நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா பிரதமரிடம் புகார்

சென்னை

டிகர் சத்யராஜ் மகள் திவ்யா தனக்கு மருந்து கம்பெனி பிரதிநிதிகள் தவறான மருந்தை அனுமதிக்காததற்காக கொலை மிரட்டல் விடுப்பதாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

புகழ்பெற்ற நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா.  இவர் சென்னையில் உள்ள மருத்துவ மனை ஒன்றில் ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார்.

திவ்யாவிடம் அமெரிக்காவை சேர்ந்த ஆண், பெண் இருவர் மருந்துப் பிரதிநிதி என தங்களை அறிமுகம் செய்துக் கொண்டு சந்தித்துள்ளனர்.   தங்களின் கம்பெனி மருந்துகளை நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.   அவைகள் மல்ட்டி விட்டமின் மருந்துகள் எனவும் எடையைக் குறைக்க உபயோகிக்கலாம் எனவும் கூறி உள்ளனர்.

அவற்றை பரிசோதனைக்கு அனுப்பினார் திவ்யா.  பரிசோதனையில் அம்மருந்துகளில் விட்டமின்கள் ஓவர் டோசாக இருந்தது தெரிய வந்துள்ளது.   அதனால் அம்மருந்துகளை திவ்யா நிராகரித்து விட்டார்.   அவருக்கு லஞ்சமாக ஒரு பெரும் தொகையை கொடுப்பதாக அந்த பிரதிநிதிகள் ஆசை காட்டி உள்ளனர்.   அதற்கும் திவ்யா உடன்படாததால் கொலை செய்வதாக மிரட்டியுள்ளனர்.

அச்சமடையாத திவ்யா அவர்களை மருத்துவமனையை விட்டு துரத்தி இருக்கிறார்.  இது குறித்து விவரமாக பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.   அதில் இது போல ஆபத்து விளைவிக்கும் மருந்துகளை இந்தியாவுக்குள் அனுமதிக்ககூடாது எனவும், தன்னை மிரட்டியது பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

இது போல் தைரியசாலியான பெண்கள்தான் இன்றைய இந்தியாவுக்கு தேவை என செய்தி அறிந்த பலரும் பாராட்டி உள்ளனர்.


English Summary
Sathyaraaj's daughter Divya wrote a letter to PM for illicit drugs from US