vv

110 போல ஜெயலலிதாவுக்கென்று தனி குணங்கள் சில உண்டு. அவற்றில் முக்கியமானது அவதூறு வழக்கு. ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்றாலே அவதூறு வழக்குகள் தூள் பறக்கும்.  தற்போதைய ஆட்சி காலத்திலும் பத்திரிகைகள், எதிர்க்கட்சி தலைவர்கள் என்று நூற்றுக்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகளை  தொடுத்திருக்கிறது அ.தி.மு.க.அரசு.

இந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதா மீதே அவதூறு வழக்கு தொடுத்திருக்கிறார்  காங்கிரஸ் எம்.எல்.ஏவும், தமிழக மகிளா காங்கிரஸ் தலைவியுமான விஜயதரணி.

“அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ நாளேடான “நமது எம்.ஜி.ஆர்.” நாளிதழில் என்னைப்பற்றி அவதூறாக செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். அதற்கு ஜெயலலிதா மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த மன்னிப்பை அதே இதழில் பிரசுரிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது அவதூறு வழக்கு தொடருவேன்” என்று கூறியிருக்கிறார் விஜயதரணி.

இந்த நிலையில் அவரை patrikai.com இதழுக்காக சந்தித்தோம்:

நமது எம்.ஜி.ஆர். நாளிதழில் வெளியான குறிப்பிட்ட அந்த செய்தியைப் பார்க்கும்போது உங்களுக்கு என்ன தோன்றியது..?

இவ்வளவு கீழ்த்தரமாக ஒருவரால் யோசிக்க முடியுமா என்று தோன்றியது. ஜெயலலிதாவும் ஒரு பெண். அதுவும் எழுபது வயதை நெருங்கம் முதிய பெண்மணி. அவர் இவ்வளவு மோசமான சிந்தனை உடையவராக இருப்பாரா என்று அதிர்ச்சி அடைந்தேன்.  தன்னை யாராவது அவதூறாக பேசியதாக கருதினால் உடனே, “ஒரு பெண் என்றும் பாராமல்..” என்று பிலாக்கானம் பாடுகிறாரே.. அவரது வயதில் கிட்டதட்ட பாதியில் இருக்கும் என்னை இந்த அவதூறு வார்த்தைகள் எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை அவர் யோசித்தாரா?

அதை ஜெயலலிதாதான் எழுதினார் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பெயரில் எந்த எழுத்தாளரும் இல்லை. ஆகவே ஜெயலலிதாதான் புனைப்பெயரில் எழுதியிருக்க வேண்டும்.

இப்போது உங்கள் எதிர்பார்ப்பு என்ன?

அந்த பொய்யான அவதூறான கட்டுரைக்காக என்னிடம் ஜெயலலிதா மன்னிப்பு கேட்க வேண்டும். அதை அதே நாளிதழில் பிரசுரிக்க வேண்டும்.

 ஜெயலலிதாவின் இதுவரையிலான செயல்பாடுகளைப் பார்க்கும்போது, அவர் மன்னிப்பு கேட்பார் என்று நினைக்கிறீர்களா?

 இல்லாவிட்டால் அவதூறு வழக்கை எதிர்கொள்ள வேண்டும். சிவில் கேஸ் என்றால் நட்ட ஈடு அளிக்க வேண்டியிருக்கும். கிரிமினல் கேஸ் என்றால் இரண்டு வருடங்களுக்குக் குறையாமல் சிறை தண்டனை உண்டு. இதில் என்ன முடிவு என்பதை அவரே தீர்மானித்துக்கொள்ளட்டும்.

அவதூறு வழக்குகள் பல தோல்வியில்தான் முடிந்திருக்கின்றன..

இந்த வழக்கு அப்படி இருக்காது. நான் ஒரு வழக்குரைஞர். தவிர, என்னைவிட சீனியர்கள் பலரிடம், அந்த பத்திரிகை செய்தியை காண்பித்தேன். “நான் சம்பந்தப்பட்ட விசயம் என்பதால், எனக்கு அப்படித் தோன்றுகிறதா… அல்லது இதில் அவதூறு இருப்பதாக நீங்களும் நினைக்கிறீர்களா.. “ என்று கேட்டேன். அதற்கு “நிச்சயமாக இது அவதூறுதான்…” என்றார்கள். ஆகவே இந்த வழக்கில் நான் வெல்வேன். அதாவது நியாயம் வெல்லும்.

