ss

ஜெனிவா:

லங்கையில் 2002-11 ஆண்டுகளில் அதிபயங்கர மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்திருக்கின்றன. அவை குறித்து விசாரிக்க பன்னாட்டு நீதியரசர்கள், வழக்கறிஞர்கள் புலனாய்வு நிபுணர்களை உள்ளடக்கிய நீதிமன்றம் அமைக்கப்படவேண்டும் என ஐநா மனித உரிமை ஐ நா மனித உரிமை ஆணையர் சயீத் ராட் அல் ஹூசேன் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

உள்நாட்டு விசாரணையில் அத்தகைய கொடுமைகள் தீர விசாரிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு நீதி வழங்கப்படும் என நம்புவதற்கில்லை என இன்று ஜெனிவாவில் வெளியிடப்பட்ட மனித உரிமை அலுவலகத்தின் அறிக்கை கூறுகிறது.

பிப்ரவரி 2002ல் துவங்கிய போர் நிறுத்த ஒப்பந்தம், 2009 மே மாதத்தில் முடிவுற்ற விடுதலைப்புலிகளுடனான மோதல்கள், Lessons Learnt and Reconciliation Commission ( (LLRC) என்ற நல்லிணக்கம் மற்றும் கற்றுணர்ந்த பாடங்கள் என்ற மஹிந்த அரசினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் இவை அனைத்தையும் தீர ஆராய்ந்த பிறகே மனித உரிமை அமைப்பு பன்னாட்டு விசாரணை வேண்டும் எனக்கூறியிருக்கிறது.

அவ்வமைப்பின் ஆலோசனை தமிழ்ப் பகுதி பேராயர்களின் கருத்தினை வழிமொழிவதாக இருக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

வட, மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பேராயர்கள் ஐநா மனித உரிமை ஆணையத்திற்கு கூட்டாக கடிதத்தில்  கூறியிருப்பதாவது:

“உள்நாட்டளவிலேயே விசாரணையை முடித்துக்கொள்ளலாம் என மைத்ரிபால சிரிசேனா அரசு கூறிவருகிறது. இதுநாள் வரை பன்னாட்டு விசாரணைதான் என சொல்லிவந்த அமெரிக்காவும் உள்நாட்டு விசாரணை என்ற புதிய ஏற்பாட்டை வரவேற்றிருக்கிறது. மஹிந்த ராஜபக்சேதான் அகற்றப்பட்டுவிட்டாரே, இனி எல்லாம் ஒழுங்காய்த்தான் இருக்கும் என்ற ரீதியில் மேற்குலக நாடுகளின் போக்கு இருக்கிறது.

இந்நிலையிலேயே தமிழ்ப் பகுதி கிறித்தவ பேராயர்கள் உள்நாட்டு விசாரணையில் எங்களுக்கோ மற்ற தமிழர்களுக்கோ நம்பிக்கை ஏதுமில்லை, நீதி கிடைக்காது, 2009க்குப் பிறகு தேர்தல்கள் நடந்திருப்பதனாலேயே போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுவிடுவார்கள் என்பதற்கான உத்திரவாதம் ஏதுமில்லை எனக் கூறியிருக்கின்றனர்.

இலங்கையில் தற்போது நிலவும் அமைதி என்பது வெற்றி பெற்றவர்களால் ஒட்டுமொத்த சமூகத்தின் மீது திணிக்கப்பட்டிருக்கும் அமைதியாகும். எக்காரணங்களினால் உள்நாட்டுப்போர் மூண்டதோ அவை எவையும் மறைந்துவிடவில்லை. மாறாக அக்காரணங்கள் மேலும் தீவிரமாகியிருக்கின்றன, தமிழர்கள் துன்புறுகின்றனர் என்கிறது பேராயர்களின் கடிதம்.

இலங்கையைப் பொறுத்தவரை முந்தைய காலங்களில் நடைபெற்ற மனித உரிமை மீறல் சம்பவங்கள் எதற்குமே உரிய நீதி கிடைத்ததாக வரலாறில்லை. பல கொடூரங்களுக்குத் தலைமை வகித்த சரத் ஃபொன்சேகா ஃபீல்ட் மார்ஷலாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

தற்போது இலங்கை இராணுவத்தின் தளபதியாக நியமிக்கப்பட்டிருக்கும் ஜெகத் டயஸ் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உண்டு. ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து மற்றும் வாடிகன் ஆகியவற்றுக்கு துணை தூதராக டயஸ் பணியாற்றியபோது, மனித உரிமை குழுக்கள் அவர்மீதான புகார்களை ஆதாரத்துடன் வெளிப்படுத்தின.

அவர் இலங்கை திரும்பிய நேரத்தில் இனி ஸ்விட்சர்லாந்து வந்தால் அவர்மீது வழக்கு தொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு அவரும் அந்தப்பக்கம் தலைகாட்டவில்லை. ஆஸ்திரேலியாவில் நடந்த கூட்டு ராணுவ பயிற்சியில் பங்கேற்க அமெரிக்கா டயசை அனுமதிக்கவில்லை.

சிங்களர்களையும் பௌத்த மதத்தையும் காக்கும் பெரும் பொறுப்பும் கடமையும் ராணுவத்திற்கிருப்பதாகவே இலங்கையில் பொதுவாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் விசாரணை நடத்தி, போர்க் குற்றவாளிகளாக, தேசத்துரோகிகளாக ராணுவ வீர்ர்கள் அறிவிக்கப்பட்டு, தண்டிக்கப்படும் சாத்தியக்கூறு எதுவும் இல்லை.

மேலும் போர்க் குற்றங்கள் போன்றவற்றை முறையாக விசாரிக்க வழி செய்யும் சட்டங்களும் இல்லை. குற்றங்கள் குறித்து சாட்சி சொல்ல முன்வருபவர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வழிமுறையும் இல்லை. இப்பின்னணியில் விசாரணை என்ற ஒரு நாடகத்தை நடத்தினால், நீதி கேட்டு நீதிமன்றப் படியேறுபவர்களே பலியாகிவிடக்கூடும். அத்தகைய ஒரு நிலையினை ஐ நா அனுமதிக்கக்கூடாது.

எனவே தற்போது அமர்விலிருக்கும் ஐநா மனித உரிமை கவுன்சில் இலங்கை இராணுவத்தின் மீது சுமத்தப்பட்டிருக்கும் போர்க்குற்றங்களை முறையாக விசாரித்து ஐ நா விதிகளின்படியே நீதி வழங்க ஐநா பாதுகாப்பு கவுன்சிலை கேட்டுக்கொள்ளவேண்டும் என்று அந்த பேராயர்களின் கூட்டுக்கடிதம் கோருகிறது.

–  த.நா.கோபாலன்