொண்டிருக்கிறார். எனினும் இரு குடும்பங்களும் அரசியல் செய்வது உத்தரபிரதேச மாநிலத்தில் தான்.

அங்குள்ள ரேபரேலி சோனியாவுக்கும், அமேதி ராகுலுக்கும் சொந்தமாகி விட- சுல்தான்பூர் மற்றும் பிலிபித் தொகுதிகள் மேனகா குடும்பத்து சொத்தாகி விட்டது.

நான்கு காந்திகள் (சோனியா, ராகுல்,மேனகா, வருண்) அந்த மாநிலத்தில் ஒரே சமயத்தில் வேறு வேறு கட்சிகள் சார்பில் போட்டியிட்டாலும்- ஒருவருக்கு எதிராக மற்றவர் பிரச்சாரம் செய்ததில்லை.

ஆனால் இந்த முறை தேர்தல் களம் அப்படி இருக்கப்போவதில்லை.

கடந்த முறை பிலிபித் தொகுதியில் வென்ற மேனகா  இப்போது  சுல்தான்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். சுல்தான்பூரில் வென்ற வருண் தாயாரின்- பிலிபித் தொகுதியில் நிற்கிறார்.

நேற்று சுல்தான்பூரில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார்- மேனகா. சஞ்சய்காந்தி முன்னர் அமேதியில் போட்டியிட்டபோது- அதன் ஒரு பகுதியாக சுல்தான்பூர் இருந்தது.

அப்போது – 100 நாள் குழந்தையாக இருந்த வருணுடன் சுல்தான்பூர் வந்ததை மக்களிடம் நினைவு கூர்ந்தார்- மேனகா.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மேனகா .’’ கட்சி மேலிடம் கட்டளையிட்டால் அமேதியில் பா.ஜ.க.வேட்பாளர் ஸ்மிருதி ரானிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன்’’ என்று அறிவித்தார்.

அமேதியில் நிற்கும் ராகுல்காந்தியை – இந்த முறை வீழ்த்துவது என்று சங்கற்பம் பூண்டுள்ள அமீத்ஷா- அமேதியில் பிரச்சாரம் செய்ய – மேனகாவை அனுப்புவார் என்று தெரிகிறது.

இதனை முன் கூட்டியே மேனகாவிடம் கூறியதையடுத்தே –அவர் அமேதியில் பிரச்சாரம் செய்யப்போவதை கோடிட்டு காட்டியுள்ளார்.

— பாப்பாங்குளம் பாரதி

More articles

Latest article