new

திருச்செந்தூர் தனியார் கல்லூரி விழாவில் கலந்துகொள்ள கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று விமானத்தில் மதுரை சென்றார்கள் நடிகர் கமலஹாசனும், சிவகார்த்திகேயனும்.

மதுரை விமான நிலையத்தில் இறங்கியவுடன், கமல் சென்றுவிட, அதன் பிறகு வெளியே வந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அங்கு காத்திருந்த கமல் ரசிகர்கள், சிலர் திடீரென சிவகார்த்திகேயனை தாக்க ஆரம்பித்தார்கள். உடன் வந்த பாதுகாவலர்கள் சிவகார்த்திகேயனை மீட்டு அழைத்துச் சென்றார்கள்.

சிவகார்த்திகேயன் தாக்கப்பட்டதை சிலர் தங்களது செல்போனில் எடுத்து சமூகவலைதளங்களில் பரவவிட..பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தாக்குதல் நிகழ்ச்சி பற்றி பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “அப்படி ஏதும் நடக்கவே இல்லை” என்று கமல் மறுத்தார். சிவகார்த்திகேயனோ, “நடந்துவிட்டது.. விட்டுவிடுங்கள்” என்றார்.

கமல் பற்றி அவதூறாக சிவகார்த்திகேயன் பேசியதாகவும், கமல் மகள் ஸ்ருதிஹானை கிண்டல் செய்ததாகவும் இருவேறு விசயங்கள் தாக்குதலுக்குக் காரணமாக சொல்லப்பட்டன.

இந்த விவகாரம் குறித்து கோடம்பாக்கத்தில் பேசுபவர்கள் சொல்வது இதுதான்:

“தற்போது ரஜினி முருகன் என்ற படத்தில் ரஜினி ரசிகராக சிவகார்த்திகேயன் நடிக்கிறார். தவிர ரஜினி பற்றி பெருமையாக தொடர்ந்து பேசி வருகிறார். ஆகவேதான் கமல் ரசிகர்கள் தாக்கியிருக்கிறார்கள். அப்போது ரஜினி பற்றியும் அவதூறாக பேசியிருக்கிறார்கள்” என்று சொல்லும் திரை உலகினர் சிலர், “

தாக்குதல் நடக்கப்போவது கமலுக்கும் தெரியும்” என்றும் கூறுகிறார்கள்.

அதற்கான காரணத்தையும் இப்படிச் சொல்கிறார்கள்: “சம்பவம் நடந்த அன்று, விமான நிலையத்தின் உள்ளே செல்லும் வழியாகத்தான் சிவகார்த்திகேயன் வெளியே வந்திருக்கிறார். இந்த விசயம் அறிந்தே கமல் ரசிகர்கள் அங்கு காத்திருந்து தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எப்படி இந்த வழியாக சிவா வருவது தெரியும்? தவிர,தன்னை தாக்கியதை சிவா மறுக்கவில்லை. ஆனால் கமல் மறுக்கிறார் என்பதையும் கவனிக்க வேண்டும்” என்கிறார்கள் அவர்கள்.

இதற்கிடையே கடந்த ஞாயிறு அன்று இரவு சிவாவை மொபைலில் தொடர்புகொண்டு ரஜினி நலம் விசாரிக்க… பரபரப்பு கூடியது. இந்த செய்தியையும் நமது இதழில் வெளியிட்டிருந்தோம்.

இப்போது, ரஜினி – சிவா பேசிய விவரம் மெல்ல கசிய ஆரம்பித்திருக்கிறது.

எடுத்த எடுப்பிலேயே, “ஷிவா.. நான் ரஜினி பேசறேன். விஷயம் கேள்விப்பட்டு பதட்டமாயிட்டேன். காயம் எதுவும் இல்லையே..” என்று வழக்கமான படபடப்புடன் ஆரம்பித்திருக்கிறார் ரஜினி.

ரஜினி பேசுவார் என்ற தகவல் முன்னதாகவே சிவாவுக்கு சொல்லப்பட்டிருந்தாலும், ரஜினியின் பதட்டம் + அன்பான குரலை கேட்ட சிவா சில விநாடிகள் ஏதும் பேசத் தோன்றாமல் நின்றிருக்கிறார்.

ரஜினியே, “ஷிவா..லைன்ல இருக்கீங்களா..” என்று கேட்டவுடன்தான் இயல்புக்கு வந்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

பிறகு சிவா, “தலைவா… சின்ன வயசிலேர்ந்தே உங்க ரசிகன் நான். நீங்கதான் என் ரோல் மாடல், வழிகாட்டி..” என்றெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு பேசிக்கொண்டே இருக்க..

