2EA3736E00000578-3326708-image-a-153_1448028701756-600x405

பமாக்கோ,

ஆப்பிரிக்க நாடான மாலியில் உள்ள ஓட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இந்தியர்கள் உள்பட 170 பேரை சிறை பிடித்தனர். பல மணி நேர சண்டைக்கு பிறகு அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

தீவிரவாதிகள் ஆதிக்கம்

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று மாலி. 1960-ம் ஆண்டு பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்ற இந்த நாட்டின் அதிபராக இப்ராகிம் பாவ்பாக்கர் கெய்ட்டா உள்ளார். 2013-ம் ஆண்டு, இந்த நாட்டின் வட பகுதியை அல்கொய்தா ஆதரவு தீவிரவாதிகள் கைப்பற்றி, தலைநகர் நோக்கி அணிவகுக்க முயற்சித்தபோது பிரான்ஸ் தலையிட்டு, முறியடித்தது.

ஆனாலும், அங்கு தீவிரவாதிகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவ்வப்போது அங்கு வன்செயல்களில் ஈடுபடுவதை அவர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். கடந்த ஆகஸ்டு மாதம் அங்கு செவாரே நகரில் உள்ள ஓட்டலில் அவர்கள் நடத்திய தாக்குதல்களில் 13 பேர் கொல்லப்பட்டது நினைவுகூரத்தக்கது.

ராடிசன் ஓட்டல்

இந்த நிலையில், அந்த நாட்டின் தலைநகரான பமாக்கோவின் மையப்பகுதியில் உள்ள அமெரிக்காவுக்கு சொந்தமான ‘ராடிசன் புளூ’ நட்சத்திர ஓட்டலில், நேற்று காலை உள்ளூர் நேரப்படி 7 மணிக்கு (இந்திய நேரம் மதியம் 12.30 மணி) 2 தீவிரவாதிகள் ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளுடன் காரில் சென்று இறங்கினர். அந்த கார், தூதர்களுக்கு உரிய நம்பர் பலகையுடன் கூடியதாகும்.

இந்த ஓட்டலில் துபாய் கம்பெனி ஒன்றில் பணியாற்றும் இந்தியர்கள் 20 பேர் நிரந்தரமாக தங்கி உள்ளனர். மேலும், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் இங்கு வந்து தங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

20 இந்தியர்கள் உள்பட 170 பேர்…

இந்த ஓட்டலில் சென்று இறங்கிய உடனேயே தீவிரவாதிகள் சரமாரியாக சுடத்தொடங்கினர். குண்டுகளையும் வெடிக்க செய்தனர். இதனால் அங்கே பதற்றம் தொற்றியது. அங்கிருந்த பலர் உயிருக்கு பயந்து தப்பி ஓட்டம் பிடித்தனர்.

இதற்கு மத்தியில், ஓட்டலில் தங்கி இருந்த 140 விருந்தினர்கள், 30 ஊழியர்கள் என 170 பேரை பணயக்கைதிகளாக தீவிரவாதிகள் பிடித்து ஓட்டலின் 7-வது தளத்திற்கு கொண்டு சென்று அடைத்தனர். அவர்களில் துபாய் கம்பெனியில் பணியாற்றி வந்த 20 இந்தியர்கள், சீன நாட்டினர் 10 பேர், துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள் 6 பேர் அடங்குவர். அமெரிக்க அதிகாரிகளும், பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருக்கலாம் என சொல்லப்பட்டது. குறிப்பிட்ட மத நூலில் இருந்து வாசகங்களை சொன்ன 20 பேரை மட்டும் பிணைக்கைதிகளாக பிடிக்காமல் தீவிரவாதிகள் தப்பிக்க விட்டு விட்டனர்.

தீவிரவாதிகள் தாக்குதல் குறித்த தகவல் அறிந்ததும் போலீஸ் படையினர், ராணுவ வீரர்கள், ஐ.நா. அமைதிப்படையினர், பிரான்ஸ் சிறப்பு படையினர் அங்கு விரைந்தனர். ஓட்டல் பகுதியை அவர்கள் சுற்றி வளைத்தனர். தீவிரவாதிகளுக்கு எதிராக அவர்கள் கடுமையான தாக்குதல் தொடுத்தனர். அவர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டை காரணமாக அந்த பகுதி போர்க்களமாக மாறி, வெடிப்பு சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.

அனைவரும் மீட்பு

இந்த தாக்குதலில் மாலி சிறப்பு அதிரடிப்படை கமாண்டோக்கள் இணைந்தனர். அமெரிக்க சிறப்பு படையினரும் உதவினர். அவர்கள் அனைவரும் தாக்குதல் நடத்தி 20 இந்தியர்கள் உள்பட அனைத்து பணயக்கைதிகளையும் பத்திரமாக மீட்டனர்.

20 இந்தியர்களும் மீட்கப்பட்டு விட்டதை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இதே போன்று ஏர் பிரான்ஸ் விமான நிறுவனத்தின் சிப்பந்திகள் 12 பேர் வெற்றிகரமாக மீட்கப்பட்டு விட்டதாக அந்த நிறுவனம் கூறுகிறது.

27 உடல்கள் கிடந்தன

பல மணி நேரமாக நடந்த சண்டையின் முடிவில், 2 தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதை மாலி நாட்டு ராணுவம் தெரிவித்தது. சண்டை முடிந்த பிறகு, ஓட்டலுக்குள் போய்ப் பார்த்தபோது, 27 பேரின் உடல்கள் கிடந்தன. அவை மீட்கப்பட்டன.

இதற்கிடையே சாத் நாட்டுக்கு மாநாடு ஒன்றில் பங்கேற்க சென்றிருந்த மாலி அதிபர் இப்ராகிம் பாவ்பாக்கர் கெய்ட்டா தனது பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு நாடு திரும்பினார்.

அதே வெள்ளிக்கிழமை

கடந்த வெள்ளிக்கிழமை பாரீஸ் நகரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 129 பேரை கொன்று குவித்தனர். அதே வெள்ளிக்கிழமையில்தான் நேற்று மாலி ஓட்டலில் தீவிரவாதிகள் முற்றுகையிட்டு, தாக்குதல்கள் தொடுத்து, 170 பேரை பணயக்கைதிகளாக சிறை பிடித்தது குறிப்பிடத்தக்கது. இதனால், இரு தாக்குதல்களும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவையா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.