Aadhaar-like unique identification numbers for cows?

நாடு முழுவதும் உள்ள பசுகளுக்கு விரைவில் ஆதார் எண்ணுடன் கூடிய ஆதார் அட்டை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பசுக்களுக்கும் அதன் கன்றுகளுக்கும் தனித்தனியாக ஆதார் எண்கள் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் கூறுகிறது.

பால் கறக்கும் பருவத்தை கடந்த மாடுகளை நல்ல வகையில் பராமரிப்பதற்காகவும், விவசாயிகளின் துயர்களைத் துடைப்பதற்காகவும் மேலும் பல திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

பசுக்களைப் பாதுகாப்பது அவசியம் என்பதுடன் பங்களாதேஷூக்கு மாடுகள் கடத்தப்படுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் அளித்துள்ள விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின்படி 12 இலக்க எண்களைக்  கொண்ட வில்லைகள் மாடுகளின் காது பகுதிக்குள் பொருத்தப்படும் எனத் தெரிகிறது. இந்த எண்ணைக் கொண்ட மஞ்சள் நிற அட்டைகள் மாட்டின் உரிமையாளரிடம் வழங்கப்படும். அதில், மாட்டின் வயது, பால் கறக்கும் திறன், உடல்நிலை, மருந்துகளுக்கான தேவை உட்பட அனைத்து விவரங்களும் இணையதளத்திலேயே பதிவேற்றம் செய்யப்பட்டு விடும். அதன் படி மாடுகள் கடத்தப்பட்டாலும், காணாமல் போனாலும் தேடித் தடுப்பதற்கு இந்தத் தகவல்கள் உதவியாக இருக்கும்.

நவீன முறையில் நாட்டின் பால் உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பெருக்கவும் இந்தத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துவதாகவும், இதற்காக லட்சக்கணக்கான தொழில்நுட்பப் பணியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் தி எகனாமிக்ஸ் டைம்ஸ் உள்ளிட்ட ஏடுகளில் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.