MOM
பூமிப்பந்தின் எல்லாத் தளங்களிலும் ஜொலிக்கிறது பெண்மை. பெண்கள் கால் பதிக்காத துறைகள் இல்லை.  வெற்றிக்கனி  பறிக்காத இடங்கள் இல்லை. பெண்ணுக்கு வானமே எல்லை.  அப்படி செவ்வாய்க் கிரகத்தில் வெற்றி வலம் வரும் நம் மங்கள்யான் விண்கலத்தின் வெற்றிக்குப் பின்னணியில் இருந்த பெண்களைப் பற்றிய ஒரு பார்வை…
ரித்து கரிதால்

ரித்து கரிதால்
ரித்து கரிதால்

சுமார் 30 ஆண்டுகளுக்குமுன் லக்னோ நகர வானத்தின் மின்னும் நட்சத்திரங்களையும், நிலவினையும்  வெறுமனே பார்த்து ரசிக்க மட்டும் செய்த  ஒரு சராசரி சிறுமி அல்ல இவர்.  இரவு வானம் இவரை கேள்வியின் நாயகி ஆக்கியது. ஒவ்வொரு நாள் இரவும் நிலா, தன்னுடைய அளவு குறைப்பது எப்படி? ஏன்? இவரை தூங்கவிடாமல் துரத்தின-  இதுபோன்ற ஆகாயம் குறித்த சில கேள்விகள்.. இதற்கான விடைதேடும் தளங்களான இந்தியாவின் இஸ்ரோவும்(ISRO), அமெரிக்காவின் நாசாவும் (NASA) இவருக்கு முக்கியமாகப்பட்டது. இந்நிறுவனங்களின் ஒவ்வொரு அசைவுகளையும், ஆய்வு குறித்த செய்திகளையும் ஒன்றுவிடாமல் சேகரிக்கத் தொடங்கினார். இன்று இஸ்ரோவில் பெரிய விஞ்ஞானி. மங்கள்யான் திட்டப்பணிகளில் மகத்தான சேவையாற்றிய பெண்மணி.
இதேகாலகட்டத்தில்தான்  ‘ஆன்ந்தா பத்திரிகா- நாளிதழில்  வெளிவந்த  ஒரு செய்தி கொல்கத்தாவைச் சேர்ந்த மௌமிதா துத்தாவின் தூக்கம் தொலைத்திருக்கிறது..  இந்திய விண்வெளி ஆய்வுமையத்தால் 2008, அக்டோபர்-22 இல் விண்வெளிக்குச் செலுத்தப்பட்ட ஆளில்லா ஆய்வு விண்கலமான சந்திராயன் I  குறித்த செய்தி அது. அந்தச் செய்திதான் மௌமிதா துத்தாவின் வானியல் துறை தொடர்பான ஆர்வத்தை தூண்டியிருக்கிறது.
இப்படித்தான் மேற்கண்ட இரு பெண்மணிகளும் விண்வெளி ஆய்வில் ஆர்வம் கொண்டு அதுபற்றிய கல்வி பெற்று இஸ்ரோவில் வேலைக்குச் சேர்ந்துள்ளனர். அவர்கள் இருவரும் மங்கள்யான் திட்ட்த்தின் வெற்றிப் பயணத்துக்கு துணை நின்ற  இஸ்ரோவின் முன்னணி பெண் விஞ்ஞானிகள். இந்த விண்கல வெற்றியை சர்வதேச சமூகம் ஆச்சரியத்துடன் பார்க்கத் தொடங்கியது. அப்படி  இந்தியாவின் விண்கல ஆச்சரியத்துக்கு இவர்களும் ஒரு முக்கிய காரணம்.
