ராகுல் காந்தி
ராகுல் காந்தி

டெல்லி:
நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி தொடர்ந்து பேசிய பேச்சு பாஜ.வின் மூத்த அமைச்சர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘‘நாகா உடன்படிக்கை அல்லது லாகூருக்கு திடீரென விஜயம் செய்வது போன்ற நிகழ்வுகளில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் ஆகியோரை பிரதமர் மோடி கலந்து ஆலோசனை மேற்கொள்வது கிடையாது’’ என லோக்சபாவில் கடந்த புதன்கிழமை ராகுல்காந்தி குற்றம்சாட்டி பேசினார்.
ராகுல்காந்தியின் இந்த பேச்சுக்கு மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தனது பேஸ்புக் பக்கத்தில் பதில் கூறியுள்ளார். ‘‘ராகுல்காந்திக்கு முதிர்ச்சி ஏற்படவில்லை. காங்கிரஸை போல் பாஜ, பிரதமரை மீறி எதுவும் செய்யாது. ஏன் என்றால் மோடி எப்போதும் ஆலோசனைக்கு தயாராக இருக்க கூடியவர்’’ என தெரிவித்துள்ளார்.
அடுத்து கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி நீண்ட உரையாற்றினார். அவரது பேச்சில் ராகுல் காந்தியின் உரையை மையமாக கொண்டு இருந்தது. ஆனால், பிரதமர் அவரது பெயரை குறிப்பிடாமலே பேசினார்.
ராகுல்காந்தியை தாக்கி பேசும் வகையில், ‘‘சிலருக்கு வயது ஏற்ற வகையில் முதிர்ச்சி ஏற்படவில்லை’’ என பிரதமர் பேசினார். ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு பதில் கூறுவதை மோடி தொடர்ந்து தவிர்த்து வந்த நிலையில் தற்போது, அவருக்கு பாஜ பதில் கூற தொடங்கியுள்ளது. இதன் மூலம் ராகுல்காந்தியை காங்கிரஸ் கட்சியின் முகமாக பாஜ அங்கிகரித்துள்ளது.
நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகியோரது பேச்சை மேற்கோள்காட்டி பிரதமர் பேசினார். ‘‘விவாதங்கள் வரையரைக்குள் நடக்க வேண்டிய இடம் நாடாளுமன்றம்’’ என ராஜீவ்காந்தி கூறியதை மோடி நினைவு கூர்ந்தார். ‘‘நாடாளுமன்றம் ஸ்தம்பித்தால் எதிர்கட்சிகளுக்கு தான் பாதிப்பு. அரசாங்கத்தின் குறைகளை எடுத்துக் கூறும் வாய்ப்பை இழந்துவிடுவார்கள்’’ எனவும் மோடி பேசினார்.
‘‘அதோடு, காங்கிரஸ் கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் அவமானப்படுத்தப்படுகின்றனர். எதிர்கட்சியில் சக கட்சியினருடன் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மை காரணமாக சிலர் நாடாளுமன்றம் செயல்படவிடாமல் செய்கின்றனர். பாஜ சாதனைகளை எதிர்கட்சியினராக ஜீரணிக்க முடியவில்லை’’ என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை முன்பு எதிர்த்த மோடி, தற்போது அந்த திட்டத்துக்கு பாஜ உரிமை கொண்டாட நினைக்கிறது என்ற ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கும், பிரதமர் தனது நீண்ட உரையில் பதிலளித்து பேசினார்.