குறுக்கிட்ட ரஜினி, “அதெல்லாம் இருக்கட்டும். நல்லா பர்ஃபாம் பண்றீங்க..முன்னேறி வர்ற நேரத்துல இது போல சில வேண்டாத சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும்…. நாம அதை க்ராஸ் பண்ணி போயிக்கிட்டே இருக்கணும்!” என்று அட்வைஸ் செய்திருக்கிறார்.

அதற்கு மேல் தாங்காமாட்டாமல் சிவா, கதறிவிட்டாராம்.

“நான் சினிமாவுக்கு வந்ததே பெரிய கனவு மாதிரி இருக்கு. அதுவும் ஹீரோ அந்தஸ்து என்பதை இன்னமும் நம்ப முடியலை.. ஆனாலும் எந்த விநாடியும் இதை எல்லாம் நெனச்சு பெருமைப்பட்டதில்லை. எல்லாம் ஆண்டவன் செயல்னு இருக்கேன். ஆனா என்னை இப்படி அடிச்சுட்டாங்களே…” என்று கதறிலின் ஊடே சொல்லியிருக்கிறார்.

ரஜினி ஆறுதல் படுத்தியும் அவரது கதறலும் புலம்பலும் நிற்கவில்லை. “எனக்குன்னு இமேஜ் இருக்கிறதா நினைக்கவே இல்லை. ஆனா பொது இடத்துல வச்சு அடிச்சி… அதை வீடியோ எடுத்து பரவ விடுறாங்களே…. இனிமே நான் சினிமால ஹீரோன்னா யார் ஏத்துக்குவாங்க.. சினிமாவை விட்டே போயிடறேன்” என்று ஆற்றாமையில் சொல்லி புலம்ப…

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட ரஜினி, “ஷிவா.. ஷிவா.. பொறுமை ப்ளீஸ்! நான் உச்சத்துக்கு வர்றப்போ சந்திக்காத பிரச்சினைகளா.. என் மன அமைதியே பாதிக்கப்பட்டு இருந்தது அப்போ..! ஏன்… இப்பக்கூட எத்தனையோ பிரச்சினைகளை சமாளிச்சிக்கிட்டுத்தானே இருக்கேன்“ என்றவர் சில சம்பவங்களை மனம்விட்டுச் சொல்லியிருக்கிறார்.

இறுதியாக, “ இந்த மாதிரி சம்பவங்கள் எல்லாம் ஆண்டவன் நமக்கு வைக்கிற பரிட்சை. இதில நாம ஜெயிக்கறோமானு ஆண்டவன் புன்னகையோட பாத்துகிட்டே இருப்பான். நாம தோக்கற மாதிரி சூழ்நிலை வந்தா, ஆண்டவனே பதறிப்போய் அதை சரி பண்ணுவான். ஏன்னா, யாருக்கும் கெடுதல் நெனைக்காத நாமெல்லாம் ஆண்டவனோட குழந்தைகள்” என்று சிவாவுக்கு பூஸ்ட் கொடுத்த ரஜினி, “விரைவில் நேரில் சந்திக்கலாம்!” என்றும் சொல்லியிருக்கிறார்.

அதுவரை மதுரை சம்பவத்தை நினைத்து மனதிலேயே புழுங்கிக்கொண்டு, தனது நெருங்கிய நண்பர்களிடம் “சினிமாவே வேண்டாம்” என்று புலம்பிக்கொண்டிருந்த சிவா, ரஜினியின் பேச்சுக்கு பிறகுதான் உற்சாகமானாராம்!

அதன் வெளிப்பாடுதான், தாக்குதல் சம்பவம் பற்றி இப்போது யார் கேட்டாலும் புன்னகையுடன் “ஐ யம் ஆல்ரைட்!” என்று புன்னகைக்கிறார் சிவா.

அதுமட்டுமல்ல… “அப்படி ஒரு சம்பவம் நடந்ததும் நல்லதுதான். அதனாலதானே நான் போற்றுகிற ரஜினி சாரே எனக்கு போன் பண்ணி விசாரிச்சு அக்கறையா அட்வைஸ் பண்ணார்! அவரை இதுவரை ரோல் மாடலா நினைச்சிருந்தேன்.. ஆனா அவர் அதற்கும் மேல!” என்றும் உற்சாகமாகமும் நெகிழ்ச்சியுமாக சொல்லிவருகிறார்!