பேஸ்புக், ட்விட்டர்: இந்திய வீரர்களுக்கு தலைமை தளபதி கடும் எச்சரிக்கை

டில்லி:

பாதுகாப்பு துறையில் உள்ள குறைபாடுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டால் கடும் தண்டனை விதிக்கப்படும் என்று வீரர்களுக்கு, ராணுவ  தலைமைதளபதி பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 1949ம் ஆண்டு ஜனவரி 15ந்தேதியன்று, லெப்டினன்ட் ஜெனரல் கே.எம்.கரியப்பா, நாட்டின்  ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்தியர் ஒருவர் இப்பதவிக்கு வந்தது இப்போதுதான்.  கரியப்பாவுக்கு முன்னதாக ஆங்கில தளபதி ஜெனரல் சர் பிரான்சிஸ் பட்சர் தலைமைப் பொறுப்பில் இருந்தார்

இதை நினைவுகூறும் விதமாக ஜனவரி 15ந்தேதி  ராணுவ தினமாக கடைபிடிக்கப்பட்டுகிறது.. இந்த வருடமும் நேற்று ராணுவ தினம்  கடைபிடிக்கப்பட்டது.

இதையொட்டி, டில்லி கே.எம். கரியப்பா மைதானத்தில் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை பாதுகாப்புபடை வீரர்கள் நிகழ்த்திக் காட்டினர். முன்னதாக ராணுவ வீரர்களின் அணிவகுப்பும் நடத்தப்பட்டது. இதனை ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் ஏற்றுக்கொண்டார். அதன் தொடர்ச்சியாக சிறப்பாக பணிபுரிந்த வீரர்களுக்கு பதக்கங்களை அவர் வழங்கி கவுரவித்தார்.

பிறகு பேசிய அவர், “ஒவ்வொரு வீரரும் தங்களுக்கு ஏதேனும் பிரச்சினை அல்லது அதிருப்தி இருந்தால் அதுகுறித்து ராணுவ நிர்வாகத்திடம் தெரிவிக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படி தெரிவித்தும் வீரர்களுக்கு திருப்தியில்லை என்றாலோ, உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றாலோ என்னிடம் நேரடியாக வந்து குறைகளை கூறலாம். அதே நேரம், விதிகளை மீறி பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில், தங்களது குற்றச்சாட்டுகளை பதிவிட்டால் அவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும்.

இப்படியான செயல்கள் ராணுவ வீரர்கள் மீது அவப்பெயரை உண்டாக்கும். “ என்றார்.

சமீபத்தில் தேஜ் பகதூர் என்ற ராணுவ வீரர், தங்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாகவும், உணவுக்காக அரசு ஒதுக்கும் பணத்தை ராணு உயர் அதிகாரிகள் எடுத்துக்கொள்ளவதாகவும் வீடியோ காட்சியில் தெரிவித்திருந்தார். துணை ராணுவத்தை சேர்ந்த ஜீத் சிங் என்பவரும் பிரதமருக்கு வேண்டுகோள் விடுக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு, வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து பிரதமர் ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார் இந்த வீடியோ காட்சிகள், சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது

இதையடுத்தே ராணுவ தளபதி,  சமூக வலைதளங்களில் பதிவிடும் வீரர்களுக்கு எச்சரிக்கை விடும் முகமாக பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 'Army personnel using social media for grievances will be punished', says General Bipin Rawat, இந்திய ராணு வீரர்களுக்கு  இந்திய தலைமை தளபதி கடும் எச்சரிக்கை
-=-