முத்துகுமாரசாமி - அக்ரி கிருஷ்ணசாமி
முத்துகுமாரசாமி – அக்ரி கிருஷ்ணசாமி

வேளாண்மைத்துறை அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில், முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது பதிவு செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று உத்தரவிட்டுள்ளது.
நெல்லை வேளாண்மைத்துறையில் உதவி பொறியாளராக பணியாற்றிய முத்துக்குமாரசாமி, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 20ம் தேதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.  ஒட்டுநர் பதவிக்கான நியமனத்தில் பணம் கேட்டு வேளாண் தலைமைப் பொறியாளர் செந்தில் நெருக்கடி கொடுத்ததால் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.  பிறகு  இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இவ்வழக்கில், கடந்த ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டார். ஜாமீன் கோரி அக்ரி கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில் இந்த வழக்கில் தன்னை தவறாக இணைத்துள்ளதால் முதல் தகவல் அறிக்கையினை ரத்து செய்ய வேண்டும் என்று அக்ரி கிருஷ்ணமூர்த்தி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ரவி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்ற பத்திரிக்கையை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதனிடையே, முத்துக்குமாரசுவாமி தற்கொலை வழக்கில் இருந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.