ட்ரம்ப் – புடின் தொலைபேசியில் உரையாடல்: சிரியாவில் அமைதி திரும்புமா?

Must read

 

Trump and Putin: Syria ceasefire heads leaders’ agenda

 

சிரியாவில், அதிபர் ஆஸாத் இரசாயன ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியானதை அடுத்து, அமெரிக்கா கடுமையான தாக்குதலை நடத்தியது. அதிபர் ஆஸாத்தின் ராணுவத்திற்கு ஆதரவளித்து வரும் ரஷ்யா இதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்திருந்தது.

 

இந்தச் சம்பவம் நிகழ்ந்து ஒரு மாதத்தை அடுத்து, அமெரிக்க அதிபர் ட்ரம்பும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் தொலைபேசியில் உரையாடியதாக வெள்ளை மாளிகை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. இந்த உரையாடலின் போது சிரியாவில் அமைதியை ஏற்படுத்துவது குறித்து இருவரும் பேசியதாக அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் நீண்டகாலமாக நீடித்துவரும் போர்ச்சூழலை முடிவுக்குக் கொண்டுவர அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என இருவரும் அப்போது பேசிக்கொண்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. வடகொரியா உள்ளிட்ட மேலும் பல விவகாரங்கள் குறித்தும் இருவரும் பேசியதாகவும், அமெரிக்காவும், ரஷ்யாவும் நேருக்கு நேர் அமர்ந்து பேச வேண்டிய அம்சங்கள் குறித்தும் இந்த தொலைபேசி உரையாடலின் போது ஆலோசிக்கப்பட்டதாகவும் வெள்ளை மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரம்ப் – புடின் இருவரது இந்த உரையாடலும் பயனுள்ள வகையில் அமைந்திருந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.

 

சிரியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 2 ஆயிரத்து 786 பேர் கொல்லப்பட்டிருப்பதாக, மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில், 291 பேர் குழந்தைகள், 151 பேர் பெண்கள் என சிரியாவுக்கான மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

சிரிய அதிபர் ஆஸாத்தை ஆதரிக்கும் ரஷ்யாவின் அதிபருக்கும், எதிரான நிலைப்பாடுள்ள அமெரிக்காவின் அதிபருக்கும் இடையே நடந்துள்ள இந்த உரையாடல், கடந்த 2011ஆம் ஆண்டு முதல் சிரியாவில் நீடித்து வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தொடக்கமாக பார்க்கப்படுகிறது.

More articles

Latest article