என். சொக்கன்
ன்றைக்கு மின்னணுக்கருவியை அழுத்தி நம்முடைய வாக்கைப் பதிவுசெய்கிறோம். இதற்குமுன்னால் வாக்குச்சீட்டுகள் நடைமுறையில் இருந்தன.
அதற்குமுன்னால்?
அகநானூறில் மருதனிளநாகனார் என்ற புலவர் எழுதிய பாடலில் ஒரு வரி: ‘கயிறுபிணி குழிசி ஓலை கொண்மார் பொறிகண்டு அழிக்கும் ஆவண மாக்களின்…’
குழிசி என்றால் குடம், கயிறுபிணி குழிசி என்றால், கயிறால் கட்டப்பட்ட குடம், அதற்குள் ஓலை இருக்கிறது, அதை எடுப்பதற்காக, அந்தக் குடத்தின்மேல் உள்ள பொறியை, அதாவது முத்திரையைக் கண்டு அழிக்கிறார்கள். யார்? ஆவண மாக்கள். ஆவணம் என்றால் முக்கியமான காகிதம்/ Document என்று இன்றைக்கும் பயன்படுத்துகிறோம். ‘ஆவண மாக்கள்’ என்றால், முக்கியக் காகிதங்களை அலசுகிறவர்கள், பாதுகாக்கிறவர்கள்.
1
அன்றைக்குக் காகிதம் கிடையாது, ஓலைதான் ஆவணம், ஆகவே, அவர்கள் கயிற்றால் கட்டப்பட்டு, மேலே முத்திரை இடப்பட்ட ஒரு குடத்தைத் திறந்து அதற்குள் ஓலையைத் தேடுகிறார்கள், அதுதான் அன்றைய தேர்தல். இதனைக் ‘குடவோலைமுறை’ என்பார்கள்.
ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு குறிப்பிட்ட பொறுப்புக்கு வர விரும்பும் அனைவருடைய பெயரும் ஓலையில் எழுதி ஒரு குடத்துக்குள் போடப்படும், அது ஒரு பொது இடத்துக்குக் கொண்டுவரப்படும், அங்கே அந்தக் குடத்தைத் திறந்து, ஓர் ஓலையை எடுத்துப் படிப்பார்கள், அவர்களே அந்தப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதுதான் குடவோலைமுறை.
அது சரி, இந்தப்பணியைச் செய்கிறவர்களை ‘ஆவண மக்கள்’ என்றல்லவா குறிப்பிடவேண்டும்? ஏன் ‘ஆவண மாக்கள்’ என்று எழுதுகிறார்கள்? ‘மாக்கள்’ என்றால் விலங்குகள் என்றல்லவா பொருள்?
‘மாக்கள்’ என்றால் விலங்குகள் என்றும் பொருளுண்டு, மனிதர்கள் என்றும் பொருளுண்டு. இதற்குச் சான்றாக ஒரு கம்பர் வரி: ‘மண்ணிடை மாக்கள், கடல்கண்டோம் என்பர், யாவரே முடிவுஉறக்கண்டார்?’ மண்ணில் வாழ்கிற மக்கள் ‘கடலைப் பார்த்துவிட்டோம்’ என்பார்கள்.
அதனை முழுமையாகப் பார்த்தவர்கள் யார்?
(தொடரும்)