நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் பெயரை ’என்.எல்.சி. இந்தியா லிமிடெட்’ஆக்க ராமதாஸ் எதிர்ப்பு
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் பெயரை ’என்.எல்.சி. இந்தியா லிமிடெட்’ என்று மத்திய அரசு மாற்றுவதற்கு செய்யும் முயற்சிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’இந்தியாவின் புகழ்பெற்ற பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பெயரை என்.எல்.சி. இந்தியா லிமிடெட் என்று பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்கான தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தும் பணியில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது. இந்த நடவடிக்கை பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துக்கு மிகப்பெரிய பாரம்பரியமும் வரலாறும் உண்டு. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் மத்திய அரசால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதல்ல. நெய்வேலி மக்களின் தியாகத்தாலும், நாட்டுப்பற்றாலும் உருவாக்கப்பட்டது ஆகும். 1935 ஆம் ஆண்டு ஜம்புலிங்க முதலியார் என்பவர் பாசனத்திற்காக ஆழ்துளை கிணறு அமைத்த போது தான் பூமிக்கு அடியில் பழுப்பு நிலக்கரி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள 36 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு சொந்தமான 50 ஆயிரம் ஏக்கர் நிலங்களை தாரை வார்த்ததன் பயனாகத் தான் 1956 ஆம் ஆண்டில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் செயல்படத் தொடங்கியது. முதல் 20 ஆண்டுகளுக்கு, அதாவது 1975ஆம் ஆண்டு வரை நட்டத்தில் இயங்கிய இந்த நிறுவனம் கடந்த 41 ஆண்டுகளாக தொடர்ந்து லாபம் ஈட்டுகிறது. கடந்த ஆண்டு இந்த நிறுவனத்தின் லாபம் ரூ.1579 கோடியாக அதிகரித்துள்ளது.
நெய்வேலி மற்றும் அதன் சுற்றுப்புற மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை தியாகம் செய்து உருவாக்கிய இந்த நிறுவனம் எந்த ஒரு கட்டத்திலும் அப்பகுதி மக்களின் நலனில் அக்கறை காட்டியதில்லை. ஆனாலும் அந்நிறுவனத்திற்கு தமிழக மக்கள் ஆதரவு அளித்து வருவதற்கு காரணம் தமிழகத்தின் அடையாளமாக நெய்வேலி என்ற பெயரை தாங்கி நிற்கிறது என்பது தான்.
ஆனால், அந்த அடையாளத்தை அழிக்கும் வகையில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பெயரை என்.எல்.சி. இந்தியா லிமிடெட் என்று மாற்றவிருப்பதாகவும், இதற்கான தீர்மானத்தை ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? என்பதை வாக்குச்சீட்டில் பதிவு செய்து அஞ்சலில் அனுப்பி வைக்கும்படி பங்குதாரர்களை நிர்வாகம் கேட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கான வாக்குச் சீட்டுகளும் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. இம்முயற்சியை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஏற்கனவே 10 ஆண்டுகளுக்கு முன் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பெயரை நேஷனல் பழுப்பு நிலக்கரி நிறுவனம் என்று பெயர் மாற்றம் செய்ய முயற்சிகள் நடந்த போது, அதற்கு நான் கடும் எதிர்ப்பு தெரிவித்ததன் விளைவாகத் தான் பெயர் மாற்றத் திட்டம் கைவிடப்பட்டது. அப்போது கைவிடப்பட்ட திட்டத்தை இப்போது நிறைவேற்றிக்கொள்ள மத்திய அரசும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன நிர்வாகமும் முயன்றால் அதை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் அடையாளத்தை மாற்றும் முயற்சியில் மத்திய அரசு பல ஆண்டுகளாகவே ஈடுபட்டு வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரும்பாலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் இந்த நிறுவனத்தின் தலைவர்களாக நியமிக்கப்பட்டு வந்தனர். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே தலைவர்களாக பதவி வகிக்கின்றனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்நிறுவனத்தின் தலைவர்களாக இருந்த போது, நிறுவன ஊழியர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்ட உரிமைகள் உரிய காலத்தில் வழங்கப்பட்டன. தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யத் தேவையில்லை என்ற சூழல் நிலவியது. தமிழர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகள் கிடைத்தன. அந்த காலகட்டத்தில் தான் நிலம் வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று எனது தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டதன் பயனாக நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகை 5 மடங்காக உயர்த்தி வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி, நிலம் வழங்கியவர்களில் ஒரு பிரிவினருக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்பட்டது. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாகிவிட்டது.
வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் நிறுவனத் தலைவர்களாக பொறுப்பேற்கத் தொடங்கிய பின்னர் நிர்வாகத்திலும், தொழிலாளர்களிலும் தமிழர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டு விட்டது. இப்போதைய நிர்வாகத்தில் மொத்தமுள்ள 10 இயக்குனர்களில் தமிழக அரசின் பிரதிநிதியாக இருக்கும் மின்துறை செயலாளர் தவிர இருவர் மட்டும் தான் தமிழர்கள் ஆவர். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் திட்டமிட்டு வட இந்தியாவிலிருந்து மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தமிழர்களுக்கு அதிகாரி பதவி மறுக்கப்படுகிறது. உதாரணமாக சுரங்கங்களில் பணியாற்றும் இளநிலை பொறியாளர்கள் 98 பேரில் இருவர் மட்டும் தான் தமிழர்கள் ஆவர். இதே நிலை நீடித்தால் அடுத்த 10 ஆண்டுகளில் இந்த நிறுவனத்தில் மொத்த பணியாளர்களில் தமிழர்களின் அளவு 40%-க்கும் கீழ் குறைந்து விடும். இவ்வாறாக நிர்வாகத்திலும், பணியாளர்களிலும் தமிழர்களின் எண்ணிக்கையை குறைத்த மத்திய அரசு இப்போது அடையாளத்தை அழிக்க முயல்கிறது.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பெயரை மாற்ற வேண்டிய தேவை எதுவும் இப்போது இல்லை. எனினும் உள்நோக்கத்துடன் மத்திய அரசும், நிறுவன நிர்வாகமும் மேற்கொள்ளும் இந்த முயற்சியை நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5% பங்குகளை வைத்திருக்கும் தமிழக அரசு இதுவரை எதிர்க்கவில்லை. மக்கள் நலப் பிரச்சினைகளில் ஜெயலலிதா அரசின் அக்கறை இவ்வளவு தான். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பெயரை மாற்றும் திட்டத்தை நிறுவன நிர்வாகம் உடனடியாக கைவிடுவதுடன், நிறுவனத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். இல்லாவிட்டால் பாதிக்கப்பட்ட மக்களைத் திரட்டி பா.ம.க. சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்; கோரிக்கைகளை வென்றெடுப்போம் என எச்சரிக்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.