கொலை செய்யப்பட்ட ஆசிரியர் சந்தோஷ்
கொலை செய்யப்பட்ட ஆசிரியர் சந்தோஷ்

பாவூர்சத்திரம்:
திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரத்தில், ஆசிரியர் ஒருவரை , அவரது கள்ளக்காதலி கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டம் பாவூர் சத்திரம் அருகே உள்ள புல்லுக்காட்டு வலசையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பட்டாதாரிஆசிரியராக பணியாற்றி சந்தோஷ். வயது 36. அருகில் உள்ள இராமச்சந்திரபட்டணத்தில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு அனுஷா என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.
பிணமாக  ஆசிரியர் சந்தோஷ்
பிணமாக ஆசிரியர் சந்தோஷ்

இவர் கடந்த பிப் 6 ம் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டுச் சென்றார். அதன் பின்னர் வீடு திரும்ப வில்லை. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகவே, அவரது மனைவி அனுஷா, பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
பாவூர்சத்திரம் போலீசார், வழக்கு பதிவு செய்து ஆசிரியர் சந்தோஷை தீவிரமாக தேடிவந்தனர். சந்தோஷின் செல்போன் எண்ணில் அவருடன் பேசியவர்கள் பட்டியலை ஆராய்ந்தனர். பாவூர் சத்திரத்தில் வசிக்கும் பொன் செல்வி என்பவரது எண்ணுக்கு ஆசிரியர் சந்தோஷ் அடிக்கடி பேசியிருப்பதும், அவர் கடைசியாக பேசியதும் அந்த எண்ணுக்குத்தான் என்பதும் தெரியவந்தது.
இந்த நிலையில், பொன் செல்வி, அவரது தம்பி முருகன் ஆகியோர் குலசேகரப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் நடராஜனிடம் நேரில் ஆஜரானார்கள்.  காணாமல் போன ஆசிரியர் சந்தேஷை தாங்கள் கொன்றதாக வாக்குமூலம் அளித்தனர்.
 
கொலை செய்த முருகன்
கொலை செய்த முருகன்

வாக்குமூலத்தில் முருகன் கூறியுள்ளதாவது:
”எனது பெயர் முருகன். வயது 28. எனது தந்தை தங்கப்பாண்டி. அக்காள் பொன்செல்வி. வயது 30.
எனது அக்காள் பாவூர் சத்திரத்தில் தனியாக வீடு கட்டி வாழ்ந்து வருகிறார். அவரது கணவர் முருகன் வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
கொலை நடந்த வீடு
கொலை நடந்த வீடு

 
இந்த நிலையில், ஊருக்கு மாற்றலாகி வந்தார் ஆசிரியர் சந்தோஷ். எனது அக்காவுக்கும் அவருக்கும் எதிர்பாராத விதமாக அறிமுகம் ஆகியிருக்கிறது. நாளைடைவில் இது நெருக்கமான பழக்கமாக ஆகியிருக்கிறது.
காலப்போக்கில், எனது அக்காவை, ஆசிரியர் சந்தோஷ் செக்ஸ் டார்ச்சர் செய்ய ஆரம்பித்திருக்கிறார். மது அருந்திவிட்டு வந்து, மிகவும் கொடுமை படுத்தியிருக்கிறார்.
ஒருகட்டத்தில் பொறுக்க முடியாமல் என் அக்கா பொன் செல்வி, என்னிடம் சொல்லி கதறி அழுதார். அப்போதுதான் இந்த விவகாரம் எனக்குத் தெரியும்.   அதன் பிறகு, ஆசிரியர் சந்தோஷிடம் என் அக்காவைவிட்டு விலகிவிடுமாறு கூறினேன். ஆனால் அவர் கேட்கவில்லை. தொடர்ந்து பலமுறை, மது அருந்திவிட்டு வந்து தொடர்ந்து என் அக்காவுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார்.
ஆகவே அவரை கொலை செய்ய தீர்மானித்தோம். சந்தோசை என்து அக்காள் ஆசை வார்த்தை கூறி வீட்டிற்கு அழைத்தார். இதனை நம்பிய ஆசிரியர் ; சந்தோஷ் கடந்த 6 ம்தேதி காலையில் எனது அக்காள் வீட்டிற்கு வந்தார்.
அப்போது எனது அக்காள் சந்தோசுக்கு பிராந்தியில் விஷம் ஊற்றி குடிக்க கொடுத்தார். இது தெரியாமல் ஆசிரியர் சந்தோஷும் மகிழ்ச்சியுடன் மதுவை குடித்தார். சிறிது நேரத்தில் அவர் துடி துடித்து இறந்து விட்டார்.
அன்று இரவு, வீட்டிற்கு பின்புறம் ஏற்கனவே வெட்டிவைக்கப்பட்டிருந்த குழியில் சந்தோஷை புதைத்தோம். இதற்கு என் தந்தை தங்கபாண்டியும் உதவினார். இந்த விஷயம், யாருக்கும் இது தெரியாது என்று நினைத்திருந்தோம்.
ஆனால் போலீசார் எங்களை சந்தேகப்பட்டு தேட ஆரம்பித்துவிட்டார்கள். அதனால் நாங்களே சரணடைய முடிவெடுத்தோம்” என்று பொன் செல்வியின் தம்பி முருகன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து முருகன், பொன்செல்வி, அவர்களது தந்தை தங்கப்பாண்டி ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.   பொன் செல்வியின் வீ்ட்டுக்கு பின்புறம், ஆசிரியர் சந்தோஷ் புதைக்கப்பட்ட இடத்தையும் அவர்கள் காண்பித்தனர். தாசில்தார் கந்தசாமி முன்னிலையில் சந்தோசின் உடலை தோண்டி எடுக்கப்பட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
அனைவருக்கும் முன்னுதாரனமாக விளங்கவேண்டிய ஆசிரியர் பொறுப்பில் இருந்தவர், மதுவுக்கும் தவறான தொடர்புக்கும் அடிமையானதும், அதனால் கொல்லப்பட்டதும், நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
–  கீழப்பாவூர் செ. பிரம்மநாயகம்