velmurugan34-6989
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தழகத்தின் ராமநாதபுரம், நாகப்பட்டினம், கடலூர், தஞ்சை, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 61 பேர் செளதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஜுபைல் நகரில் கடந்த 5 ஆண்டுகளாக சிக்கித் தவித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் வாலி நோக்கத்தைச் சேர்ந்த 6 பேர், திருப்பாலைக்குடியைச் சேர்ந்த 9 பேர், மோர்ப் பண்ணையைச் சேர்ந்த 5 பேர், காரங்காட்டைச் சேர்ந்த 7 பேர், முள்ளிமுனையைச் சேர்ந்த 15 பேர், சோளியக்குடி, தொண்டி, பாசிப்பட்டணத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள், கன்னியாகுமரி மாவட்டம் கோகுலத்தைச் சேர்ந்த 2 பேர், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த 2 பேர், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 7 பேர், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர் என மொத்தம் 61 தமிழக மீனவர்கள் சவுதியில் சிக்கித் தவிக்கின்றனர்.
யூசுப் கலில் இப்ராஹிம் அல்-அமோரி என்பவருக்கு சொந்தமான நிறுவனத்தில் மீன்பிடி வேலைகளுக்காக சென்ற இந்த மீனவர்களுக்காக கடந்த பல மாதங்களாக உணவு, ஊதியம் எதுவும் கொடுக்கப்படவில்லை. அத்துடன் 2 மாத காலம் கடலுக்குப் போகவும் அவர்களுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை.
இதனால் உணவு, இருப்பிடம் என எந்த ஒரு அடிப்படை வசதிகளற்ற நிலையில் சவுதி மண்ணில் பசி பட்டினியால் வாடிவருகின்றனர். இது குறித்து சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகத்திடம் மனு கொடுத்து ஒரு மாதமாகியும் எந்த ஒரு நடவடிக்கையையுமே தூதரக அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை.
மத்திய அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு 61 தமிழக மீனவர்களும் உடனடியாக தாயகம் திரும்புவதற்கான நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது. இதுபோன்ற அசாதாரண சூழ்நிலைகளில் உதவி செய்ய முன்வராத சவுதி தூதரக அதிகாரிகள் மீது மத்திய அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால்தான் வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வு கிடைக்கும் என்பதையும் இத்தருணத்தில் சுட்டிக்காட்டுகிறேன்.
வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள், தொழில் முதலீடு, நாடுகளிடையே நட்புறவு களுக்காக மட்டுமே அல்ல; அங்கு வாழும் இந்திய குடிமக்கள் நலனிலும் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டியது அவசியம் என்பதை இந்திய தூதரக அதிகாரிகளுக்கு எச்சரிக்கையாக விடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.