திரைக்கு வராத உண்மைகள்: 9

ருத்ரய்யா, கமல்
ருத்ரய்யா, கமல்

கமல், ரஜினி, ஸ்ரீபிரியா நடித்த ‘அவள் அப்படித்தான்” என்ற படத்தை ருத்ரையா என்ற புது இயக்குனர் இயக்கினார். படம், பெரிதாக வெற்றிபெற வில்லை. ஆனால், கலைத் தன்மையுடன் எடுக்கப் பட்டதால் படம் பேசப்பட்டது. ருத்ரையாவின் பெயரை வெளிப்படுத்தியது. அடுத்து இதே இயக்குநர் எடுத்த, “கிராமத்து அத்தியாயம்’ என்ற படமும் ஓடவில்லை. ஆனால் ரசனைக்குரியதாக இருந்தது.

கமல், ரஜினி,இருவரும் பெரிய ஹீரோக்கள் ஆகிவிட்டனர். அவரகளிடம் கால்ஷீட் கேட்டு அலைந்தார் ருத்ரையா. ஒரு சில ஆண்டுகள் படம் இல்லாதிருந்த ருத்ரையாவிற்கு கமல் கால்ஷீட் கொடுத்தார். பாலுமகேந்திரா ஒளிப்பதிவு செய்ய படப்பிடிப்பு துவங்கியது, ஸ்டுடியோவில்!

வாணி, கமல்
வாணி, கமல்

முதல் நாள் படப்பிடிப்பு வந்தார் கமல்ஹாசன். கூடவே அவர் மனைவி வாணி கணபதி.. பின்னர் வாணி கமல். கமல்ஹாசனுக்கு என்று ஒரு காஸ்ட்யூமர் (உடையலங்கார நிபுணர்) இருந்தார். திருமணத்திற்கு பின் கமலுக்கு வாணியே காஸ்ட்யூமர் ஆனார். சும்மா அல்ல, வாணிக்கும் தயாரிப்பாளர் சம்பளம் தரவேண்டும்.

கமல்ஹாசன் எந்தெந்த வண்ணத்தில் டிசைனில் – பேண்ட், சட்டை அணிந்து வந்தால் அழகாக இருக்கும் என்றெல்லாம் தேர்வு செய்வதும், வாணியின் விருப்பத்தின் அடிப்படையில் நடத்தப்படும்.

படப்பிடிப்பு தொடங்கியது. வாணி அளித்த பேண்ட், சட்டையில் கமல்ஹாசன் மேக்கப் ரூமிலிருந்து வெளியே வந்தார்.

டைரக்டர் பார்த்தார். அந்தக் காட்சியில் கமல்ஹாசன் அப்படியான உடையில் தோன்றுவது பொருத்தமாக இராது என்று உணர்ந்தார்.

‘’இந்த மாடர்ன் சட்டை வேண்டாம். சாதாரணமாக ஒரு இளைஞன் அணியும் சட்டையே போதும்” என்றார்.

“அப்படியா? சரி!’’ என்றார் கமல்.

வாணியை அழைத்தார். விசயத்தைச் சொன்னார். ’’ஏன் இதற்கு என்ன?’’ என்றார்.வாணி

“டைரக்டர் இதை மாற்றச் சொல்கிறார்.”

’வாணி, டைரக்டரை அழைத்து கேட்டார்.

டைரக்டர் ருத்ரய்யா, “காட்சியின் தன்மைப்படி கமல்ஹாசன் ஒரு சராசரி இளைஞன். அவர் இப்படி விநோதமான டிசைனில் சட்டை அணிந்திருப்பது பொருத்தமாக இருக்காது!’’ என்றார்.

“கமல் ரசிகர்கள் கமலைத்தான் பார்ப்பார்கள். அவர் முகத்தைத்தான் பார்ப்பார்கள். சட்டையையா கவனிக்கப் போகிறார்கள்?’’

‘’படம் பார்க்கப் போகிறவர்கள் எல்லோருமே கமல் ரசிகர்கள் அல்லவே! பொது மக்கள் தானே?’’

“கமல் முகத்துக்காகத் தானே அவரை ஹீரோவாகப் போட்டிருக்கிறீகள்?’’

‘’நீங்கள் சொல்கிறமாதிரி எல்லோரும் கமல் முகத்தை தானே பார்க்கப் போகிறார்கள் சட்டை எப்படியிருந்தால் என்ன? நாங்கள் சொல்கிற மாதிரி சாதாரண சட்டையையே போட்டு நடிக்கலாமே?”

விவாதம் வாதமாகி, வாதம் பிடிவாதமாகியது. இது இறுதியில் ஒரு பக்க வாதமாக போய் முடியப் போகிறது என்று அப்போது அங்கிருந்தவர்களுக்குத் தெரியவில்லை.

வாணி கோபமாக மேக்கப் ரூமிற்குத் திரும்பினார். டிரைவரை அழைத்தார். டிரைவர் வந்து வாணி சொன்னதின் பேரில் காஸ்ட்யூம் பெட்டியைக் கார் டிக்கியில் ஏற்றினார்.

வாணி விறுவிறு என்று வந்து காரில் ஏறி கோபமாக கதவை சாத்த.. கமல் வாணியை தடுக்கும் நோக்கில் வேகமாக காரை நோக்கி நடக்க.. அதற்குள் கார் புறப்பட்டுப் போய்விட்டது.

