பெரம்பலூர்

பெரம்பலூரில் தமிழகத்திலேயே முதல் முறையாக, ‘கல்வியும் காவலும்’ என்ற புதிய திட்டம் துவக்கப்பட்டது.

நேற்று தமிழகத்தில் முதல் முறையாக பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் சார்பில், கல்வியும் காவலும் என்ற புதிய திட்டம், துவக்கப்பட்டது.  இந்த திட்டத்தை நேற்று பெரம்பலூர் காவல்நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில், இத்திட்டத்தை மாவட்ட எஸ்.பி., சியாமளா துவக்கி வைத்தார்.

அவர் தனது உரையில்,

”திட்டத்தின்  முதல் கட்டமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார்ப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பயிலும் மாணவ – மாணவியர், புதிய திட்டத்திற்குத் தேர்வு செய்யப்படுவர்.  அவர்களுக்குக் காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், காவலரின் பணி பொறுப்புகள், காவல் துறை பிரிவுகள், சட்டம், ஒழுங்கு, போக்குவரத்து, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் ஆயுதப்படை காவலரின் பணி, பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் குறித்து வகுப்பு எடுக்கப்படும்.

மேலும் கணினி குற்றங்களை கண்டறிய உருவாக்கப்பட்டுள்ள சைபர் கிரைம் காவல் நிலைய செயல்பாடுகள் குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்படும்.  அத்துடன் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் போதை ஒழிப்பு குறித்தும், சாலை விதிகளைப் பின்பற்றுதல், தற்கொலையைத் தவிர்த்தல், உயிருக்கு அச்சுறுத்தலான காரியங்களை செய்யாமல் தவிர்த்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

இந்த திட்டம் காவல்துறை மக்களின் நண்பன் என்பதை மாணவர்களுக்கு உணர்த்தவும், காவல் துறையினர் பணி குறித்து அவர்கள் அறியவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.”

எனத் தெரிவித்துள்ளார்.