Acharya
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரை கர்நாடக ஐகோர்ட்டு விடுதலை செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வருகிறது.
பிப்ரவரி 23–ந் தேதியன்று இறுதி விசாரணை தொடங்கியது. கர்நாடக அரசு தரப்பில் மூத்த வக்கீல் துஷ்யந்த் தவே தனது வாதத்தை கடந்த 10–ந் தேதியன்று நிறைவு செய்தார்.
7–வது நாளாக நேற்று நடைபெற்ற விசாரணையில் கர்நாடக அரசு தரப்பு வக்கீல் பி.வி.ஆச்சார்யா தனது வாதத்தை மீண்டும் தொடர்ந்தார். அப்போது அவர், ’’ஜெயா பப்ளிகேஷன்ஸ் மற்றும் சசி எண்டர்பிரைசஸ் நிறுவனங்கள் சார்பில் கணக்கு காண்பிக்க வேண்டும் என்பதற்காக மொத்தம் 52 புதிய வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அவற்றில் 48 அபிராமபுரம் இந்தியன் வங்கி கிளையின் கணக்குகளில் பணம் போடப்பட்டுள்ளது.
அந்த 52 கணக்குகளில் இருந்து பணத்தை சிறிது சிறிதாக எடுத்து பல சொத்துக்களை வாங்கியிருக்கிறார்கள். இவர்கள் கணக்கு காட்டும் ரூ.14 கோடியும் போலியான ஆவணங்களை தயாரித்து அதன் மூலம் காண்பிக்கப்பட்டவையாகும்.
குற்றம் சாட்டப்பட்டவரின் வளர்ப்பு மகன் திருமணம் தொடர்பான செலவு 6 கோடியே 45 லட்சத்து 4 ஆயிரத்து 222 ரூபாய் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. தனிக்கோர்ட்டு திருமணத்துக்கான செலவை ரூ.3 கோடி என்று கணக்கில் எடுத்துக் கொண்டது. இதனை வெறும் 28 லட்சத்து 68 ஆயிரம் ரூபாயாக ஐகோர்ட்டு கணக்கில் கொண்டது.
முதலில், இந்த திருமணத்துக்கு தான் செலவு ஏதும் செய்யவில்லை என்று ஜெயலலிதா கூறினார். பிறகு இந்த திருமணத்துக்கான அனைத்து செலவையும் சசிகலா செய்ததாக கூறப்பட்டது. பிறகு வருமான வரித்துறைக்கு தாக்கல் செய்த கணக்கில் மொத்தம் ரூ.28 லட்சத்து 68 ஆயிரம் செலவு செய்ததாக காண்பிக்கப்பட்டது’’என்று வாதிட்டார்.
கோர்ட் நேரம் முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், திங்கட்கிழமையில் இருந்து ஹோலி பண்டிகை விடுமுறை ஒரு வாரத்துக்கு உள்ளதால் வழக்கின் மீதான விசாரணை வருகிற 29–ந் தேதி தொடரும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதற்கு மூத்த வக்கீல் பி.வி.ஆச்சார்யா, ‘திருமணம் தொடர்பான செலவுகள் குறித்து எங்கள் தரப்பில் மேலும் வாதங்கள் உள்ளன. இதுதவிர அசையும், அசையா சொத்துக்கள் பற்றி எங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க மேலும் ஒரு முழு நாள் தேவைப்படுகிறது. அது முடிந்த பிறகு மற்ற சொத்துக்கள் பற்றிய வாதங்களை முன் வைக்க வேண்டும். இந்த வாதங்களை ஏப்ரல் 1–ந் தேதிவரை இழுக்காமல் மார்ச் 31–ந் தேதிக்குள் முடித்து விடுவேன்’ என்று கூறினார்.
இதற்கு நீதிபதிகள் சிரித்துக் கொண்டே, ‘தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் ஏப்ரல் 1–ந் தேதிக்கு அதனை இழுத்துச் சென்று எங்களை முட்டாள் ஆக்க வேண்டாம்’’ என்று கூறினார்கள்.
இதனைத் தொடர்ந்து பலத்த சிரிப்பலைகள் எழுந்தன.