தி.மு.க. தேர்தல் அறிக்கை மக்களால் தயாரிக்கப்பட்டது: கனிமொழி எம்.பி. பேச்சு

Must read

bnmm
தி.மு.க. தேர்தல் அறிக்கை மக்களால் தயாரிக்கப்பட்டது: கனிமொழி எம்.பி. பேச்சு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மீனாட்சி மகால் திருமண மண்டபத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு மற்றும் தர்மபுரி மாவட்ட தி.மு.க. மகளிர் அணி மற்றும் தி.மு.க. மகளிர் தொண்டர் அணி ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மதுவிற்கு எதிராக கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு அமைப்புகள், பெண்கள், மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வந்தனர். இசை கலைஞர் கோவன் என்பவர் மதுவிற்கு எதிராக பாடல் பாடியதால் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் மதுக்கடையை அகற்றக்கோரி போராட்டத்தில் காந்தியவாதி சசிபெருமாள் ஈடுபட்டபோது உயிரிழந்தார். இதுபோன்று மதுவிற்கு எதிராக போராடியவர்கள் மீது அ.தி.மு.க. அரசு எடுத்த நடவடிக்கைகளை மக்கள் அறிவார்கள்.
கடந்த 5 ஆண்டு காலமாக மதுவிலக்கை அமல்படுத்தாத ஜெயலலிதா, தற்போது படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவேன் என்று கூறி மக்களை ஏமாற்றுகிறார். ஜெயலலிதா சொன்ன எந்த வாக்குறுதியையும் அவர் நிறைவேற்றியதில்லை. சட்டசபையில் 110 விதியை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான அறிவிப்புகளை வெளியிட்ட ஒரே முதல்-அமைச்சர் ஜெயலலிதாதான். இதில் ஒன்று, இரண்டை தவிர மற்ற எதையும் அவர் நிறைவேற்றவில்லை.
ஆனால், தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கை அமல்படுத்த தனிச்சட்டம் இயற்றுவதாக அறிவித்துள்ளார். மேலும் பெண்களுக்கு, விவசாயிகளுக்கு என அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். அவர் செய்வதைத்தான் சொல்வார். சொல்வதைத்தான் செய்வார். தி.மு.க.வின் இந்த தேர்தல் அறிக்கை மக்கள் தயாரித்த தேர்தல் அறிக்கையாகும். எப்படி என்றால் நாங்கள் மாவட்டந்தோறும் சென்று அங்கு விவசாயிகள், மாணவர்கள், தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், தொழில் அதிபர்கள், வணிகர்கள் என பல்வேறு தரப்பினரை சந்தித்து, அவர்கள் கூறியதை உள்வாங்கி, வெளியிடப்பட்டதுதான் இந்த தேர்தல் அறிக்கையாகும். இது மக்களுடைய தேர்தல் அறிக்கையாகும்.
தமிழகத்தில் இரு சமூக மக்களிடையே பிளவு ஏற்படுத்தும் சாதி கட்சிகள் உள்ளன. எனவே, சாதி கட்சியினரை நம்பாதீர்கள். வரும் தேர்தலில் தி.மு.க. அமோகமாக வெற்றி பெற்று, தலைவர் கருணாநிதி 6-வது முறையாக முதல்-அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். அதற்கு உறுதுணையாக தி.மு.க. மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி தூண்களாக இருந்தது என்ற பெருமை பெரும் வகையில் நாம் பணியாற்றிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

More articles

Latest article