v
 
 “இரண்டும் இரண்டும் நாலு என்பது பள்ளிக்கூட கணக்கு. இரண்டும் இரண்டும் இருபத்தியிரண்டு கூட ஆகலாம் என்பது அரசியல் கணக்கு. இங்கு வெற்றிதான் முக்கியம். அதை நிர்ணயிப்பது கூட்டணி தானே தவிர, கொள்கை அல்ல!”
–    மறைந்த வாழப்பாடி ராமமூர்த்தியை ஒரு  முறை நான் பேட்டி கண்டபோது அவர் சொன்னது.
சத்தியமான வார்த்தைகள் அவை என்பதை ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணிகள் நிரூபித்தே வருகின்றன.
வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிகளும் அதையே நிரூபிக்கின்றன. முதன் முதலாக கூட்டணியை அறிவித்த மக்கள் நலக்கூட்டணியும் கூட கொள்கைவழிவந்த கூட்டணி அல்ல. கூடங்குளம், தமிழ் ஈழம் உட்பட சில பிரச்சினைகளில் அவற்றுக்குள் கடும் முரண்பாடுகள் உண்டு.
தி.மு.கவைப் பொறுத்தவரை இதில் வெளிப்படையாகவே இருந்தது. அனைத்துக் கட்சிக்கும் அழைப்பு விடுத்தார் அதன் தலைவர் கருணாநிதி. இப்போது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணிக்கு அச்சாரம் போட்டிருக்கிறார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் “சுமை”யாகத் தெரிந்த காங்கிரஸ், இப்போது “சுகமாக” மாறிவிட்டது. 1967ல் ஆட்சியை இழந்தாலும் இன்னமும் கணிசமான வாக்குகளைக் கொண்டிருக்கிறது காங்கிரஸ். தவிர மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், பாஜகவுக்கு மாற்றாக இருப்பது அக்கட்சிதான். ஆக, அக் கட்சியுடன் கூட்டணி என்பது தி.மு.கவுக்கு பலமே.

கருணாநிதி - குலாம் கூட்டணி  சந்திப்பு
கருணாநிதி – குலாம் கூட்டணி சந்திப்பு

இப்போது எல்லோரது பார்வையும் விஜயகாந்த் பக்கம் இருக்கிறது. தனது தே.மு.தி.கவை எந்த கூட்டணியுடன் இணைக்கப்போகிறார் என்பதே “மில்லியன்” டாலர் கேள்வியாக இருக்கிறது.
மக்கள்நலக்கூட்டணியை விஜயகாந்த் விரும்பவில்லை என்பது வெளிப்படை. “அவங்க நல்லவங்கதான். ஆனா…” என்று ஏற்கெனவே இழுத்துவிட்டார் அவர். அவர் வரமாட்டார் என்பதற்கு பிறகே, “தொண்டர்கள் விரும்பினால், மக்கள் நலக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக போட்டியிட தயார்” என்று அறிவித்தார் வைகோ.
அ.தி.மு.க. கூட்டணியை அவர் விரும்பமாட்டார். அவர் விரும்பினாலும் அதிமுக தலைவர் ஜெயலலிதா விரும்பமாட்டார்.
தனித்து நின்று காயம்பட இனியும் அவர் தயாராக இல்லை.
ஆகவே, பா.ஜ.கவுடன் விஜகாந்த் கூட்டணி வைக்கலாம். அந்த கட்சியும் வழிமேல் விழிவைத்து காத்துக்கொண்டுதான் இருக்கிறது.  மத்தியில் ஆளும் கட்சி. வசதி வாய்ப்பான கட்சி. அதனுடன்  கூட்டணி வைத்தால் உடனடி “பலன்” கிடைக்கவே செய்யும். தவிர, விஜகாந்த் கேட்ட இடங்கள் கிடைக்கும்.
ஆனால் தே.மு.தி.க. – பா.ஜ.க. கூட்டணி அமைந்தால் வெற்றி வாய்ப்பு குறித்து யோசிப்பதே வீண் வேலை. தனித்து நின்ற போது இருந்த வாக்கு வங்கி, அதிமுக கூட்டணிக்குப் பிறகு தே.மு.திகவுக்கு இல்லை என்கின்றன கருத்துக்கணிப்புகள்.
தவிர, கடந்த 2014 பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. – பா.ம.க. – ம.தி.மு.க. – பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தே வெற்றி என்பது எட்டாக்கனி ஆகிவிட்டது. (இதர சிறு கட்சிகளை கணக்கில் கொள்ளத் தேவையில்லை.)
ஆகவே அதிகாரத்தை ருசிக்க வேண்டும் என்றால் பா.ஜ.க. கூட்டணி ஆகாது.
ஆகவே, தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியில் தே.மு.தி.கவை இணைத்துக்கொள்வே சரியான வாய்ப்பாக இருக்கும்.  “அப்படி கூட்டணி அமைந்தால் துணை முதல்வர் மற்றும் பத்து அமைச்சர்கள் வேண்டும்” என்று விஜயகாந்த் நிர்ப்பந்திப்பதாக ஏற்கெனவே தகவல்கள் உலவின. இதை கருணாநிதி ரசிக்க மாட்டார்.
கடந்த 2006 – 2011 ஆட்சி காலத்தில் காங்கிரஸ் தயவில் மைனாரிட்டி அரசாக இருந்தபோதே, தனித்தே அமைச்சரவை கண்டு ஆண்டும் முடித்தவர் கருணாநிதி. இத்தனைக்கும் மத்திய காங்கிரஸ் அரசில் இவரது கட்சி அங்கம் வைத்து அதிகாரத்தை ருசித்தது.
ஒருவேளை, “இப்போதைக்கு விஜகாந்தின் நிபந்தனைகளை ஒப்புக்கொள்ளலாம். தேர்தல் முடிவுக்கேற்ப பிறகானதை தீர்மானிக்கலாம்” என்று கருணாநிதி எண்ணக்கூடும்.  அப்படி ஓர் சூழல் ஏற்பட்டால், தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியில் தே.மு.தி.க. இணையக்கூடும்.
அதன்படி கூட்டணி அமைந்தால், அது தி.மு.க. – தே.மு.தி.க. இரு கட்சிகளுக்குமே ஆபத்தாக போகும் வாய்ப்பு உண்டு.  இதற்கு சரியானதொரு உதாரண், கடந்த 1980ம் ஆண்டைய சட்டமன்றத் தேர்தல்.
அத் தேர்தலில் தி.மு.கவும் காங்கிரஸும் சரி பாதி இடங்களில் போட்டியிட்டன. அதிக இடத்தில் வெல்லும் கட்சியிலிருந்து முதல்வரை தேர்ந்தெடுக்கலாம் என்று  முடிவு செய்தன.
ஆகவே எதிரணியை வீழ்த்துவதை விட, இக் கட்சிகள் ஒன்றை ஒன்று காலை வாரும் வேலையைச் செய்தன.
அந்தத் தேர்தலில் இக் கூட்டணி தோற்றதற்கு இது ஒரு முக்கிய காரணம்.
இப்படி ஒரு ரிஸ்க் எடுத்து, தி.மு.கவுடன் கூட்டணி வைப்பாரா,  உடனடி “பலனா”வது கிடைக்கும் என்று பா.ஜ.கவுடன் சேர்வாரா…
என்ன செய்யப்போகிறார் விஜயகாந்த்?
–  டி.வி.எஸ். சோமு