செவ்வாய்க்கு  விண்கலம் அனுப்பும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது என்று அப்போதைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்த 15-08-2012 ஆம் நாளிலிருந்து, அடுத்து  மங்கள்யான் விண்ணுக்குப் பறக்க இருந்த 15 மாதங்களும் இஸ்ரோவின் வியத்தகு நாட்கள் அவை. ஆட்டோ வடிவிலானது மங்கள்யான் விண்கலம். அது பூமியிலிருந்து 660 மில்லியன் கி.மீ.தூரத்தை 330 நாட்கள் பறந்து சென்று செவ்வாய்க் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்த தருணம்,இந்திய விண்வெளி ஆய்வுத்துறையின்  பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று.
மீத்தேன் சென்சார்  ,மூவண்ண  கேமரா உட்பட ஐந்து  செயல்பாடுகளைக் கொண்ட ஒரு கருவி என ஏராளமான சாதனங்கள் மங்கள்யானில் பொருத்தப்பட்டுள்ளன. மங்கள்யான் செயற்கைக்கோளினை  70 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில்  நம் இந்தியா வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளது.ஆனால் இதேபோன்ற செயற்கைக் கோளினை அமெரிக்காவின் நாசா,  671 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் செய்து செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியுள்ளது.
இஸ்ரோவின் மங்கள்யான் வெற்றி நம் தேசத்துக்கு மட்டும் பெருமை சேர்த்த விசயமல்ல. அனைத்துலக நாடுகளின் மத்தியில் நம் இந்திய தேசத்தை உயர்வாக மிக உயர்வாக பார்க்க வைத்த சாதனை அது. இந்த விண்கல வெற்றிக்கு வித்திட்ட அணியில் ரித்தா கரிதாலும், மௌமிதா துத்தாவும் மிக முக்கியமானவர்கள். விண்வெளி ஆய்வுப்பேரரசிகளாகவே போற்றப்படக்கூடியவர்கள் அவர்கள்.
நந்தினி ஹரிநாத்:
20 ஆண்டுகளாக இஸ்ரோவில் பணிபுரிந்து, 20 விண்வெளி ஆய்வுத் திட்டப்பணிகளில் கரம் கோர்த்தவர் இவர். மங்கள்யான் திட்டத்தில் இவர் செய்ல்பாட்டுத் துறை துணை இயக்குனர்.
nandini
நந்தினி ஹரிநாத்

“ மங்கள்யான் திட்ட்த்தின் ஒவ்வொரு பணியினையும் சிரத்தையுடன் செய்தோம்.. ஏனெனில் அப்போது, உலகமே எங்களை உற்றுநோக்கியிருந்தது.அப்படிக் கிடைத்த பெரும்வெற்றிக்கு நல்ல அங்கீகாரமும் மிகப்பெரிய வரவேற்பும் கிடைத்தது. நம் பிரதமர் எங்களை கைகளை குலுக்கிப் பாராட்டினார். அமெரிக்காவின் நாசா எங்களுக்கு வாழ்த்துக்கூறியது. நாங்கள் சார்ந்த விண்வெளித்துறை மட்டுமல்ல, இந்தநாட்டின் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் அனைத்துதரப்பினருமே மங்கள்யான் வெற்றிக்கு காத்துக் கிடந்தவர்கள்.  மங்கள்யானுக்காகவே சமூக வலைத்தளங்களும்  சிறப்பாகச் செயல்பட்டன.
தினசரி ஒவ்வொரு நாளின் 20 மணிநேரங்களை மங்கள்யானுக்காவே  அர்ப்பணித்தோம். ஒவ்வொருவரும் கடுமையான உழைப்பினைத்  தந்தார்கள். ஓய்வில்லா உழைப்பு அது.. இது,அனைவரின் கூட்டுமுயற்சிக்கு கிடைத்த வெற்றி. இதில் பங்கேற்றவர்களில் பலருக்கு பச்சிளம் குழந்தைகள், வயதான பெற்றோர்கள்,  வீட்டில் தனியாக இருந்த கணவர்கள்—இப்படி இதற்கான தியாகிகளின் பட்டியல் மிகப்பெரியது.
