திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருகே பெண்ணை கொலை செய்து கொள்ளையடித்து சென்ற குற்றவாளிகளை 3 நாட்களில் போலீசார் பிடித்துள்ளனர். இது பொதுமக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

திருவண்ணாமலை அருகே உள்ள கண்ணமங்கலம். இங்கு சம்பவத்தன்று  ராணுவ அதிகாரியின் மனைவியைக் கொலை செய்து, நகைகளை கொள்ளையடித்து சென்றவர்களை போலீஸார் தேடி வந்தனர்.

கண்ணமங்கலம் அடுத்த ராமச்சந்திராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவர், அசாம் மாநிலத்தில் ராணுவ அதிகாரியாக உள்ளார். இவரது மனைவி காந்தரூபி. இவர்களுக்கு  சக்திவேல் என்ற மகன் உள்ளார். . இவர்கள், அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

சம்பவத்தன்று சக்திவேல் டியூசனுக்கு சென்றுவிட்டு, இரவு 10 மணியளவில் வீடு திரும்பி உள்ளார்.

அப்போது, வீட்டு சமையலறையில் ரத்தக் காயங்களுடன் தாயார் காந்தரூபி இறந்து கிடந்ததைக் கண்டு கதறி அழுதார். உடனடியாக இதுகுறித்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கொடுத்தார்.

போலீசார் –             கொலை செய்யப்பட்ட காந்தரூபி

இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார்,  உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேலூர்  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து அதிரடி விசாரணையில் இறங்கினர். விசாரணையில் காந்தரூபியை கொலை செய்தவர்கள், அவர்கள் வீட்டில் இருந்த 70 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பதும், கைரேகைகள் பதியாதவாறு மிளகாய் பொடி தூவியும் என்றுள்ளது தெரிய வந்தது.

இதையடுத்து தடயவியல் துறையினர் வரவழைக்கப்பட்டு, தடயங்களை சேகரித்துள்ளனர். அதைத்தொடர்ந்து சந்தேகத்தின்பேரில் பலரிடம் விசாரணை நடைபெற்றது.

இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் அவர்கள் தலைமையில் போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். இதன் காரணமாக இந்த கொடூர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 கொலையாளிகளை கைது செய்தனர் போலீசார்.

 

சம்பவம் நடந்த 3 நாளில் துடிப்புடன் செயல்பட்ட கண்ணமங்கலம் காவல்துறைக்கு பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.