டில்லி

ன்று டில்லியில் நாடாளுமன்றக் கட்டிடம் திறப்பு விழாவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு இடப்பட்டுள்ளது.

இன்று டில்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைப் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.இந்த நாடாளுமன்ற கட்டிடத்தைப் பிரதமர் திறந்து வைப்பதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளன.  மேலும் போராட்டம் நடத்தும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி நாடாளுமன்றம் நோக்கி அமைதி பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அவர்கள் தங்கள் பேரணியின் முடிவில் நாடாளுமன்றம் முன்பு மகிளா மகாபஞ்சாயத்து நடத்த முடிவு செய்துள்ளனர். போராட்டத்தில்  அண்டை மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு கிராம தலைவர்கள் மற்றும் விவசாயிகள் இணையப்போவதாகக் கூறி உள்ளதால் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆகவே டில்லயில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டில்லியின் எல்லைப்பகுதியான திக்ரி எல்லை, சிங்கு எல்லைப் பகுதி அருகே காவல்துறையினர் பேரிகார்டுகளை அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நாடாளுமன்றம் நோக்கி செல்லக்கூடிய அனைத்து பாதைகளிலும் பேரிகார்டுகள் வைத்து தடுப்பு அமைக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

டில்லியில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும், ஒவ்வொரு வாகனமும் சோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும், டில்லிக்குள் சட்டம்-ஒழுங்கு நிலையைச் சீர்குலைக்கும் வகையில் சந்தேகத்திற்கிடமான நுழைவு எதுவும் அனுமதிக்கப்படாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.