என்.சொக்கன்
1
செயலை ஆள்பவர் செயலாளர், எனில் பொருளை ஆள்பவர் பொருளாளர். அதாவது, ஓர் இயக்கத்தின் பணவரவு, செலவு போன்ற விவரங்களைக் கவனித்துக்கொள்கிறவர்.
ஆனால், ‘பொருள்’ என்பதன் பொருள், காசு, துட்டு, பணம், Moneyதானா?
அறிவியலைப்பொறுத்தவரை, இந்த உலகமே பொருளால் ஆனதுதான். அங்கே ஓர் இடத்தை நிரப்பும் எதுவும் பொருள்தான். அதாவது, பேனா, பென்சில், பொம்மை, தோசை, இட்லி என்று கண்ணுக்குத் தெரியக்கூடிய, கையால் தொடக்கூடியவைமட்டும் பொருள்கள் அல்ல, நமக்குத் தென்படாத, ஆனால் ஓர் இடத்தை நிரப்பிக்கொண்டிருக்கிற எதுவும் பொருளே. இவற்றைப் பருப்பொருள் என்பார்கள். திடப்பொருள், திரவப்பொருள், வாயுப்பொருள் என்று பிரிப்பார்கள்.
ஆன்மிகத்தில் மெய்ப்பொருள் உண்டு. திருமழிசையாழ்வார் பாசுரமொன்று:
‘ஞாலத்து
ஒருபொருளை, வானவர்தம் மெய்ப்பொருளை…’
இந்த உலகத்திற்கே சிறந்த பொருள், வானவர்கள் வணங்குகிற மெய்ப்பொருள் என்று தெய்வத்தைக் குறிப்பிடுகிறார். இங்கே ‘பொருள்’ என்ற சொல், அதற்குரிய அறிவியல் விளக்கத்தைக் கடந்துநிற்கிறது. சுற்றி எத்துணைப் பொருள்கள் இருப்பினும், தெய்வம்தான் மெய்யான பொருள், தெய்வத்தை அறிவதுதான் மெய்யறிவு.
அப்படியானால், மற்ற பொருள்களெல்லாம் பொய்யா, மற்ற அறிவுகளெல்லாம் பொய்யா என்கிற தத்துவ விவாதத்துக்கு இப்போது நேரமில்லை, பொருளின் மற்ற விளக்கங்களுக்கு வருவோம்.
அகராதியை எடுத்தால், ஒருபக்கம் சொல், இன்னொருபக்கம் பொருள் என்று அடுக்கியிருக்கிறார்கள். அங்கே பொருள் என்றால், ஒரு சொல்லின் விளக்கம், Meaning.
ஆனால், அகராதி சொல்கிற விளக்கத்தையோ, அக்கம்பக்கத்திலிருக்கிறவர்கள் சொல்கிற விளக்கத்தையோ நம்பிவிடாதீர்கள், உண்மையான பொருளைச் சிந்தித்து அறியுங்கள் என்கிறார் வள்ளுவர்:
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும், அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
தொல்காப்பியத்தில் பொருளதிகாரம் என்று ஒரு தனிப்பகுதியே இருக்கிறது. அங்கே பொருள் என்றால், வாழ்க்கைப்பொருள், தமிழர்களின் வாழ்க்கைமுறையை விவரிக்கும் பகுதி அது.
‘அவன் என்னைப் பொருட்படுத்தவே இல்லை’ என்று பேச்சுவழக்கில் இன்றும் பயன்படுத்துகிறோம், இங்கே ‘பொருட்படுத்தல்’ என்பது, ‘பொருள்+படுத்தல்’ என்பதன் சேர்க்கை, அதாவது, ஒரு பொருளாகக் கருதுதல், மதித்தல் என்று பொருள்.
இதையே ‘அவன் என்னை ஒரு பொருட்டாக மதிக்கவே இல்லை’ என்றும் சொல்லக்கேட்கிறோம். இங்கே ‘பொருட்டு’ என்ற சொல் ‘பொருள்+து’ என உருவாகிறது. பொருளாகக் கருதப்படுவது பொருட்டு.
இதேபோல் இன்னும் சில சொற்கள், புரட்டு (புரள்+து, புரட்டப்படுவது), உருட்டு (உருள்+து, உருட்டப்படுவது), சுருட்டு (சுருள்+து, சுருட்டப்படுவது), இருட்டு (இருள்+து, இருண்டிருப்பது).
தமிழ் சினிமா பார்க்கிறவர்களுக்குப் ‘பொருள்’ என்பதற்கு இன்னோர் அர்த்தமும் தெரிந்திருக்கும், யாராவது ஒரு ரௌடி ‘பொருள் வெச்சிருக்கேன்’ என்றால், ஆயுதம் வைத்திருக்கிறேன் என்று பொருளாம்!
(தொடரும்)