உங்கள் மீது ஜெயலலிதாவுக்கு அப்படி என்ன கோபம்?

அதுதான் தெரியவில்லை.   சமீபத்தில்  பொது  வேலை  நிறுத்த  போராட்டத்தின்  ஒரு  பகுதியாக  சட்டப்பேரவை நுழை வாயிலில், எதிர்க்கட்சிகள் மறியலில் ஈடுபட்டோம். அப்போது,  என்  மீது  தாக்குதல் நடந்தது. ஆனால், அதன் பிறகு சட்டசபையில் எதுவுமே நடக்காதது போல் முதலமைச்சர் அறிக்கையை படித்தார்.  இதை எதிர்த்து நான் கேட்ட போது, எனக்கு பேச வாய்ப்பு அளிக்கப்பட்டவில்லை.

அதுமட்டுமல்ல  அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் என்னை கேலியும், கிண்டலுமாக பேசினார்கள். என்னை  அடிக்கவருவது போல பாய்ந்தார்கள். ஆபாசமான வார்த்தைகளால் என்னை திட்டினார்கள். அவர்களை தூண்டிவிட்டதே ஜெயலலிதாதான் என்று ஏற்கெனவே நான் சொல்லியிருக்கிறேன். அந்த அளவுக்கு அவருக்கு என் மீது ஆத்திரம் இருக்கிறது.

இந்த அளவுக்கு உங்கள் மீது ஆத்திரம் இருக்கிறது என்றால், அதற்கு ஏதேனும் காரணம் இருக்க வேண்டும் அல்லவா?

(யோசித்து)  எந்த ஒரு கட்சியிலும் யாரும் மக்கள் செல்வாக்கு பெற்று வளர்ந்துவிடக்கூடாது என்று நினைக்கிறார் ஜெயலலிதா. அப்படி யாராவது வளர்ந்தால் அவர்கள் மீது அபாண்டமாக பழி சுமத்தி அரசியலை விட்டே ஒழித்துவிட நினைக்கிறார். இப்போது நான் தமிழகம் முழுதும் பயணித்து மக்களை சந்திக்கிறேன். சட்டசபையில் ஆக்டிவாக செயல்படுகிறேன். தொலைக்காட்சி விவாதங்களில் பங்குபெறுகிறேன்.. இதையெல்லாம் பார்த்துத்தான் என் மீது அவருக்கு ஆத்திரம் வந்திருக்க வேண்டும்.

உங்கள் கட்சியின் தமிழக தலைவர் ஈ..வி.கே.எஸ். இளங்கோவன், ஜெயலலிதா – மோடி சந்திப்பை கிண்டலாக விமர்சித்ததாக புகார் எழுந்ததே. அப்போது நீங்கள் இளங்கோவனை ஆதரித்து பேசியதால், ஜெயலலிதாவுக்கு  உங்கள் மீது கோபம் ஏற்பட்டிருக்குமோ?

அப்போது தான் பேசியது பற்றி தெளிவாக விளக்கம் கொடுத்துவிட்டார் இளங்கோவன். தவிர யாருக்காவது அதனல் மனம் புண்பட்டால் அதற்காக வருந்துகிறேன் என்று மன்னிப்பும் கேட்டுவிட்டார். பிறகு ஏன் அதைப்பற்றி நாம் பேச வேண்டும். தவிர இளங்கோவனின் அந்த பேச்சை நான் சரி, தவறு என்று சொல்லவே இல்லை.  அவரது உருவ பொம்மையை எரித்தது, காங்கிரஸ் கமிட்டி ஆபீஸை தாக்கியது போன்ற அ.தி.மு.க.வினரின் அராஜக செயலைத்தான் கண்டித்தேன்.

சந்திப்பு: டி.வி.எஸ். சோமு

( இளங்கோவனின் “அழகு” பேச்சு, குஷ்பு – நக்மாவுடன் பிரச்சினையா.. உட்பட பல கேள்விகளுக்கு விஜயதரணியின் பளீர் பதில்கள்…  நாளை மறுநாள் வியாழன் அன்று…)