யூனிட் திகைத்து நின்றது.

கமல் தளர்ந்த நடையோடு திரும்பிவந்தார்.

டைரக்டர் என்ன பேசுவது என்று தெயாமல் விழித்தபடி கமலைப் பார்த்தார்.

‘சரி நாம் ஷீட்டிங்கை ஆரம்பிப்போம்” என்று கூறி கமல் நடிக்கத் தொடங்க்குவார் என்று தான் அங்கிருந்தவர்கள் எதிர்ப்பார்த்தனர்.

ஆனால், கமல் ஏதோ டென்ஷனுடன் அப்படியும் இப்படியும் உலாத்தினார். “அடிபட்ட வேங்கை போல’’ என்பார்கள் வேங்கை புலி அடிப்பட்டால் உலாத்திக் கொண்டா இருக்கும்? ’ஓடிப் போய் விடாதா! கமல் புலியும் அன்று அப்படித்தான் செய்தது.

நேரே போய் காரில் ஏறினார். யூனிட்டில் இருந்தவர்களுக்கு இப்போது அடுத்த திக் திடுக்!

டிரைவர் காரை எடுக்க கார், ”புர்”ரென ஸ்டுடியோவை விட்டு போய்விட்டது. டைரக்டரும் உதவி இயக்குநர்களும் அதிர்ச்சியாகி, ஒரு மூலையில் முணுமுணு…

மேக்கப் செட், லைட் இன்னபிற வகையறார்கள் வேறு வேறு மூலைகளில் கசமுச…

‘கமல் மனைவியை சாமதானப்படுத்தி அழைத்து வரப் போயிருக்கிறார்…”

“அந்த அம்மா வராது. அவர் மட்டும் தான் திரும்பி வருவார்.. இன்னிக்கு ஒரு நானலஞ்சு ஷாட் மட்டும் நடிச்சிட்டுப் போயிருவாரு.. நாளையிலேருந்து தான் முறையான ஷூட்டிங் நாடக்கும்” – இப்படியாக அவரவர் கோணத்தில் ஆயிரம் ஹேஸ்யங்கள்.

சுமார் இரண்டு மணி நேரம் போயிற்று.. ஸ்டுடியோ அலுவலகத்திலிருந்து, டைரக்டருக்கு போன். “கமல் பேசறார்….” என்றார்கள். (அப்போது செல்போன் இல்லை லேண்ட் லையன் தான்.)

ருத்ரையா ஓடினார்.

போனில் கமல் சொன்னார்.. “ருத்ரையா.. ஸாரி! இப்போ ஒண்ணும் சூழ்நிலை சரியில்லே…! ஷூட்டிங்கை கேன்சல் பண்ணிருங்க….’’

‘’இல்லே.. ’டிரஸ் சம்பந்தமா நான் என்ன சொல்ல வந்தேன்னா…’’

“வேண்டாம்,,அது முடிஞ்சு போன கதை. பேச வேண்டாம்,.”

‘’சரி ஷூட்டிங்கை நாளைக்கு வைச்சுக்கலாமா?”

“வேணாம்.’’

“எப்போ வைச்சுக்கலாம்னு சொல்லுங்க..’’

“இப்போ, இந்த படத்துக்கு நீங்க வேற ஹீரோவை வைச்சுக்குங்க… நாம ரெண்டு பேரும் சேர்ந்து வேறொரு சந்தர்ப்பத்திலே படம் பண்ணலாம்.”

“என்ன சொல்றீங்க?’’

“உன் டைரக்‌ஷன்லே நடிக்கிறதை என் மனைவி விரும்பலே. அதனாலே நடிக்க மாட்டேன்’” என்று கமல்ஹாசனால் நேரடியாக சொல்ல முடியவில்லை சொல்லாமல் சொன்னார்.

அப்புறம்?

கமல்ஹாசன் கால்ஷீட் கிடைத்ததால்தான் பைனான்ஸ்சியர் படம் எடுக்க முன் வந்தார். இப்போது கமல் இல்லாத படத்திற்கு..?

படம் நிறுத்தப்பட்டது.

அதன் பிறகு ருத்ரையாவிற்கு திரைப்பட வாய்ப்பே கிடைக்கவில்லை. சென்ற ஆண்டு ருத்ரையாவும் காலமாகிவிட்டார். கமலை வைத்து இந்தப்படும் துவங்கும்போது அவருக்கு நாற்பது வயதுதான் இருக்கும்.

கமலைவிட்டு வாணியும் பிறகு சரிகாவும் பிரிந்துபோய்விட்டார்கள். இப்போது கவுதமியின் ஆதரவில் இருக்கிறார்.

கலைத்துறையில் இருப்பவர்கள் தங்கள் தொழிலில் மனைவியின் தலையீட்டை அனுமதிக்கலாகாது. அதனால் பல சமயங்களில் தங்கள் விருப்பத்திற்கும் மனசாட்சிக்கும் எதிரான காரியங்களை, வேண்டா வெறுப்புடன் செய்துதொலைக்க வேண்டிய தர்மசங்கடம் ஏற்பட்டு பிறருக்கும் துன்பத்தை ஏற்படுத்த நேரிடும்.