archagargal

திருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் “இந்து மதத்தைச் சேர்ந்த அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்படும்” என்று முடிவெடுக்கப்பட்டு உள்ளது. ஆனால், தமிழகத்தில் கடந்த 43 ஆண்டுகாலத்துக்கு முன் இதே போன்ற முயற்சி தமிழகத்தில் துவங்கியும் இன்னமும் செயல்பாட்டுக்கு வரவில்லை. வழக்கு வாய்தா, அரசின் உறுதியான முடிவின்மை ஆகிய காரணங்களால் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது.    தமிழக அரசு வழங்கிய ஆகம விதிகளுடன் கூடிய முறையான அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர்களுக்கு கடந்த எட்டு ஆண்டுகளாக பணி வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், அர்ச்சகர் மாணவர் சங்கத்தினரை சந்தித்தோம். இந்த அமைப்பின் தலைவராக  வா. அரங்கதநாதன் இருக்கிறார்.
இனி அவர்கள் நமக்களித்த பேட்டி.
 நீங்கள் எப்போது அர்ச்சகர் பயிற்சியை முடித்தீர்கள்? அது முறையானதுதானா?
 
2007 – 2008 ஆண்டுகளில் தமிழக அரசின் சார்பில் துவக்கப்பட்ட அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து படித்து 206 பேர் அர்ச்சகர் பணிக்கான தகுதி பெற்றோம்.  இது முறையானது. ஆகமவிதிப்படி என்று சொல்வார்கள் அல்லவா.. அந்த  விதிப்படி அர்ச்சகராகும் முழு தகுதி  பெற்றுள்ளோம்.
 
பிறகு ஏன் உங்களுக்கு ஏன் இன்னமும் பணி வழங்கப்படவில்லை?
பார்ப்பன சிவாச்சாரியார்களைத் தவிர பிற சாதியினர் அர்ச்சகராகி, கருவறையில் சாமி சிலையைத் தொட்டால் தீட்டாகிவிடும், சிலையிலிருந்து கடவுள் வெளியேறிவிடுவார்’ எனக் கூறி மதுரை சிவாச்சாரியார்கள் நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் இந்த சட்டத்திற்கு தடை பெற்றுவிட்டனர். இந்த வழக்கு நடந்துகொண்டு இருப்பதை காரணம் காட்டி தமிழக அரசு எங்களை அர்ச்சகராக நியமிக்கவில்லை.
 
உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கை தற்போது யார் நடத்துகிறார்கள்?
 
மனித உரிமை பாதுகாப்பு மையம் நடத்துகிறது. அதோடு, அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களையும் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் ஒருங்கிணைத்தது போராட்டங்களையும் நடத்தி வருகிறது.
 
பிராமணர்கள் மட்டுமல்ல.. அனைவரும் அர்ச்சகராகலாம் என்று 1971ம் ஆண்டே தமிழக அரசு சட்டத்திருத்தம் செய்தது அல்லவா..
ஆமாம்… வாரிசுரிமைப்பபடி பார்ப்பனர்கள் மட்டும் அர்ச்சகராவதை ஒழித்து, இந்து சமய அறநிலையச் சட்டத்தில் திருத்தம் செய்தது. ஆனால், இச்சட்டத் திருத்தம் தங்கள் மத உரிமைக்கு எதிரானது என மதுரை மீனாட்சியம்மன் கோவிலைச்சேர்ந்த பார்ப்பனர்களும், 2 மடாதிபதிகளும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். ராஜகோபாலாச்சாரியார், சங்கராச்சாரியார், ஜீயர் ஆகியோர் இவர்களுக்கு உதவினர். பிரபல வழக்குரைஞர் நானி பல்கிவாலாவை வாதாட ஏற்பாடும் செய்து கொடுத்தனர். வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த இவ்வழக்கை ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து 14-03-1972 அன்று தீர்ப்பளித்தது..
 
