0
கடலூர்: திமுக, அதிமுகவுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி இருக்கும் என  அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
நாம்தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம், அக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நேற்று கடலூர் மஞ்ச குப்பம் மைதானத்தில் நடந்தது.
அப்போது, வரும் சட்டமன்றத் தேர்தலில் அக் கட்சியின் சார்பாக போட்டியிடும் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் சீமான் அறிமுகம் செய்து வைத்தார்.
பிறகு அவர் பேசும்போது, “தமிழர்கள் பிரிந்து நிற்பதால் எந்தவித நன்மையும் கிடையாது. தமிழர்கள் ஜாதி ரீதியாக பிரிந்து நிற்கிறார்கள்.
கருணாநிதி ஆட்சியில், தனது  அமைச்சர்களை மாற்றாமல் கெடுப்பார். ஜெயலலிதா அமைச்சர்களை மாற்றி கெடுப்பார். வேறு வித்தியாசம் இல்லை.
 
00
திமுகவுக்கு மாற்று அதிமுக. அதிமுகவுக்கு மாற்று திமுக. என்பது மாயை.  இரண்டு கட்சிக்கும் மாற்றாக இருப்பது நாம் தமிழர் கட்சிதான்!” என்று பேசினார் சீமான்.
மேலும் அவர் பேசுகையில், “எங்கள் திருநாட்டில் எங்கள் நல் ஆட்சியே அமைய வேண்டும் என்ற உணர்வோடு எங்கள் கட்சி வேட்பாளர்கள்  தேர்தலில் நிற்கிறார்கள்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நல்ல மாற்றம் கொடுப்போம். நல்ல திட்டங்களை செயலில் காட்டுவோம்.
கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்தது திமுக ஆட்சியில் தான். திமுகவும, அதிமுகவும் ஒரு தடைவையாவது இலங்கை தமிழர்களுக்காக உயிர்நீத்த முத்துக்குமார், செங்கொடிக்கு அஞ்சலி செலுத்தி இருக்கிறார்களா?
எல்லா தொழிலும் உள்ள இந்த நாட்டில் ஏன் பிச்சையெடுக்கும் நிலை.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஆணுக்கு பெண் சமம் என்கிற நிலை உருவாக்கப்படும். நாம் தமிழர் கட்சியில் 42 பேர் பெண்கள். ஒருவர் திருநங்கை. நாடாளுமன்றத் தேர்தலில் 20 ஆண்கள், 20 பெண்கள் வேட்பாளராக நிறுத்துவோம்” என்று சீமான் பேசினார்.