2

“நாலு நாள் பெஞ்ச மழைக்கே இங்கே பொழப்பு நாறிப்போச்சு.  ரோட்டுக்கு போட்டு வந்துச்சு, வீட்டுக்கு மேல ஆளுங்க போயிடுச்சு.

சோறு தண்ணி இல்லாம, பொட்டல சாப்பாடு போட்டாங்க.

இந்த லட்சணத்துல இன்னும் மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டும்னு வாக்கிய பஞ்சாங்கம் ஒரு பக்கம் மிரட்டுது.  “ஆமாமா மழை அடிச்சி தாக்கப்போவுது”ன்னு வாட்ஸ்அப்புலவும் வதந்திய பரப்பறானுங்க” என்று நடுங்கி புலம்புகிறார்கள் மக்கள்.

வாட்ஸ்அப்பில் வந்து நடுங்க வைத்த அந்த “செய்தி” இதுதான்:

“அமெரிக்க நாஸா ஆராய்ச்சி மையம் வானிலை சம்பந்தமாக ஒரு தகவல் வெளியிட்டுள்ளது . அதன் படி இந்தியாவில் மீண்டும்  வரலாறு காணாத மழை பெய்யப்போகிறது.   வரும் டிசம்பர் 21, 22 தேதிகளில் மிக அதிகமான கனமழை பெய்யும் .  சென்னை மற்றும் பகுதிகளில் சுமார் 250 செ.மீ வரை மழை பெய்யும் என்றும், எனவே மத்திய அரசு தேசிய பேரிடர் பாதுகாப்பு படைவீரர்கள் 3000 பேரை தமிழ்நாட்டுக்கு அனுப்பியிருக்கிறது” – இதுதான் மக்களை பீதிக்குள்ளாக்கிய வாட்ஸ் அப் செய்தி.

இதற்கிடையே “பலத்த மழை வெள்ளம் தொடரும் என்று வாக்கிய பஞ்சாகத்தில் கூறப்பட்டிருக்கிறது. இதை அமெரிக்காவின் நாஸாவும் உறுதி செய்திருக்கிறது” என்று இன்னொரு வாட்ஸ்அப் பீதி கிளம்பியிருக்கிறது.

ஆனால் நாஸா அப்படி ஏதும் தகவல் வெளியிடவில்லை என்பது தெரிந்துவிட்டது. சரி, கனத்த மழை தொடருமா என்பதை வானிலை ஆராய்ச்சி மையத்திடம் தானே விளக்கம் கேட்க வேண்டு். அம் மையத்தின் இயக்குநர் ரமணனிடம் கேட்டால், “இது ஒரு வதந்தி . , தமிழகத்தில் திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பது உண்மைதான். ஆனால் அது சாதாரண அளவு மட்டுமே. இணையத்தில் பரவி வரும் இது போன்ற தகவல்கள் பொய்யானவை. அதை மக்கள் நம்ப வேண்டாம்” என்கிறார்

“வாட்ஸ்அப் வரைக்கும் நவீன முன்னேற்றம் வந்துருச்சு.. ஆனா வதந்திய பரப்பர நம்ம ஆளுங்க மூளை மட்டும் அப்படியே இருக்கே” என்று புலம்புகிறார்கள் வெள்ளத்தில் மிதந்தவர்கள்.