_MG_1630(1)

 

சூர்யா, அமலா பால் நடிக்க, பசங்க பாண்டியராஜ் இயக்கும் “பசங்க 2” படம் வரும் டிசம்பர் 4ம் தேதி வெளியாகி இருக்கிறது. சூர்யா, பாண்டிராஜ் ஆகியோர் கூட்டணி என்பதுடன் குழந்தைகளின் மனநிலையை விளக்கும் படம் என்பதாலும் பெரும் எதிர்பார்ப்பை இப்படம் ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் இய்ககுநர் பாண்டிராஜூடன் பேட்டி.

 பசங்க 1 படத்துக்கும் பசங்க 2 படத்துக்கும் என்ன வித்தியாசம்?

பசங்க 1 படத்தில் நான், என் நண்பர்கள்  என்னுடைய ஆசிரியர்கள் நாங்கள் ரசித்த உலகை படமாக ரசிகர்களுக்கு அளித்தேன்.

பசங்க 2, இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. முதல் பசங்களில் நடித்த கதாபாத்திரமும் இதில் இடம்பெறவில்லை.

இந்த படம், நகரத்தில் பல அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழும் நம் குழந்தைகளை பற்றியது. இந்த நகரத்து குழந்தைகளின் உலகத்தையும் அவர்கள்  பயிலும் கல்வி முறையைப் பற்றியும் அதில் எந்த மாதிரியான கல்வி முறை சிறந்தது என்றும் காட்டியுள்ளோம்.

இந்த படத்தின் கதை உங்களுக்குள் எப்போது உருவானது?

இந்த படத்திற்கான கதை “வம்சம்” திரைப்படம் முடிந்த பொழுதே மனதில் உருவாகிவிட்டது. ஆனால் இந்த மாதிரியான கதையை  உடனே எடுத்து மக்களுக்கு சொல்ல முடியாது அதைப்பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு இருக்க வேண்டும். அதே சமயத்தில் படத்தில் சொல்லிய கருத்துகளின்  நம்பகத்தன்மை குறையாமல் இருக்க வேண்டும் அதனால் சுமார் இரண்டு வருடம் ஆய்வு நடத்த வேண்டியது அவசியமாக இருந்தது. அந்த சமயங்களில் சும்மாவும் இருக்க முடியாது என்பதால் மற்றொரு பக்கம் “கேடி பில்லா கில்லாடி ரங்கா” படத்தையும் இயக்கினேன்.

 

_MG_5185(1)

நிறைய ஆய்வு செய்திருக்கிறீர்கள் என்றால், கனமான படமாக இருக்குமோ?

(சிரிக்கிறார்) கனமான விசயத்தைச் சொல்லும் படம்தான். “அட்டன்சிவ் டைபர் ஹைபர் டிஆக்டிவ்” என்பது இன்றைய காலகட்டத்தில் வளரும் குழந்தைகளுக்கு அதிகமாக இருக்கிறது. அப்படிப்பட்ட குழந்தைளைப் பற்றிய ஆய்வுகள் அதிகமாக கதைக்கு தேவைப்பட்டது. இப்படி பட்ட குழந்தைகள் நோயினால் பாதிக்கப் பட்ட குழந்தைகள் கிடையாது இவர்கள் “சூப்பர் கிட்ஸ்” அதித புத்திசாலிகள்  என்றும் சொல்லலாம்.

ஏன் என்றால் சாதாரணமாக மனிதனின் “ஐகியு ” 110 என்றால் அந்த குழந்தைகளுக்கு “ஐகியு ” 120, 130 இருக்கும். அவர்களை நாம் சாதாரணமாக பார்த்தால் எப்போதும் சுறுசுறுப்பாக அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு துறுத்துறு வென்று இருப்பார்கள். அவர்களைப் பற்றிய படம் என்பதால் ஆய்வில் ஏதாவது இதுபோன்ற படம் வந்திருக்கிறதா என்று பார்த்தோம் அப்படி எதுவும் இதுவரை வரவில்லை. மாதிரிப் படங்கள் இல்லாத காரணத்தால் அதே போல் இருக்கும் குழந்தைகளை  சந்தித்து அவர்களை பற்றிய விவரங்களை ஆய்வில் சேகரித்தோம் அதற்காக இரண்டு உதவி இயக்குனர்களை பிரத்யேகமாக வைத்து அதிகமாக மருத்துவர்கள், ஆசிரியர்கள், பள்ளிகள் மற்றும் குழந்தைகளை பார்த்து அவர்களுடன் கலந்துரையாடி விவரங்களை சேகரித்தோம். அதன் பின்னே படத்தை எடுக்க ஆரம்பித்தோம்.

