manorama

 

சென்னை: “ஆச்சி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் நடிகை மனோரமா, உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 78. உடல்நலக்குறைவு காரணமாக, சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மனோரமா சனிக்கிழமை இரவு 11 மணியளவில் இயற்கை எய்தினார்.

சாதனைப் பெண்

ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றவர்: . அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோருடன் நாடகங்களிலும், எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர். ஜெயலலிதா ஆகியோருடன் திரைப்படத்திலும் நடித்து ஐந்து முதல்வர்களுடன் நடித்தவர் என்ற பெருமையைப் பெற்றவர். பத்மஸ்ரீ, தமிழ்நாடு அரசின் கலைமாமணி, தேசிய திரைப்பட விருது போன்ற பல விருதுகளை பெற்றவர்.

இளமையில் வறுமை

தமிழ்த் திரையுலகின் ஆகச் சிறந்த நகை்சுவையாக அறியப்பட்ட மனோரமா. மூன்று தலைமுறை மக்களை தனது நடிப்பால் சிரிக்க வைத்து மகிழ்ச்சிப்டுத்தியவர். ஆனால் அவரது வாழ்க்கை மிகப் பெரிய சவாலாகவே இருந்தது.

தஞ்சை மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட இன்றைய திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடியில் பிறந்தவர் மனோரமா. இவரது பெற்றோர் காசி ‘கிளாக்’ உடையார் மற்றும் ராமாமிர்தம்.

இளமையிலேயே வறுமையை அனுபவித்தவர் மனோரமா. அதன் காரணமாக பிழைப்பு தேடி, அவரது குடும்பம் காரைக்குடி அருகே பள்ளத்தூர் என்ற ஊருக்கு குடி பெயர்ந்தது.

அங்கும் அவரது தந்தைக்கு சரியான தொழில் அமையாத நிலையில் ஆறாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு, நாடகங்களில் நடிக்கத் துவங்கினார். அப்போது அவருக்கு வயது 12 தான்.

“பள்ளத்தூர் பாப்பா” என அழைக்கப்பட்ட அவருக்கு [7] நாடக இயக்குனர் திருவேங்கடம், ஆர்மோனியக் கலைஞர் தியாகராஜன் ஆகியோர் இவருக்கு “மனோரமா” எனப் பெயர் சூட்டினர்.

நின்றது சினிமா

“வைரம் நாடக சபா” நாடகங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். திரைப்படத்தில் நடிக்கும் அவரது முயற்சி அவ்வளவு எளிதில் நிறைவேறவில்லை. அப்போது எஸ்.எஸ். ராஜேந்திரனின் நாடகங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவரது திறமையை உணர்ந்த ராஜேந்திரன், தானும் தேவிகாவும் நடிக்கும் படத்தில் மனோரமாவுக்கு வாய்ப்பு அளித்தார்.

மிகுந்த ஆர்வத்துடன் அந்த படத்தில் நடித்தார் மனோரமா. ஆனால் அந்த படம், நிதி பிரச்சினையினால் பாதியிலேயே நின்றுவிட்டது.

தோற்ற காதல்

இதற்கிடையை அவரது மனதில் காதல் பூத்தது. தனது நாடகக் கம்பனியைச் சேர்ந்த எஸ். எம். இராமநாதன் என்பவரை விரும்பினார். இருமனமும் இணைய… 1964ம் ஆண்டு, திருமணம் நடந்தது. ஆனால் இரண்டே வருடத்தில் அந்த காதல் தோற்றது. ஆம்… கையில் குழந்தையைக் கொடுத்துவிட்டு பிரிந்துவிட்டார் இராமநாதன்.

கையில் குழந்தை. எதிர்காலம் என்னவென்று தெரியாத நிலை. ஆனாலும் வைராக்கியத்துடன் குழந்தையோடு சென்னையில் குடியேறினார் மனோரமா.

நாடக வாய்ப்புகளோடு சினிமா வாய்ப்புகளும் வந்தன. ஆரம்பத்தில் கதாநாயகி வாய்ப்பு. ஆனால் போகப்போக கதாநாயகியின் தோழி, நகைச்சுவை பாத்திரம் என்றானது.