அதில், “அர்ச்சகர் என்பவரும் கோயில் ஊழியர்தான். வாரிசுரிமைப்படி அர்ச்சகர் நியமன உரிமையை ஒழித்து தமிழக அரசு இயற்றிய சட்ட திருத்தம் செல்லும். அரசை பொறுத்தவரை, அர்ச்சகர் நியமனம் மதசார்பற்றது, மத நடவடிக்கையாக கருத முடியாது” என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதாவது பார்ப்பனர்கள் மட்டுமல்ல… இந்து மதத்தைச் சேர்ந்த அனைவருக்குமே அர்ச்சகர் ஆகும் உரிமை உண்டு என்றது.
 
அதே நேரத்தில், ” கோயிலின் மரபு, பழக்கவழக்கத்திற்கு மாறாக குறிப்பிட்ட இனத்தைச் சேராத ஒருவர், சாமி சிலையைத் தொட்டால் புனிதத் தன்மை கெட்டுவிடும்” என்பதை அரசு கருத்தில் கொண்டு, அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும்” என்றும் உச்சச நீதிமன்றம் கூறியது. அதாவது பார்ப்பனர்கள் மட்டுமே பரமப்ரை பரம்பரையாக பூஜை செய்வதை சரி என்றது.
 
இந்த குழப்படியான தீர்ப்பால்தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகராவது தடுக்கப்பட்டது. இநதத் தீர்ப்பை “ஆபரேசன் சக்சஸ், நோயாளி மரணம்” என்று பெரியார் மிக நுட்பமாக கண்டித்தார். மேலும், “அரசியலமைப்புச் சட்டத்தில் பார்ப்பனர்களின் மத உரிமைகளுக்கு பாதுகாப்பாக உள்ள சரத்து 25, 26-ஐ ஒழிக்க வேண்டும்” என்றார்.
 
இதையடுத்து தி.மு.க அரசாங்கமும் அதன்பிறகு அ.தி.மு.க அரசாங்கமும் அரசியலமைப்புச் சட்டத்தில் மேற்குறிப்பிட்ட சரத்துக்களை திருத்தியமைக்க மத்திய அரசுக்கு தொடர்ந்து பல கடிதங்கள் எழுதின. பலன் இல்லை.
 
சரி.. பாரம்பரியமாக பிராமணர்கள்தான் சுத்தபத்தமாக கோயில் பணிகளை செய்துவருகிறார்கள் அவர்களை ஏன் தடுக்க வேண்டும் என்று சிலர் கேட்கிறார்களே..
 பார்ப்பனர்கள் அர்ச்சகர் ஆகவதை நாங்கள் தடுக்கவில்லை. எங்களுக்கும் அந்த உரிமை வேண்டும் என்றுதான் கேட்கிறோம். தவிர பார்ப்பனர்கள் சுத்தபத்தமாக அர்ச்சனை செய்கிறார்கள் என்புது, “வெள்ளையாய் இருப்பவன் பொய் சொல்ல மாட்டான்” என்பது போல அறியாமைதான். இதற்கு ஆதாரம் உள்ளது.
 
1972-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஆராய்ந்து நடைமுறைப்படுத்த ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி மகாராஜன் தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு அமைத்தது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோயில்களையும் மூன்று ஆண்டுகள் ஆய்வு செய்த இக்குழு, 1982-ம் ஆண்டு தனது பரிந்துரைகளை வெளியிட்டது. அதில் “பூசையின்போது பிராமண அர்ச்சகர்கள் மந்திரத்தை தவறாக உச்சரிப்பது, மாற்றிச் சொல்வது, முறையாக பயிற்சியின்றி பணியில் இருக்கும் அர்ச்சகர்கள்” என ஆகமத்திற்கு எதிராக நடைபெறும் பல்வேறு மாற்றங்களை அக்குழு பட்டியலிட்டுள்ளது.
 
அந்த குழு செய்த பரிந்துரைகள் என்ன?
“தமிழகம் முழுவதும் முறையாக பயிற்சி வழங்கும் அர்ச்சகர் பள்ளிகளை நிறுவ வேண்டும், இந்து சமய அறநிலையச் சட்டத்தில் பழக்கவழக்கம் என்பதை ஒழித்து திருத்தம் செய்ய வேண்டும்” என அக்குழு பரிந்துரை செய்தது.
 
