தேர்தல் தமிழ்: கோஷ்டி, அணி

Must read

என். சொக்கன்
Indian_Army-Madras_regiment
திருக்கோஷ்டியூர் சௌம்ய நாராயணப் பெருமாள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
சின்னக் கோயில்தான், ஆனால் மிக உயரமாகத் தென்படும். நான்கு தளங்களில் பெருமாள். கீழ்த்தளத்திலும் மேல்தளத்திலும் ராமானுஜரும் உண்டு.
கோயிலைவிட, அந்த ஊரின் பெயர்தான் நமக்கு வியப்பைத் தரும். அதென்ன திருக்’கோஷ்டி’யூர்? காங்கிரஸ் செல்வாக்கு நிறைந்த இடமோ?
கோஷ்டி என்றால், கூட்டம் என்று பொருள். திருக்கோஷ்டியூர் என்ற பெயருக்குக் காரணமாக ஒரு சுவாரஸ்யமான கதை சொல்கிறார்கள்:  ஓர் அசுரன், அவனை அழிப்பதற்காகப் பிரம்மா, சிவன், விஷ்ணு உள்ளிட்ட தேவர்கள் எல்லாரும் கலந்தாலோசனை நடத்துகிறார்கள். அதற்காக அவர்கள் தேர்வு செய்த இடம்தான், இந்த ஊர். ஆகவே, தேவர்கள் ‘கோஷ்டி’ சேர்ந்து பேசிய இடம் என்ற அர்த்தத்தில் அதற்குத் ‘திருக்கோஷ்டியூர்’ என்று பெயர் வந்ததாம்.
அது சரி, அரசியல் கட்சிகளில் தலைவர்கள் ‘கோஷ்டி’ சேர்ப்பதாகச் சொல்கிறார்களே, அது தமிழ்ச்சொல்லா?
இதில் சந்தேகத்துக்கே இடமில்லை. ‘ஷ்’ என்ற கிரந்த எழுத்து இருப்பதால், இது தமிழ்ச்சொல்லாக இருக்க வாய்ப்பே இல்லை. கிரந்தம் தவிர்த்து ‘கோட்டி’ என்று எழுதினால் அர்த்தமே மாறிவிடும்.
யோசித்துப்பாருங்கள், குப்புசாமி கோட்டி, கந்தசாமி கோட்டி என்றால் அவமரியாதையாக இருக்காதோ!
கோஷ்டி/கோட்டி கலாசாரமே அரசியலுக்கு ஆகாது என்பார்கள். அதற்கு ஒரு மாற்றுச்சொல் பயன்படுத்தியே ஆகவேண்டும் என்றால், குழு/கும்பல்/கூட்டம்/அணி என்று சொல்லலாம்.
முன்பு அதிமுக இரு பிரிவுகளாக இருந்தபோது, ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று குறிப்பிட்டுவந்தார்கள். இங்கே ‘அணி’ என்ற சொல்லின் பொருள், குழு என்பது.
‘அணி’க்கு மேலும் பல பொருள்கள் உண்டு: அழகு என்று ஒரு பொருள், உடலில் ‘அணி’கிற நகை என்று ஒரு பொருள், செய்யுளைச் சிறப்பிக்கும் அழகும் ‘அணி’தான், வரிசை என்றும் பொருள் உண்டு.
அப்படியானால், ‘அணி வரிசை’ என்பது தவறா?
அல்ல, அங்கே ‘அணி’ என்பது குழு, பல குழுக்கள் வரிசையாக வருகின்றன, அதுவே அணிவரிசை. ராணுவ ‘அணி’வகுப்பு என்கிறோமே, அதையும் சிந்தித்துப்பாருங்கள்!
(தொடரும்)

More articles

Latest article