ஆனால் படத்தில் சொல்லப்படும் விசயம் பெரிதாக இருந்தாலும், நகைச்சுவை இழையோட, குழந்தைகளின் லூட்டியுடன் ஜாலியான படமாகத்தான் இருக்கும். பயப்பட வேண்டாம்.

இந்த படத்தில் சூர்யாவின் ரோல் என்ன?

சூர்யா ஒரு குழந்தைகள்  மருத்துவராக வருகிறார். குழந்தைகளை பற்றியும் குழந்தைகளின் எதிர்பார்ப்புகள் மற்றும் நாம் அவர்களை எவ்வாறு பார்க்க வேண்டும் என்றும் ரசிகர்களுக்கு விரிவாக எடுத்துரைப்பார் அதுவும் அறிவுரை சொல்வது போல் இல்லாமல் ரசிக்கும் படியாக தான் இருக்கும். எடுத்துக்காட்டாக குழந்தைகள் சேட்டைகள் செய்யும் அதை நாம் நம் சிறுவயதில் நம் அப்பா, அம்மாவிடம் செய்த தருணங்களை நினைவுபடுத்தும் விதமாக எடுத்துக் கொள்ள வேண்டும் அதை விட்டுவிட்டு நாம் ஏன் கோபப்பட வேண்டும் என்பதை எடுத்துரைப்பது தான் சூர்யாவின் கதாபாத்திரம்.

 

_MG_7820

 

சூர்யாவுக்காக படத்தில் மாற்றங்கள் ஏதும் செய்தீர்களா..

இல்லை. அதை சூர்யாவும் விரும்பமாட்டார். இது முழுக்க முழுக்க பசங்களுக்கான திரைப்படம் சூர்யா,அமலாபால் போன்றவர்கள் சில முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார்கள் அவ்வளவு தான். ஆனால் இதுபோன்ற கதைகளில் சூர்யா போன்ற நாயகர்கள் நடிப்பது மிகப்பெரிய விசயம். ஏனென்றால் அவருடைய  ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்பது அதிகமாக இருக்கும் அவர்களின் ஆதரவு மிகவும் முக்கியம். இந்த முறை தெலுங்கு இசை வெளியிட்டு விழாவிற்க்கு போனபோது சூர்யாவிற்கு தமிழுக்கு இணையாக தெலுங்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள் அவரது பெயரை மேடையில் உச்சரிக்கும் போதே அவ்வளவு கர ஓசைகள், ஆரவாரங்கள் என்று அரங்கமே அதிர்ந்தது. நான் பயணத்தில் சூர்யாவிடம் கூறினேன் சீக்கிரமாக நேரடி தெலுங்கில் நடித்து உங்களுடைய ரசிகர்குக்கு விருந்தளிக்க  வேண்டும் என்றேன் அப்படிப்பட்ட நடிகர் குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுத்து நடித்திருப்பது பெருமைக்குரியது.

இந்த படத்தை எனது தயாரிப்பு நிறுவனத்தில் முதலில் துவங்கினாலும் நாம் சொல்வது ஒரு நல்ல கருத்து, நல்ல படம் இதை பணத்துக்காக இல்லாமல் ஒரு நல்ல விழிப்புணர்வுக்காக  இருக்க வேண்டும்  என்பதால் இதை சூர்யாவின் வாயிலாக கொண்டு செல்லும் போது இன்னும் அதிக மக்களை சென்றடையும் என்ற நல்ல எண்ணத்தில் தான் நானும் சூர்யாவும் இந்த படத்தில் இணைந்து பணியாற்றினோம்.

