நாம் தமிழர் கட்சியின் 314 பக்க தேர்தல் அறிக்கை – முக்கிய அம்சங்கள்

Must read

seemaan
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழக நலனுக்காக மேற்கொள்ள இருக்கும் நலத்திட்டங்கள் பற்றிய அறிக்கை புத்தகமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் ஆட்சியின் செயல்பாட்டு வரைவு என்ற தலைப்பில் 314 பக்கங்கள் அடங்கிய வண்ண தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டார். அதில் திருவள்ளுவர், சுபாஷ் சந்திரபோஸ், காமராஜர், பாரதிதாசன், விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் ஆகியோரின் படங்களும் இடம் பெற்றுள்ளன.
வரைவு அறிக்கையில் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழக அரசின் முத்திரையாக திருவள்ளுவர் படம் பொறித்த முத்திரையும், தமிழ்நாட்டு கொடியாக மீன், புலி, வில்அம்பு (சேர, சோழ பாண்டியர் கொடி) இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் 49 முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. வரைவு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
* சென்னை தலைநகராக இருப்பதால் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு அனைத்துமே ஒரே இடத்தில்தான் குவிந்திருக்கிறது. இதனால் அனைத்து மக்கள் சென்னையை நோக்கியே வருகிறார்கள். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதை கருத்தில் கொண்டு தமிழக தலைநகரை சென்னை, திருச்சி, கோவை, மதுரை, கன்னியாகுமரி ஆகிய 5 ஆக பிரிக்கப்படும். இதில் திரைகலை, துறைமுகம், கணினி தொழில்நுட்பத்தின் தலைநகராக சென்னை விளங்கும்.
செயலாண்மை வசதிக்கான தலைநகராக திருச்சியும், தொழில் வர்த்தக தலைநகராக கோவையும், மொழி கலை பண்பாட்டுக்கான தலைநகராக மதுரையும், தமிழர் மெய் இயலுக்கான தலைநகராக கன்னியாகுமரியும் விளங்கும்.
நீர்வளத்தை பெருக்க நாம் தமிழர் ஆட்சியில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். நீர்நிலைகளை சுற்றி மரங்கள் நடப்படும். புதிதாக ஏரிகள் வெட்டப்பட்டு கரிகால்சோழன், ராஜராஜ சோழன், குந்தவை நாச்சியார், நம்மாழ்வார் ஆகியோர் பெயர்கள் சூட்டப்படும்.
குளிர்பான தொழிற்சாலைகளுக்காக 803 கோடி லிட்டர் தண்ணீர் செலவாகிறது. எனவே அந்த தொழிற்சாலைகளுக்கு தடை விதிக்கப்படும். தூய்மையான குடிநீர் அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்கப்படும்.
விவசாயம் தமிழக அரசின் பணியாக மாற்றப்படும். ரசாயன உரங்கள் இல்லாமல் இயற்கை மேலாண்மை மேற்கொள்ளப்படும். பனை பொருள் உற்பத்தி சார்ந்த வேலைவாய்ப்பு பெருக்கப்படும். தொழில் சார்ந்த ஒருங்கிணைந்த பண்ணைகள் உருவாக்கப்படும்.
இதற்கு முந்தைய அரசுகள் தமிழர்களை இலவசத்துக்காக கையேந்தும் நிலைக்கு தள்ளிவிட்டனர். எனவே நாம் தமிழர் ஆட்சியில் இலவச திட்டங்கள் நிறுத்தப்படும்.
வெளிப்படையான நிர்வாகம் இருக்கும். மது, புகையிலை ஒழிக்கப்படும். போக்குவரத்து கொள்கையில் மாற்றம் கொண்டு வரப்படும். மருத்துவத்துக்கும், கல்விக்கும் மாற்று மின் உற்பத்திக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
உழவர்கள், மீனவர்கள், வணிகர்கள் நலன்காக்கும் வகையில் திட்டங்கள் மேம்படுத்தப்படும். அமைப்பு சாரா தொழிலாளர் நலம் மேம்படுத்தப்பட்டு கட்டுமான தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
தமிழகத்தில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 55 ஈழத்தமிழர்கள் அகதிகளாக உள்ளனர். ஈழ தமிழர்களின் நலன்காக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். மேலும் அவர்கள் மீதான ‘கியூ’ பிரிவு போலீஸ் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளின் விசாரணை நீக்கப்படும். அவர்களுக்காக தனி நலவாரியம் உருவாக்கப்படும்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ¼ நூற்றாண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், நளினி, முருகன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் மாநில அரசுக்கான அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்யப்படுவார்கள்.
புதிய துறைமுக கொள்கை உருவாக்கப்படும். தமிழகத்தில் சென்னை, எண்ணூர், ராயபுரம், காட்டுப்பள்ளி, நாகப்பட்டினம், திருக்குவளை, தூத்துக்குடி ஆகிய 8 இடங்களில் துறைமுகங்கள் இருக்கின்றன. இப்பகுதிகளில் கழிவுகள் தேங்காமல் கடல்வாழ் உயிரினங்கள் இயற்கையாக வாழ வழிவகை செய்யப்படும்.

More articles

Latest article