எதிர் பார்த்த வாழ்க்கையும் சரியாக அமையவில்லை, திரைப்படங்களிலும் நகைச்சுவை பாத்திரம் என்ராகிவிட்டது. ஆனாலும் வாழ்க்கையை சவாலாகவே எதிர்கொண்டார், அந்த இரும்பு மனுஷி,.

நகைச்சுவை பாத்திரங்களில் மனம் ஒன்றி நடிக்க ஆரம்ம்பித்தார். ஒரு கட்டத்தில் நகைச்சுவை பாத்திரம் என்றாலே மனோரமா என்றாகிவிட்டது.

மகன் வருத்தம்

திரைப்படத்தில் ஒருவழியாக தனி இடத்தைப் பிடித்துவிட்டார் மனோரமா. ஆனால் குடும்ப வாழ்க்கையில் சோகம் தொடர்ந்தது.

தன் ஒரே மகன் பூபதி மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார் மனோரமா. உரிய வயதில் அவருக்கு திருமணமும் செய்து வைத்தார். ஆனால் அவரை போதை பழக்கம் ஆட்கொண்டது. அவரை அந்த பழக்கத்தில் இருந்து மீட்க பெரு முயற்சி எடுத்தார் மனோரமா.

மருமகள், மற்றும் பேரக் குழந்தைகளுக்கு பாதுகாப்பாக வாழ ஆரம்பித்தார் மனோரமா.

அவதூறு

1996ம் ஆண்டு தேர்தலின் மோது, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஆட்சி மீது மக்களுக்கு மிகுந்த அதிருப்தி நிலவியது. அப்போது தி.மு.க. மற்றும் த.மா.கா கூட்டணியை நடிகர் ரஜினிகாந்த் ஆதரித்து பேசினார்.

இந்த நிலைியல் தனது நெடுநால் தோழி ஜெயலலிதா என்ற முறையில், அவரது அ.தி.மு.க. சார்பாக தமிழகம் முழுதும் அக் கட்சிக்காக பிரச்சாரம் செய்தார் மனோரமா. அப்போது நடிகர் ரஜினிகாந்த்தை வரம்பு மீறி பேசினார். இதனால் மக்களின் அதிருப்திக்கு ஆளானார். அந்த சமயத்தில் பலரது ஏச்சுக்கு ஆளானதோடு, திரைப்பட வாய்ப்புகள் குறைந்தன.

மனோரமாவின் திரை வாழ்க்கையில் சோதனையான காலகட்டம் அது. அதிலிந்தும் மீண்டு வந்து, மீண்டும் பரபரப்பாக நடிக்க ஆரம்பித்தார்.

மனநோய் வதந்தி

சுமார் ஐந்து ஆண்டுகளாகவே உடல் நலம் குன்றியிருந்தார் மனோரமா. அதனால் படங்களில் நடிப்பதை தவிர்த்துவந்தார். இந்த நிலையில் கடந்த 2010ம் ஆண்டு, திருப்பதி சென்றபோது அங்கு கோயில் ஊழியர்களுடன் அவருக்கு பிரச்சினை ஏற்பட்டதாகவும், மனோரமாவுக்கு மனநிலை சரியில்லை என்றும் செய்திகள் பரவின.

இது அவரது மனதை மிகவும் புண்படுத்தியது. “ என் மன நிலையா சரியில்லை.. நான் நன்றாகத்தான் இருக்கிறேன்” என்று ஊடகங்களுக்கு

என்று ஊடகங்களுக்கு வருத்தத்தோடு பேட்டி அளித்தார் மனோரமா. ஆனாலும் அவரது மன உறுதி குறையவில்லை.

மறைவு

அதன் பிறகு உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சேர்க்கப்படுவதும், பிறகு வீடு திரும்புவதுமாக இருந்தார். இந்த நிலையில்தான் நேற்று இயற்கையடைந்தார் மனோரமா.

பாடம்

அவரது நடிப்பைப் பார்த்து சிரிக்கும் நாம், அவரது வாழ்க்கையைப் பார்த்து சிந்திக்க வேண்டும். அப்படி ஒரு போராட்ட வாழ்க்கையை நடத்தி மறைந்திருக்கிறார் மனோரமா. தன்னம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர்கொண்ட அவர் நமக்கு ஒரு பாடம்.

–  சந்தானநாதன்