பிணமாக மீட்கப்பட்ட மாணவி
பிணமாக மீட்கப்பட்ட மாணவி

 
விழுப்புரம் அருகே செயல்பட்டு வந்த  எஸ்.வி.எஸ். இயற்கை மற்றும் யோகா மருத்துவக்கல்லூரியில் பயின்ற  மோனிஷா, சரண்யா,  பிரியங்கா ஆகிய மூவரும் மர்மமான முறையில் கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டது தமிழகம் முழுதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இருக்கிறது.
பொதுமக்கள் போராட்டம் நடத்திய பிறகு கல்லூரிக்கு சீல் வைக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் கலாநிதி நிர்வாகி வாசுகியின் மகன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மரணமடைந்த மாணவிகளில் இருவர் உடல் நேற்று இரவு அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.  மூவரில்  ஒருவரான மோனிஷாவின் பெற்றோர் உடலை பெற்றுக்கொள்ள மறுத்து வருகிறார்கள். அந்த மாணவியின் உடல் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருக்கிறது.  தங்கள் மகளின் உடலை, சென்னையில் வைத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என அவர்கள் வற்புறுத்துகிறார்கள். விழுப்புரம் அரசு மருத்துவனை பிணவறையில் குளிர்சாதன இயந்திரம் செயல்படாததால் மாணவியின் உடல் அழுகி வருவதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தார்கள்.
 
மரணமடைந்த மாணவிகள்
மரணமடைந்த மாணவிகள்

மோனிஷாவின் தந்தை தமிழரசனிடம் பேசினோம். அவர்,   ‘‘மர்மமாக மரணமடைந்த மாணவிகள் மூன்று பேரும்  கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்தியுள்ளனர். இதனால் கல்லூரி நிர்வாகத்தினர் திட்டமிட்டு அவர்களை கொலை செய்து கிணற்றில் வீசிவிட்டு நாடகம் ஆடுகிறார்கள். அவர்களது தலை, உடலில் காயங்கள் உள்ளதால் எங்களுக்கு சந்தேகமாக உள்ளது. எனவே இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த வேண்டும்’’ என்று அழுதபடியே கூறினார்.
இந்த கல்லூரியில் பயிலும் இதரமாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களிடம் பேசியபோது, “இந்த கல்லூரி  முறையாக செயல்படுவதே இல்லை. எங்களுக்கு பாடம் சொல்லி தர எவருமே  யாரும் கிடையாது. தர்மா  எனும் யோகா ஆசிரியர் மட்டும் வருவார். அவர்தான் எங்களுக்கு பிசியாலஜியையும், அனாட்டாமியையும் சொல்லி தருவார்.  அந்த ஒரு வகுப்பு மட்டும் நாள் முழுவதும் நடைபெறும். எப்போதாவது ஒரு நாள் அச்சுதானந்தம் என்ற இன்னொரு பேராசிரியர் வந்து வகுப்பு  எடுப்பார். மொத்தத்தில் இது மருத்துவ கல்லூரியே இல்லை” என்றார்கள் குமுறலோடு.
.மேலும், “ஆறு லட்சம் ரூபாய் வரை கட்டணம் செலுத்தி இருக்கிறோம். ஆனால்,  55000 ரூபாய்க்கான ரசீது மட்டும்தான் கல்லூரி நிர்வாகம் கொடுத்திருக்கிறது.
 
கல்லூரி?
கல்லூரி?

