2
“நான் தாழ்த்தப்பட்டவன் என்பதால்தான், எனக்கு எந்த ஒரு வழக்கையும் ஒதுக்கீடு செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ஜாதிவெறியுள்ள இந்த நாட்டை விட்டு நான் வெளியேறப் போகிறேன்” என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
 இந்த நிலையில், ” “நீதிபதி கர்ணன், தான் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் என்பதை ஆயுதமாக பயன்படுத்துகிறார். ஏற்கெனவே, வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக சிலர் கூறிவரும் நிலையில் இவர் இவ்வாறு செயல்படுகிறார். இது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கெடுதலாகவே முடியும்” என்று புது சர்ச்சை எழுந்துள்ளது.
நீதித்துறை பணியிடங்கள் விவகாரத்தில் இவர் பிறப்பித்த தடை உத்தரவால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிபதி கர்ணனுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் முறையிட்டார். இந்த நிலையில் நீதிபதி கர்ணனனை கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தாக்கூர் இடம் மாற்றம் செய்தார். இதற்கும் கர்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், நீதிபதி கர்ணனுக்கு எந்த ஒரு வழக்கையும் ஒதுக்க கூடாது என அதிரடி உத்தரவிட்டது.
இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நீதிபதி கர்ணன், “உச்சநீதிமன்றம் எனக்கு எதிராக பிறப்பித்துள்ள உத்தரவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது. நான் தலித் என்பதாலேயே இப்படி ஓர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜாதிவெறியுள்ள இந்த நாட்டை விட்டு நான் வெளியேறப் போகிறேன்” என்று அதிரடியாக கூறினார்.
இந்த நிலையில், “நீதிபதி கர்ணன், தான் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் என்பதை ஆயுதமாக பயன்படுத்துகிறார். ஏற்கெனவே, வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக சிலர் கூறிவரும் நிலையில் இவர் இவ்வாறு செயல்படுகிறார். இது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கெடுதலாகவே முடியும்” என்கிற ஒரு கருத்து சட்டத்துறை பிரமுகர்களிடையே நிலவுகிறது.
அதற்கு ஆதாரமாக சில நிகழ்வுகளையும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்:
கடந்த 2014ம் வருடமும் “நான் தாழ்த்தப்பட்டவன் என்பதால் பணி மாறுதல் வழங்கியிருக்கிறார்” என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மீது புகார் கூறியதோடு, தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின ஆணையத்திலும் புகார் கொடுத்தார்.
அந்த புகாரில்,” எனக்கு கரூர் மாவட்டத்தை பொறுப்பாக 08.02.2013 முதல் வழங்கி உத்தரவிடப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து 08.06.2013  அன்று  ஒருங்கிணைந்த குளித்தலை நீதிமன்றக் கட்டிடத்தை திறந்து வைக்க இருந்தேன். அந்த திறப்பு விழா நடக்கும்  , எனக்கு பொறுப்பான கரூர் மாவட்டத்தை மாற்றி எனக்கு சிவகங்கை மாவட்டத்தை விழா நடக்க இருந்த நான்கு நாட்களுக்கு முன்பாக  வேறு மாவட்டத்துக்கு மாற்றி விட்டார் தலைமை நீதிபதி அகர்வால். இதன்  மூலம், தலைமை நீதிபதி அகர்வால் பிரிவு 3 (1) (x) வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்துள்ளார்.  இந்தப் பிரிவே, தாழ்த்தப்பட்டோரை உள்நோக்கத்துடன் அவமானப்படுத்துவதை தடுப்பதற்கான பிரிவு.  நான் பொறுப்பு வகித்த கரூர் மாவட்டத்தை, ஆதிக்க சாதியை சேர்ந்த நீதிபதி மாலா என்பவருக்கு ஒதுக்கியுள்ளார் தலைமை நீதிபதி அகர்வால்.  இதற்கு எந்த காரணத்தையும் தலைமை நீதிபதி சொல்லவில்லை.  தலைமை நீதிபதியின் இந்த செயல் சரியல்லாத நடவடிக்கை. உடனடியாக இது குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று கர்ணன் புகார் அளித்தார்.
ஆனால் அப்போது, கர்ணனுக்கு மட்டுமல்ல… மொத்தம் 32 நீதிபதிகளுக்கு இட மாறுதல் வழங்கப்பட்டன. அவர்களில் யாரும் குறை சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2014ல் கர்ணன் கொடுத்த புகார்
2014ல் கர்ணன் கொடுத்த புகார்

மேலும், இந்தப் புகாரின் நகலை, குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் சட்ட அமைச்சருக்கு அனுப்பினார். இது ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். ஆனால்,   பிஎஸ்பி தலைவர் மாயாவதிக்கும், தலித் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வானுக்கும் இந்தப் புகாரின் நகலை இவர் அனுப்பினார்.
பிரச்சினைகளை, அரசியலாக்க கர்ணன் விரும்புகிறார் என்பதை உணரலாம்.
இதற்கு முன் நவம்பர் 2011 அன்று நீதிபதி கர்ணன் இதே போல தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்கு புகார் அனுப்பினார்.  அப்போது கர்ணன் மீது மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது.  இதையடுத்து  அப்போதைய தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி கர்ணனுக்கு எந்த வழக்கும் ஒதுக்காமல் நிறுத்தி வைத்தார்.  இது நடந்த பிறகே, நீதிபதி கர்ணன் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில், “தான் தலித் என்பதால், சில நீதிபதிகள் என்னை அவமானப்படுத்துகிறார்கள்” என்கிற ரீதியில் புகார் கொடுத்தார்.    . அதையொட்டி, நீதிபதி கர்ணனின் பின்னால் தலித் வழக்கறிஞர்கள் சிலர் அணி திரண்டனர்.  இதையடுத்து, தலைமை நீதிபதி இக்பால் பணிந்தார்.  கர்ணனுக்கு மீண்டும் வழக்குகள் ஒதுக்கப்பட்டன.
 தவிர, “தன்னை தலித் என்பதால் சில நீதிபதிகள், அவமானப்படுத்துகிறார்கள்” என்று தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்கு புகார் அளித்த கர்ணன், தன்னை அவமானப்படுத்திய நீதிபதிகள் யார் என்பதை பின்னர் வெளியிடுகிறேன் என்று சொன்னார்.  ஆனால், ஆண்டுகள் கடந்தும் இன்னும் அந்தப் பெயர்களை வெளியிடவில்லை.
இதசையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது,   தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தையும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தையும் தனது சுயலாபத்துக்காக கர்ணன் பயன்படுத்துகிறாரோ என்கிற சந்தேகம் வருகிறது.
ஏற்கெனவே இச் சட்டம், தவறாக பயன்படுத்துவதாக சில தரப்பினர் புகார் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் கர்ணனின் செயல்பாடு அப்பாவி தலித்மக்களையே பாதிக்கும் என்பதை அவர் உணரவேண்டும்” என்கிறார்கள் சட்டத்துறை பிரமுகர்கள் சிலர்.