men-praying-800x430

மெரிக்காவில் ஃப்ளோரிடா மாகாணத்தில் வகுல்லா என்ற சிறிய ஊர். மக்கட் தொகை 30,000தான்.

அவ்வூரை நிர்வகிக்க ஆணையம் ஒன்றும் உண்டு. அவ்வாணையத்தின் தலைவர் ரால்ஃப் தாமஸ், கடற்கரையில் முஸ்லீம்கள் தொழும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, முதல் முறையாக இவ்வாறு பொதுவிடத்தில் முஸ்லீம்கள் தொழுவதைத் தான் கண்டதாக மட்டும் குறிப்பிட்டு நிறுத்திக்கொண்டார். உட்பொருள், அதிர்ச்சி அளிக்கிறது, இது நல்லதற்கல்ல என்பதுதானே. அவர் எதிர்பார்த்ததுபோலவே, ஆஹா என்ன நடக்குது நம் வகுல்லாவில் என்று ஆளாளுக்கு அரற்ற ஆரம்பித்திருக்கின்றனர்.

பின் நடந்த ஆணையக் கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர், ஷெரீஃப் என அழைக்கப்படும் ஊர் காவல்துறை அதிகாரி பதவிக்கு போட்டியிடும் ஒருவர், ”இது குறித்து மேல் விவரங்கள் வேண்டும். இஸ்லாமிய இளைஞர்கள் இப்படி கடற்கரையில் தொழுவதைக் கண்டால் பயமாக இருக்கிறது. என் மனைவியும் மகள்களும் அங்கே செல்பவர்கள். அவர்கள் டீ ஷர்ட் அரை ட்ரவுசர் அணிந்து செல்வார்கள். அதெல்லாம் ஷரியாபடி குற்றம். அடுத்த முறை என் குடும்பத்தினர் அங்கே செல்லும்போது அவர்களைக் காணும் முஸ்லீம் இளைஞர்கள் எப்படி ஷரியாவை மீறலாம் எனக்கூறி அவர்களைத் தாக்கினால் என்னாவது?” என்று கேட்டிருக்கிறார்.

இன்னொருவர் தலைமை ஆணையர் இவ்வாறு செய்ததே தவறு.  முஸ்லீம்கள்மீது வெறுப்பை வளர்க்கவே இத்தகைய ஃபோட்டோக்களை முகநூலில் வெளியிட்டிருக்கிறார் எனக் கண்டித்தார்.

ஆதரித்தும் கண்டித்தும் பல்வேறு மறுமொழிகள் வலைத் தளங்களில்.

“தொழுகையில் பங்கேற்ற ஒருவரின் தாய், எனக்கு இது பேரதிர்ச்சி. என் மகனுக்கு என்னாகும்? இப்போது…கவலையாயிருக்கிறது…சாதாரணமான வழிபாடு இப்படிப்பட்ட எதிர்வினைகளை உருவாக்குமா”  என வேதனைப் பட்டிருக்கிறார்.

கிறித்தவரல்லாத வகுல்லாவாசிகள் கொலை செய்யப்படுவார்கள் என்றும் முகநூலில் எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறதாம்.

இன்னொருபுறம் தொழுகையை விமர்சித்த ஷெரீஃப் பதவி வேட்பாளர் அத்தோடு நிற்கவில்லை. ஷரியா முஸ்லீம்கள் வகுல்லாவை விட்டு வெளியேறவேண்டும் என முகநூலில் எழுத, அவருக்கு கொலை மிரட்டலும் வந்திருக்கிறதாம்.

இத்தனைக்குப் பிறகும் தலைமை ஆணையர் ரால்ஃப் தாமஸ் தான் செய்ததில் தவறேதுமில்லை, மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் செய்வேன், அது என் உரிமை என கொக்கரித்திருக்கிறார்.

அமெரிக்காவில் முஸ்லீம்களுக்கெதிராக எப்படியெல்லாம் கொந்தளிப்பு ஏற்படுகிறது என்பதையே இச்சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.

தாத்ரிக்குப் பிறகு நம் நாட்டிலும் அப்படி நடக்கக்கூடுமோ என்ற அச்சமும் எழுகிறது.

 

  • டி.என். கோபாலன்