ஒரே கட்டிடம்.. அதில் மூன்று அறைகள்.  இதுதான் கல்லூரி. அது போல ஒரு சிறிய வீடுதானன் ஹாஸ்டல். எந்தவித அடிப்படை வசதியோ சுகாதாரமோ கிடையாது. பெரும்பாலும் பெண்கள் படிக்கும் இந்தகல்லூரியில் இதுதான் நிலை.
.எங்களைப்போல பாதிக்கப்பட்டவர்கள் பலர். கடந்த அக்டோபர் 5ம் தேதி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கண்ணதாசன், ரவீந்திரன், ஐயப்பன் பானுப்பிரியா, கோமளா, பிரியா ஆகிய மாணவர்கள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். தீவிர சிகிச்சைக்குப் பிறகு இவர்கள்  உயிர் பிழைத்தனர். எஸ்விஎஸ் கல்லூரியின் கொடுமையை தாங்க முடிய வில்லை என்று கூறி, படிப்பை நிறுத்திய இவர்கள் கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்த விஷம் குடித்தார்கள். ஆனால் அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்கள்.
கள்ளக்குறிச்சி பகுதியில் பல தரப்பிலும் நமது விசாரணையை துவங்கினோம். மேலும் பல அதிர்ச்சிகரமாண தகவல்கள் பல கிடைத்தன.
“இந்த கல்லூரியை நிறுவிய சுப்பிரமணியனுக்கு, கள்ளக்குறிச்சிக்கு அருகே உள்ள பல்ராம்பட்டுதான் சொந்த ஊர்.  பள்ளிக்கல்வியையயே தாண்டாத அவர் தன்னை “பரம்பரை மருத்துவர்” கூறிக்கொள்ள ஆரம்பித்தார். அதவது போலி டாக்டர்.
கள்ளக்குறிச்சியில் இவர் “மருத்துவம்” பார்த்து வந்தபோது, அடுத்தகட்ட “முன்னேற்றமாக” டாக்டர் எஸ். எஸ். மணியன் என்று பெயர் வைத்துக்கொண்டார். பக்கத்திலேயே இருந்த ரத்த பரிசோதனை நிலையத்தில் வாசுகி என்கிற  பெண் வேலைக்கு வந்தார்.  அப்போது இருவரும் கண்களால் பேசி, காதல் கொண்டனர். பிறகு கடிமணமும் புரிந்துகொண்டனர்.
அடுத்ததாக இருவருமே தங்களது பெயருக்கு பிறகு எம்.டி. என்று போட்டுக்கொண்டு டாக்டர்களாக வலம் வந்தார்கள்.
அடுத்தகட்ட முன்னேற்றமாக, எஸ்.வி.எஸ். கல்லூரியை துவங்கினர்” என்றார்கள்.
“ஏமாற்றி மாணவர்களை சேர்த்துவிடுவார்கள். விசயம் தெரிந்து பணத்தை திருப்பி கேட்டால், வாசுகி அடாவடியாக பேசி மிரட்டி அனுப்பி விடுவார்.  கணவர் சுப்பிரமணியனை டம்மியாக வைத்துக்கொண்டு வாசுகிதான் எல்லாவித அடாவடிகளையும் செய்துவந்தார். வேலை பார்ப்பவர்களுக்கும் ஒழுங்காக சம்பளம் தரமாட்டார்கள்” என்றார் இந்த கல்லூரியில் காவலாளியாக பணியாற்றி விலகிய ஒருவர்.
 
இந்த பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட அமைப்பைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர், “சுப்பிரமணியன் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர். வாசுகி பிற்பட்ட இனத்தைச் சேர்ந்தவர். ஆகவே தன்னிடம் ஏமாந்து பிறகு பணம் கேட்டு வருபவர்களிடம், “என் கணவரை விட்டு வன்கொடுமை புகார் கொடுக்க வைப்பேன்” என்றும் மிரட்டுவார் வாசுகி.
அதோடு “ஆதி திராவிடன் புரட்சிக் கழகம்” என்று ஒரு லெட்டர் பேட் கட்சியை நடத்தி வரும் வெங்கடேசன் என்பரை தனக்கு துணையாகச் சேர்த்துக்கொண்டார் வாசுகி. கள்ளக்குறிச்சி அருகே உள்ள மாதூரைச் சேர்ந்த இந்த வெங்கடேசனுக்கு கட்டப்பஞ்சாயத்து செய்வதும் மிரட்டி பணம் வசூலிப்பதும்தான் வேலை. தனக்குத்தானே புரட்சி கொண்டான் என்று பெயர் வைத்துக்கொண்டு, அலையும் இந்த வெங்கடேசன் வாசுகிக்கு ஆதரவாக செயல்பட்டுவந்தார். எஸ்.வி.எஸ். கல்லூரிக்கு எதிராக புகார்  தெரிவிப்பவர்களை இந்த வெங்கடேசனை வைத்தும் வாசுகி மிரட்டுவார்” என்றார் குமுறலோடு.
 
