மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்கு செல்ல முடியாது: தலைமைதேர்தல் ஆணையர் சுனீல் ஆரோரா

Must read

டில்லி:

மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்கு செல்ல முடியாது; வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு வர மாட்டோம், அதற்கான திட்டம் ஏதும் இல்லை  என்று  தலைமைதேர்தல் ஆணையர் சுனீல் ஆரோரா உறுதிபட தெரிவித்து உள்ளார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்தே, பாஜக ஆட்சிக்கு வந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.  இன்னும் ஓரிரு மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், தேர்தல் வாக்குப்பதிவு பழைய முறையான வாக்குச் சீட்டு முறையிலேயே நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் உள்பட பல எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி வருகின்றன.

சமீபத்தில், லண்டனில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி ஒன்றில்,  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தயாரிக்கும்  குழுவில் இருந்த அமெரிக்க வாழ் இந்தியரான  சையத் சுஜா என்பவர்,  இந்திய வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய  முடியும் என்பதை  செயல் விளக்கம் செய்து காட்டினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அதைத்தொடர்ந்து, நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்யப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சைக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், இன்று டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய தலைமை தேர்தல் ஆணையர், சுனில் ஆரோரா, ஓட்டுப்பதிவுக்கு மின்னணு எந்திரங்களே தொடர்ந்து பயன் படுத்தப்படும். அதில் எந்த வித மாற்றமும் இல்லை. வாக்குச் சீட்டு முறையை மீண்டும் கொண்டு வர மாட்டோம் என்று தெரிவித்தார்.

இந்திய வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய  முடியும் என்பதை லண்டனில்  செயல் விளக்கம் செய்து காட்டிய சையத் சுஜா 

பழைய வாக்குச் சீட்டு முறையை மீண்டும் கொண்டு வருவதில் நிறைய பிரச்சினைகள் இருப்பதாக தெரிவித்தவர்,  அதை அரசியல் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும்,  ஓட்டுப்பதிவு தொடர்பாக புதிய ஆலோசனைகளை அரசியல் கட்சிகள் தெரிவிக்கலாம். அதுபற்றி தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்யும். ஆனால் பழைய முறைக்கு செல்ல இயலாது.

இவ்வாறு தலைமை தேர்தல் கூறினார்.

More articles

Latest article