123123
தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்ல அதிமுகவின் நல்லாட்சி தொடர வேண்டும் என்றார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. கடந்த தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அதிமுக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலரும், முதல்வருமான ஜெயலலிதா, மேலும் பேசியதாவது: தமிழகம் அமைதிப் பூங்காவாக மாற வேண்டும். மக்கள் அச்ச உணர்வு இல்லாமல் வாழ வேண்டும். தமிழகம் தற்போது வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. இது தொடர வேண்டுமெனில் அதிமுகவின் நல்லாட்சி தொடர வேண்டும். மார்ச் 16ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
சொல்லாததையும் செய்துள்ளேன்: மக்களால் நான், மக்களுக்காக நான், உங்களால் நான், உங்களுக்காகவே நான் என்ற அடிப்படையில் எனது பொதுவாழ்வு அமைந்துள்ளது. சொன்னதைச் செய்வேன், செய்ததைச் சொல்வேன் என்ற நிலையில் தற்போது சொல்லாததையும் செய்துள்ளேன். பிள்ளையின் தேவை தாய்க்குத் தெரியும்: ஒரு தாய்க்குத் தான் தனது பிள்ளைகளின் தேவை தெரியும். எனவே, வரும் காலங்களில் உங்களுக்கு என்னத் தேவை என்பது எனக்குத் தெரியும். உங்கள் நன்மைக்காக, மேன்மைக்காக, வளர்ச்சிக்காக, மகிழ்ச்சிக்காக என்ன செய்வதென்று தாய்க்கு தெரியும். கடந்த 5 வருடங்களில் செய்ததை விட அதிகமான செயல் திட்டங்களை அளித்து அதனை நிறைவேற்றுவேன் என்ற வாக்குறுதியை வழங்குகிறேன்.
அண்ணாமலை பல்கலை.: ஏழை மக்கள் தரமான கல்வி பெற வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதி, நிர்வாக முறைகேட்டினால் பல போராட்டங்கள் நடைபெற்றன. இதனால், கடந்த 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பல்கலை. மூடப்பட்டது. எனினும் அது தோற்றுவிக்கப்பட்ட நோக்கம் நிறைவேறுவதற்காகவும், இழந்த பொலிவை மீண்டும் பெறவும் பல்கலைக்கழகத்தை அரசு எடுத்துக் கொண்டு புதிய சட்டம் இயற்றி ரூ.525 கோடி ஒதுக்கியுள்ளோம். பல்கலைக்கழகத்தை அரசு எடுத்துக் கொண்டதால் மருத்துவம், பொறியியல், வேளாண்மை படிப்புகளில் வெளிப்படையான முறையில் கல்வித் தகுதி, இடஒதுக்கீட்டின் படி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
ஏனைய கல்வி நிறுவனங்களில் வழங்கப்படுவது போன்று முதல் தலைமுறையினருக்கு கல்விக்கடன், கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது என்றார் முதல்வர் ஜெயலலிதா.