இதர மாணவர்கள் கதறல்
இதர மாணவர்கள் கதறல்

 
“எம்.ஜி.ஆர். பல்கலை கழகம்தான் இந்த கல்லூரிக்கு அனுமதி அளித்துள்ளது. கள்ளக்குறிச்சியில் ஒரு ரூம் போட்டு அலுவலகம் வைத்தார்கள்.  பிறகு சேலம் மெயின்ரோடு அருகே ஒன்றரை ஏக்கர் நிலம் வாங்கி, மூன்று அறைகள் கொண்ட ஒரே பில்டிங் கட்டினார்கள்.  இன்று வரை அதேதான். இதற்கு எப்படி பல்கலை அதிகாரிகள் அனுமதி கொடுத்தார்கள். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்ட என்கிறார்கள் கல்வியாளர்கள்.
“கடந்த 2005ம் ஆண்டு பிப்ரவரி மாதம், அப்போதைய அ.தி.மு.க. ஆட்சி முடியும் தருவாயில் இந்த கல்லூரிக்கு அனுமதி வழங்கப்பட்டது. அப்போதே தகுதியில்லாத இந்த கல்லூரிக்கு அனுமதி அளிக்கக்கூடாது என கோர்ட்டுக்கு போனார்கள். இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் வரை சென்றது.
அடுத்து வந்த தி.மு.க. ஆட்சியிலும் இந்த கல்லூரியின் ஓனர் வாசுகிக்கு செல்வாக்கு இருந்தது. அந்த ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்,  இந்த கல்லூரிக்கு மீண்டும் அனுமதி கொடுத்தார். இப்போது தி.மு.க.வினரு் இந்த கல்லூரியை எதிர்த்து போராட்டம் நடத்துவது வேடிக்கையாக உள்ளது” என்றார் விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்  ஒருவர்.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் நேர்மையான அதிகாரி ஒருவர், “மாவட்ட கலெக்டர் லட்சுமி சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் தற்போது மூன்று மாணவிகளின் மரணம் நடந்திருக்காது. சில மாதங்களுக்கு முன்பே, அந்த எஸ்.வி.எஸ். கல்லூரி மாணவர்கள் கலெக்டர் லட்சுமியிடம் புகார் தெரிவித்தனர். கலெக்டரும், ஆர்.டி.ஓ.வை இதுகுறித்து விசாரிக்கச் சொன்னார். ஆர்.டி.ஓ.வும் விசாரித்து, கல்லூரியை மூடுவதுதான் சரி. எந்த வித அடிப்படை வசதியும் இல்லை என்று ரிப்போர்ட் கொடுத்தார். இதையடுத்து  அந்த கல்லூரியை மூட லட்சுமி வாய்மொழியாக அறிவுறுத்தினார். ஆனால் அதை கல்லூரி நிர்வாகம் மதிக்கவி்ல்லை. வாய்மொழி அறிவுறுத்தலுக்கு பதிலாக உரிய முறையில் ரிட்டர்ன் ஆக உத்தரவிட்டிருந்தால் அப்போதே கல்லூரி மூடப்பட்டிருக்கும். மாணவர்களுக்கும் நிவாரணம் கிடைத்திருக்கும். இந்த மரணங்களும் தவிர்க்கப்பட்டிருக்கும்” என்றார்.
 
காவல்துறை நடவடிக்கை
காவல்துறை நடவடிக்கை

உள்ளூரைச் சேர்ந்த சிலர், “ஏற்கெனவே இந்த கல்லூரி மாணவர்கள் கலெக்டர் ஆபீஸில் போராட்டம் நடத்திய போது இந்த மூன்று மாணவிகளும்தான் முன்னணியில் இருந்தார்கள்.
இந்த மாணிகளின் மரணமடைவதற்கு முன்பே, வாசுகி திட்டமிட்டு செயல்பட்டதாகவே தோன்றுகிறது.  சிறுநீரக பிரச்சினையால் சென்னை போரூரில் இருக்கும் ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரியில்  சிகிச்சை பெற்றுவரும் கணவர் சுப்பிரமணியனை பார்க்க செல்வதாக சொல்லி  சென்னைக்கு வந்துவிட்டார் வாசுகி. அங்கிருந்தபடியே மூன்று மாணவிகளின் வீட்டிற்கும் போன் செய்து உங்கள் மகள்களின் நடவடிக்கை சரியில்லை என்று பேசியிருக்கிறார். ஆகவே வாசுகியின் நடவடிக்கைகள் சந்தேகப்படும்படியாகவே இருக்கிறது.
தவிர கிணற்றில் விழுந்த மாணவிகளின் கைகள் கட்டப்பட்டிருப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” என்கிறார்கள்.
“கல்லூரியின் நிர்வாகி வாசுகிக்கு எல்லா விசயங்களிலும் உடந்தையாக இருக்கும் வெங்கடேசன், ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு நெருக்கமானவர்.  நடராஜன் நடத்தும் நிகழ்ச்சிகளில் எல்லாம் உடன் சிலரை அழைத்துக்கொண்டு செல்வார்.
அதே போல, கல்விக்கு பொறுப்பான அமைச்சர்களையும் தங்களுக்கு ஆதரவாக எப்போதும் வைத்திருந்தார்கள் வெங்கடேசனும், வாசுகியும். ஆகவே பல்வேறு மட்டங்களிலும் முயற்சி செய்து சிக்கலில் இருந்து விடுபட எஸ்.வி.எஸ். கல்லூரி நிர்வாகம் முயன்று வருகிறது” என்கிறார்கள் விசயம் அறிந்தவர்கள்.
“கல்லூரியை நிறுவிய சுப்பிரமணியம் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் பிரச்சினையில் சிக்க வைத்துவிட்டார்கள்” என்று ஒரு பிரச்சாரம் கிளப்பப்பட்டது.
ஆனால் விடுதலை சிறுத்தைகள் அமைப்பும், “மாணவிகள் மரணத்துக்கு காரணமான கல்லூரி நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று நேற்று போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து அந்த பிரச்சாரம் முறியடிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சியில் இருந்து நாம் திரும்பும்போது நம்மிடம் பேசிய குமார் என்பவர் கூறியதுதான் நமக்கு அதீத அதிர்ச்சியை ஏற்படுத்தியது:
“இதே கள்ளக்குறிச்சி பகுதியில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லாம மாணவர்களை ஏமாற்றும் கல்லூரிகள் இன்னும் நிறைய இருக்கு. அங்கும் மாணவர்கள்  தற்கொலை செஞ்சுகிட்டதும்தான் அரசு நடவடிக்கை எடுக்குமோ?”

  • கதிரவன்