சாதி ஆணவக்கொலையில் முக்கிய குற்றவாளிகள் கைது
உடுமலையில் அரங்கேறிய சாதி ஆணவக்கொலையில் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குமரலிங்கத்தைச் சேர்ந்த வேலுசாமி மகன் சங்கர் (வயது 22), திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த சின்னசாமியின் மகள் கவுசல்யாவை (வயது 19) கடந்த 8 மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டார். இதற்கு கௌசல்யாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், உடுமலை பழைய பேருந்து நிலையம் அருகே சங்கர், கவுசல்யா இருவரையும் 3 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதில், பலத்த காயமடைந்த இருவரும் உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், சங்கர் உயிரிழந்தார். கவுசல்யாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பட்டப்பகலில் பரப்பான இடத்தில் நடுரோட்டில் அரங்கேறிய இந்த படுகொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்துவிட்டதாக திருப்பூர் காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாக்கூர் தகவல் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் கூடுதல் தகவல்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.