மங்கள்யான் பறக்க இருந்த கடைசி  1 மாதகாலகட்டத்தில் தன்னுடைய இரண்டு மகள்களையும் கவனித்துக் கொள்வதற்காக, நந்தினியின் தாயார் இதற்காகவே ஆந்திராவிலிருந்து பெங்களூரூவுக்கு வந்திருந்தாராம். “ என்னுடைய மூத்தம்கள் பிளஸ் டூ. பொதுத்தேர்வுக்கு தயாரகிக் கொண்டிருந்தாள். நான் அதிகாலை 4 மணிக்கு அலுவலகம் கிளம்பினால் நள்ளிரவில்தான் வீடுதிரும்புவேன். அப்போது குழந்தைகள் உட்பட அனைவரும் உறக்கத்தில் இருப்பார்கள். நேரில் சந்தித்துக்கொள்ளக்கூட முடியாது. ஆனால் அதிர்ஷடவசமாக அவர்கள் என்னைப்புரிந்து கொண்ட மகள்கள்.  இப்படி மறைமுகமாக நிறையப்பேரின் பங்களிப்பும் தியாகமும் இருந்ததாகச் சொல்கிறார் நந்தினி.
மினாள் ரோஹித் :-
6 வயது மகனுக்கு தாயான  மினாள் ரோஹித் இத்திட்டத்தின் இயக்குனர். இவர் வீட்டையும் மங்கள்யான் பணிகளையும் கயிறில் நடப்பதுபோல் கவனமாய் நடந்து சாதித்துள்ளார். ஆய்வுப்பணி, வீடு என இருதரப்பு பணிகளையும் செம்மையாய் முடித்திருக்கிறார்.
மினாள் ரோஹித்
மினாள் ரோஹித்

“மங்கள்யான் விண்கலத்தையும், அதற்குள் பொருத்தப்பட்ட கருவிகளையும் நாங்கள்  குழந்தைகளாகவே கருதினோம்.. அப்படிக் கருதிச் செயல்பட்டால்தான் வெற்றி சாத்தியமானது அலுவலகம், வீடு இரண்டிலும் பணிபுரிவதற்கு சில பொதுவான விதிகள் உள்ளன. அதாவது பொறுமை, செயல்படும்விதம், முன்னுரிமை இவைதான். நீங்கள் எதிலும் பொறுமையாக இருந்தால் அதுவே பாதி வெற்றி; தோல்விக்கான ஒரு சிறு துளியைக்கூட எப்போதும் அனுமதிக்காதீர்கள். சரியான திட்டமிடல் இருந்தால் மனதில் எவ்விதக் குழப்பங்களுக்கும் இடம் இருக்காது. எல்லா நேரத்திலும் எல்லா நிகழ்வுகளிலும் நாம் பங்குபெற முடியாது.எனவே முக்கியத்துவம் அறிந்து செயல்படவேண்டியது அவசியம்
.மனமும் மூளையும் எப்போதும் ஒற்றைப்புள்ளியில் இணைந்திருக்கவேண்டும்.எப்போதும் உங்களுக்கு நீங்கள் உண்மையாக இருப்பது அவசியம். பெங்களூரு அல்லது அகமதாபாத் எந்த இஸ்ரோ நிலையமாக இருந்தாலும் அங்கு பணிபுரியும் அனைத்து விஞ்ஞானிகளுமே அதை அறிவார்ந்த பணிச்சூழலாகவே பார்க்கிறார்கள். ஆண், பெண் என்ற எவ்வித பாலினப்பாகுபாடும் யாரிடமும் கிடையாது.  இங்கு அனைத்து சமவாய்ப்புகளுக்கும்  அறிவு, திறமை மட்டுமே காரணம். இவை மட்டும் இருந்தால் போதும்.
