எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களின் முகலூல் பதிவு:

 தேவாரம் - ப.கோ. பிரபாகர்
தேவாரம் – ப.கோ. பிரபாகர்

 
“நீண்ட வருடங்களாக கம்பீரமான, கண்ணியமான காவல்துறை அதிகாரியான திரு.வால்டர் தேவாரத்தைச் சந்திக்க ஆசை. அது தோழி வசந்தி ஆதித்தன் மூலம் நிறைவேறியது.
என் கதைகளில் ஒரு கம்பீரமான போலீஸ் அதிகாரியை வர்ணிக்கும்போது இவர்தான் மனக்கண்ணில் வந்து போவார். சிவாஜி கணேசன் இவரின் நடை, உடை , பாவனைகளைத்தான் தங்கப் பதக்கம் படத்தில் நடித்தபோது வெளிப்படுத்தியதாகச் சொல்லியிருக்கிறார்.
நக்சலைட் விவகாரம், தஞ்சையில் கீழ்வெண்மணி கலவரம், வீரப்பன் தேடுதல் வேட்டை, சென்னையில் மீனவர்கள் கலவரம் என்று பல முக்கிய நிகழ்வுகளில் இவர் பிரபலம். அத்தனையையும் பற்றிப் பேசினோம்.

ஒரு கேள்வி கேட்டேன்,” நீங்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் பல குற்றவாளிகள் இறந்திருக்கிறார்கள். சட்டப்படி அது உங்கள் கடமை என்றாலும் ஒரு மனிதராக நான் போலீஸ் வேலைக்கு வந்ததால்தானே சிலரின் உயிரைப் பறிக்க நான் காரணமாக இருந்திருக்கிறேன் என்கிற லேசான குற்ற உணர்வு உங்கள் அடி மனதில் எப்போதாவது தோன்றியதுண்டா?”
சிரித்தபடி சொன்னார்,” நான் சுட்டவர்கள் அனைவரும் சுடப்படவேண்டிய கடுமையான குற்றவாளிகள். அதனால் அந்த மாதிரி ஒரு குற்ற உணர்வு எனக்கு இன்றுவரை  இல்லை. ஒரே ஒரு சம்பவத்திற்காக எனக்கு வருத்தம் இருக்கிறது.மெரினாவில் ஆக்கிரமித்திருந்த மீனவக் குப்பத்தை அகற்ற அரசு முடிவு செய்தபோது மிகப் பெரிய போராட்டம் வெடித்தது. ஆயிரக்கணக்கான மீனவர்கள் பயங்கரமான ஆயுதங்களுடன் குடிசை மாற்று வாரியம் அலுவலகத்தைத் தாக்க வந்தபோது பாதுகாப்புப் பணியில் இருந்த நான் எச்சரித்துவிட்டு பிறகு மூன்று பேரை சுட்டு கலவரத்தை நிறுத்த வேண்டியிருந்தது. அந்த சம்பவம் நிகழ்ந்துகொண்டிருந்த அதே நேரம் சுப்ரீம் கோர்ட் மீனவர்களுக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. அந்தச் செய்தி வந்து சேர்வதற்குள் அந்தக் கலவரம் வெடித்தது. அந்தச் செய்தி சற்று முன்னதாகக் கிடைத்திருந்தால் மூன்று உயிர்கள் அநாவசியமாக பறி போயிருக்காது.”
மிக எளிமையாக நட்புடன் புன்னகை மாறாமல் இப்படி பல சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். அவரின் அனுபவங்களை ஒரு புத்தகமாக எழுதச் சொன்னேன்.”