என். சொக்கன்
2000px-UN_emblem_blue.svg
கண், காது, மூக்கு, கை, கால் போன்றவற்றை ‘உடலுறுப்புகள்’ என்கிறோம். அதாவது, உடலின் பகுதிகள்.
அதேபோல், ஒரு கட்சியின் பகுதியாக இருக்கிறவர்களை ‘உறுப்பினர்கள்’ என்கிறோம். இது அரசியலுக்குமட்டுமல்ல, குடும்ப உறுப்பினர்கள், குழு உறுப்பினர்கள் என்று பல இடங்களில் பயன்படுகிறது.
‘உறுப்பு நாடுகள்’ என்று ஒரு சொற்றொடரைச் செய்திகளில் வாசித்திருப்பீர்கள். அதாவது, ஒரு குறிப்பிட்ட குழுவில் இடம்பெற்றுள்ள நாடுகள் என்று பொருள். ‘ஐக்கிய நாடுகள் சபையில் 192 உறுப்பு நாடுகள் உள்ளன’ என்பதுபோல் எழுதலாம்.
உறுப்பு+இனர்=உறுப்பினர். இந்த ‘இனர்’க்கு என்ன பொருள்?
இனம் என்ற சொல்லிலிருந்து வந்தது இச்சொல். இனத்தைச் சேர்ந்தவர் என்று பொருள்.
ஆக, உறுப்பினர் என்றால் ஓர் இயக்கத்தின் உறுப்பாக அமைபவர், குடும்பத்தினர் என்றால், குடும்பத்தின் உறுப்பினர், அங்கத்தினர் என்றால், குழுவின் ஓர் அங்கமாகத் திகழ்பவர், விருந்தினர் என்றால், விருந்தாக வந்தவர்… இப்படிப் பல இடங்களில் ‘இனர்’ஐப் பார்க்கிறோம்.
அது சரி, உறுப்பு+இனர்=உறுப்பினர். அப்படியானால், குடும்பம்+இனர்=குடும்பமினர் என்றல்லவா வரவேண்டும்? அது எப்படிக் ‘குடும்பத்தினர்’ என்றானது?
தமிழில் மகர மெய்யில் (அதாவது ‘ம்’ என்ற எழுத்தில்) நிறைவடையும் சொற்களுடைய புணர்ச்சியில், அந்த ‘ம்’ காணாமல் போய், ‘அத்து’ என்கிற புதிய பகுதி சேர்கிற சில சூழ்நிலைகள் உண்டு. இந்த ‘அத்து’வைச் ‘சாரியை’ என்பார்கள்.
உதாரணமாக, மரம்+இல்=மரமில் அல்ல, மரத்தில். அதாவது, மர+அத்து+இல். அதுபோல,
குடும்பம்+இனர்=குடும்ப+அத்து+இனர்=குடும்பத்தினர்.
(தொடரும்)