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா நடிப்பதாக செய்தி வந்தது. ஆனால் பிறகு அமலா பால் நடித்திருக்கிறார்.. ஏன் இந்த மாற்றம்

சூர்யாவுக்கு ஜோடியாக ஒரு கதாபாத்திரம் கதைக்கு தேவைப்பட்ட நேரத்தில் ஜோதிகாவை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்தோம் அவரும் ஒப்புக்கொண்டார். ஆனால் அவர் அப்போது 36 வயதினிலே படத்தில் நடித்துக் கொண்டு இருந்ததால் இதில்  நடிக்க முடியவில்லை. பிறகு, சூர்யாவுக்கு ஜோடி யார் என்று யோசிக்கையில் அமலாபால் நடித்தால் சரியாக இருக்கும் என்பதால் இயக்குநர் விஜயிடம் பேசினேன் அவர் திருமணத்திற்க்கு பிறகு நடிக்க மாட்டேன் என்றார் இருந்தாலும் குழந்தைகள் படம் என்பதால் கேட்டு பார்க்கிறேன் என்று அமலாபாலிடம் பேசினார். குழந்தைகள் படம் என்பதால் அமலாபாலும் நடிக்க ஒப்புக்கொண்டார். அதே போல் பிந்துமாதவி அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் இவர்கள் அனைவரும் இணைவதற்கு காரணம் ஒன்று தான் குழந்தைகளுக்கான படம் என்ற ஒன்றுதான்.

குழந்தைகளுக்கான படத்தில் ஆர்வமாக இருக்கிறீர்கள். குறிப்பிட்ட காரணம் இருக்கிறதா?

(சிரிக்கிறார்) எனக்கும் இரண்டு குழந்தைகள்  இருக்கிறார்கள். ஒருவன் பிளே ஸ்கூல் போகிறான் இன்னொருவன் யு கே ஜி படிக்கிறான். இருவரும் அளவுக்கு அதிகமாக சேட்டைகள் செய்வார்கள் அவர்களுக்கு வேலையே எங்களது வீட்டு சுவரில் பேனா, பென்சில் வைத்து கிறுக்குவது தான். நாங்கள் அவர்களுக்கு கிறுக்க பென்சில் போன்றவற்றை வாங்கி கொடு்ததுக்கொண்டே இருக்கிறோம். அந்த குழந்தை கிறுக்கல்கள்தான் குழந்தைகள் வெளியூர் சென்றிருக்கும்போது அந்த ஓவியங்கள் எங்களிடம் பேசுகின்றன அதுதான் ஆனந்தம். குழந்தைகளிடம் வீட்டிலும் சரி பள்ளியிலும் சரி  எதையும்  திணிப்பது கிடையாது அவனுக்கு பிடித்து இருந்தால் மட்டுமே பள்ளிக்கு அனுப்புகிறேன் என்ன தரம் வாங்கினாலும் அவனை பாராட்டுகிறேன்  அதை அவன் ரசிக்கிறான் இப்பவே அவனுக்கு இசையில் அதிக ஆர்வம் உள்ளது. எனது படத்தின் பாடல்களை அவனுக்கு போட்டுகாட்டுவேன் அவன் ஆடினால் பாட்டு ஹிட். இல்லை என்றால் பாட்டை மாத்து என்று சொல்லிவிடுவான்.

பாண்டிராஜ்
பாண்டிராஜ்

பசங்க 2ல் உங்கள் பிள்ளைகளுக்கு பிடித்த பாடல் எது

ப: சோட்டா பீமா பாடல் மிகவும் பிடிக்கும் வீட்டிற்கு போனால் அந்த பாடலைத்தான் போட்டு ஆடுவான்.

உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் கொடுக்கும் சுதந்திரத்தை உங்கள் அப்பா உங்களுக்கு கொடுத்தாரா..

இல்லை. என் அப்பா எனக்கு இந்த அளவுக்கு சுதந்திரம் கொடுத்தது கிடையாது நான் சுமாராகத்தான் படிப்பேன். அதனால் என்னை அடி பின்னி எடுத்துவிடுவார் எப்போதும் என்னை என்னுடன் படித்த ஆசிரியர் மகனுடன் ஒப்பிட்டு பேசுவார். அவர் பள்ளிக்கு போகாத காரணத்தால்  அவருடைய ஆசைகளை என்னிடம் திணித்து நிறைவேற்ற ஆசைப்பட்டார். நான் சினிமாவுக்கு போகிறேன் என்றேன் அவர் ஜாதகம் பார்த்து விட்டு உனக்கு இரும்பு கடைதான் சரியாக வரும் நீயும் அண்ணனை போல் கடை வைத்துவிடு என்றார். அப்பாவை எதிர்த்து சினிமாவிற்கு வந்தேன். நன்றாகத்தான் இருக்கிறேன். ஆகவே பிள்ளைகளிடம் நமது கருத்தை திணிக்கக்கூடாது என்பதற்கு நானே உதாரணம்.