16 ஆயிரம் பணியாளர்களைக் கொண்ட இஸ்ரோ நிறுவனத்தில் பெண்கள் 20 சதவீதம் பேர் மட்டுமே. ஆனால் சமீபகாலமாய் பெண் விஞ்ஞானிகள் இங்கு பணியில் சேரும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெண் சமூகத்தில் கல்வி குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருப்பதே இதன் அடையாளம். தங்கள் மகள்கள் பெரிய பொறுப்புகளுக்கு வரவேண்டும், அந்தப்பணிகளை தொடரவேண்டும் என்பதற்காக பெற்றோர்களும் அவர்களுக்கு துணைநிற்கவேண்டும்.
நிறுவனத்தின் தலைமைப்பதவிகளுக்குக்கு வருவதற்கு முன்பே உயர்கல்வி கற்ற பெண்கள் பலரும் பாதியிலேயே வேலையை விட்டுச் சென்றுவிடுகின்றனர். இதுதான் இங்கு முக்கியப்பிரச்சினை. இந்த மனப்போக்கு இங்கு மாறியாக வேண்டும்.குடும்பம், வேலை என இரண்டையும் தங்களால் நிர்வகிக்க முடியும் என்பதை பெண்கள் உணரவேண்டும். தங்களால் ஒன்றை அடைய வேண்டும் என்று  நீங்கள் மனது வைத்தால் அதை அடையமுடியும் என்று உணர்வுப்பூர்வமாய்ச் சொல்கிறார்கள் இந்தப் பெண் விஞ்ஞானிகள்,
கரிதால், தத்தா, நந்தினி மற்றும்  மினால் இவர்கள் நால்வரும் இஸ்ரோவில் 10 முதல் 20 ஆண்டுகளாக பணியில் இருப்பவர்கள். தங்கள் கனவு நனவாகும் என்ற இவர்களின் நம்பிக்கை ‘ மங்கள்யான்’ வடிவத்தில் நிறைவேறியிருக்கிறது.
இவர்கள் அனைவரும் தங்கள் பணியில் மகிழ்ச்சி கொண்டவர்கள். சிந்தனைத் தெளிவும், உயர்ந்த இலக்கும் கொண்டவர்கள். நம் சமகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவும் வேட்கை கொண்டவர்கள். ஆகாயத்தைச் சுற்றி வரும் விண்கலங்கள்,  நம் அன்றாட வாழ்வின் நலனுக்குப் பலனளிக்கும் பல பணிகளைச் செய்து வருகிறது. . இதற்கு பல உதாரணங்களைக் கூறமுடியும்.
“மங்கள்யான் வெற்றி மகத்தானதுதான். என்றாலும் நாம் பயணிக்க வேண்டிய தூரம் அதிகமிருக்கிறது. சாதிக்க வேண்டிய இலட்சியங்கள் இன்னும் ஏராளம் இருக்கிறது. விண்வெளி ஆராய்ச்சிகளில் ஆர்வம் காட்டிவரும் அதேவேளை நம் பிள்ளைகள் அனைவருக்கும் தரமான உயர்கல்வி அளிக்க பெற்றோர்கள் முன்வரவேண்டும். நாளை அறுவடை செய்பவர்கள் மற்றவர்களாய் இருந்தாலும் அதற்காக இன்றே நாம் விதைப்போம்; நம்முடைய விளைச்சலால் மற்றவர் பசி தீரட்டும்.
சிறுமியாய் இருக்கும் உங்கள் மகளை விண்வெளி விஞ்ஞ்சானி ஆக்க விரும்புகிறீர்களா? அதற்கான பணியை அவளின் இளம்பிராயத்திலேயே தொடங்கி விடுங்கள். அப்போதுதான் அந்தப் பெரிய இலக்கினை எளிதில் அடையமுடியும் என்கிறார்கள் இந்தப் பெண் விஞ்ஞானிகள்.
அடுப்பறையில் சமைக்கவும் தெரியும்; ஆகாயத்தில் ஜொலிக்கவும் தெரியும்…பெண்மையைப் போற்றுவோம்..