இந்த நேரத்தில் ஒரு முக்கிய விசயத்தைக் குறிப்பிட வேண்டும். கேரளாவில் இருந்து தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில், “பார்ப்பனரல்லாதவர் அர்ச்சகராகலாம், மரபு பழக்கவழக்கத்தின்படி பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும் என்பதை ஏற்க முடியாது. பிறப்பால் பாகுபாடு பார்ப்பது தீண்டாமைக்குற்றம், மனித உரிமைகளுக்கு எதிரானது” என்று 2002ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.
 
 அதன் பிறகும் என்ன பிரச்சினை?
 உச்ச நீதிமன்றத்தின் வழங்கிய அந்த தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டுதான், தமிழக அரசு, 2006-ம் ஆண்டில் இந்து அதாவது அர்ச்சகர் பணி நியமனத்தில் பழக்கவழக்கம், மரபு என்பதை ஒழிக்கும் வகையில் அவசரச் சட்டத்தையும் (Ordiance) இயற்றியது. இதனால் பார்ப்பனர்கள் மட்டுமே பரம்பரையாக அர்ச்சகராகும் முறை தடுக்கப்பட்டது. ஆனால், மதுரையைச் சார்ந்த பார்ப்பன ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சங்கம் தமிழக அரசின் நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. ஏற்கெனவே 1972ம் ஆண்டு உச்ச நீதிமன்றம், குழப்பமான தீர்ப்பை வழங்கியது அல்லவா… பெரியார் கூட “ஆபரேசன் சக்ஸஸ்.. பேசண்ட் டெத்ட என்று கண்டித்தாரே…! அந்த தீர்ப்பின் ஒரு பகுதியை முன்வைத்து வாதாடினார்கள் பார்ப்பனர்கள். இதையடுத்து இந்து அறநிலையத்துறை சட்டத்திருத்தம் செய்த தமிழ அரசின் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
 
இதனால் திமுக அரசாங்கம், அனைவரும் அர்ச்சகராகலாம் என்பதை சட்டமன்றத்தில் சட்டமாக கொண்டு வந்தபோது சட்டத்திருத்தத்தில் உள்ள முக்கியப் பகுதியை விட்டு விட்டு சட்டம் இயற்றியது.
 
“அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்” என 2006-ல் அந்த அரசு போட்ட அரசாணையின் மூலம், நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்தகமிட்டி, அர்ச்சக மாணவர்களின் தகுதி, பாடத்திட்டம், பயிற்சிக்காலம் மற்றும் மற்றும் தமிழகத்தில் நடைபெறும் பூசை முறைகள், பணியிலிருக்கும் அர்ச்சகர்களின் தகுதிகள் என ஆய்வு செய்து தமிழக அரசிடம் சமர்ப்பித்தது.
 
அதன்படி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், திருவரங்கம் ஆகிய கோயில்களில் வைணவ பயிற்சி பள்ளிகளும், திருவண்ணாமலை, மதுரை, திருச்செந்தூர், பழநி ஆகிய பள்ளிகளில் சைவ பயிற்சி பள்ளிகளும் அமைக்கப் பட்டது. மொத்தம் 206 மாணவர்கள் ஒன்றரை ஆண்டுகள் பயிற்சி முடித்து, 2008-ல் தீட்சையும் பெற்றனர். ஆனால், தமிழக அரசோ மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கவில்லை.
 
இப்போது உங்கள் நிலை என்ன?
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் அனைவரையும் உச்ச நீதிமன்ற தடையாணையைக் காரணம் காட்டி, தமிழக அரசு கைவிட்டுவிட்டது. இந்த நிலையில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் மற்றும் அதன் வழக்குரைஞர்களின் உதவியால் தொடர்ந்து சட்டபோராட்டம் நடத்தி வருகிறோம். மக்கள் மன்றத்திலும் போராடி வருகிறோம்.

தமிழக அரசு இந்த வழக்கில் தொடர்ந்து வாய்தா வாங்கிக்கொண்டே இருக்கிறது. தமிழக அரசு, விரைந்து நடத்தி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
தமிழகத்திலும் கருவறைத் தீண்டாமை ஒழிய வேண்டும்.