சகாயம் ஐ.ஏ.எஸ்ஸுக்கு கிளம்பும் எதிர்ப்பு!

Must read

IN28_SAGAYAM_2175553f

காயம் ஐ.ஏ.எஸ்., முதல்வராக வேண்டும் என்று கோரி, சென்னையில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்ட பேரணியே நேற்று நடந்தது. சமூகவலைதளங்களிலும் அவரை ஆதரித்து பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், சகாயம் முதல்வராக வேண்டும் என்று பேரணி நடந்தது குறித்து இப்போது எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

ஐ.ஏ.எஸ். அதிகாரியான சகாயம், மதுரை பகுதியில் நடந்த கிராணைட் முறைகேடுகளை ஆய்வு செய்ய, சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டார்.

பெரும் நெருக்கடிக்கிடையில் ஆய்வை முடித்து கோர்ட்டில் அறிக்கை சமர்ப்பித்தார்.

அவரது கிராணைட் ஊழல் ஆய்வின் போது, நரபலி நடந்ததாக கூறப்பட்டது குறித்தும் ஆய்வு செய்தார். “அவர் அரசியலுக்கு வரவேண்டும்” என்று சமூகவலைதளங்களில் பலர் எழுதத்தொடங்கினர்.

இந்த நிலையில் “சகாயம் முதல்வராக வேண்டும்” என்ற கோரிக்கையோடு, நேற்று சென்னையில் பேரணி நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.   ஆனால் எதிர்பார்த்ததைவிட அதிகமானோர் வந்ததால், பேரணி திட்டம் மாற்றப்பட்டு, கூட்டமாக நடத்தப்பட்டது. இதில் சில ஆயிரம் பேர் கலந்துகொண்டார்கள்.

பூமொழி

இந்த நிலையில் சகாயம் முதல்வராக வேண்டும் என்று நடத்தப்பட்ட பேரணிக்கு எதிர்ப்பும் கிளம்பி வருகிறது. அப்படி எதிர்ப்பு தெரிவிப்பவர்களில் ஒருவரான மனித உரிமை செயற்பாட்டாளர் பூமொழி கருத்து இது:

“சகாயம் முதல்வராக சென்னையில் பேரணி……. இந்த கூத்தை வாய்பொத்திக்கொண்டு சகாயம் ரசிக்கிறாரு போல!

நேர்மையான அரசு அதிகாரியாக சகாயம் இருந்தால், தன் பெயரால் நடக்கும் இதுபோன்ற காமெடிகளை கண்டிக்க வேண்டும். அதைவிட, தனது பெயரில் பேரணி நடத்திய அவர்கள் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கவைக்க வேண்டும். அப்போதுதான், சகாயத்தை நேர்மைமிக்க அரசு ஊழியராக நம்பமுடியும்: ஏற்றுக்கொள்ள முடியும்.

அவ்வாறு இல்லையெனில், சகாயம் அவர்களும் மூன்றாம்தர விளம்பர பிரியர்தான்” என்று குறிப்பிடும் இவர், பேரணி நடத்தியவர்கள் குறித்தும் கருத்து தெரிவிக்கிறார்:

“பேரணிவான்களே!
சகாயம் ரசிகர் மன்றத்தினரே!
சகாயம் போன்று… ஏன், ஊடக வெளிச்சத்தில் முகம் காட்டாமல்… அவரைவிட மேலாக திகழ்கின்ற எண்ணற்ற அரசு ஊழியர்கள், தமிழக அரசில் பணியாற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படி பார்த்தால், தமிழகத்தில் எத்தனை முதல்வர்களை தேர்ந்தெடுக்கப் போகிறோம்…….? இது சாத்தியமாகுமா……..? என்பதையும், சகாயம் அரசு ஊழியர் அவர் அவரின் கடமையை செய்கிறார் என்பதையும் உணர்ந்து, சகாயம் அவர்களை தொடர்ந்து அரசு பணியாற்ற வழியை விடுங்கள்” என்றும் கூறுகிறார் பூமொழி.

destop_photo

தே போல ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும் பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அவர் நம்மிடம் கூறியதாவது:

“சகாயம் உண்மையிலேயே நேர்மையானவராக இருந்தால், தான் முதல்வர் ஆகவேண்டும் என்று பேரணி நடத்தியவர்களை கண்டிக்க வேண்டும். அவர்கள் மீது காவல்துறையில் புகார் கொடுக்க வேண்டும்.

ஏனென்றால், அரசு அதிகாரி, அரசியலில் ஈடுபடக்கூடாது என்பது விதி. ஆனால் சகாயத்தை முதல்வராக்குவோம் என்று வெளிப்படையாக ஊர்வலம் போவதாக அறிவிக்கிறார்கள். கூட்டம் நடத்துகிறார்கள்.

இதற்காகவே சகாயம் மீது அரசு நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், தேர்தல் நெருங்கும் வேளையில், நடவடிக்கை எடுப்பார்களோ இல்லையோ..!

சகாயம் ஒரு விளம்பர வெறியர் என்று நான் ஏற்கெனவே பலமுறை சொல்லியிருக்கிறேன்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு என்று கடமை, பொறுப்பு இருக்கிறது. தனது பணியை நேர்மையுடன் செய்வதோடு, வீண் விளம்பரம் இன்றியும் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி செயல்பட வேண்டும். ஆனால் சகாயம் அப்படி இல்லை. கிராணைட் ஊழல் குறித்து விசாரணை நடத்தம்போது, உள்நோக்கத்தோடு, தரையில உட்கார்ந்து இட்லி சாப்பிடுவது, ஊடகங்களை வரவைத்து போஸ் கொடுப்பது போன்றவைகளை செய்தார். இது தவறான செயல்கள்.

அப்போதே நான், “சகாயத்துக்கு கோர்ட் கொடுத்த வேலையை செய்வதை விட்டுவிட்டு, ஏதேதோ செய்து விளம்பரம் தேடறார். ஒரு நல்ல ஐ.ஏ.எஸ். அதிகாரி இப்படி செயல்பட மாட்டார்.

சகாயம் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி மாதிரி செயல்படவில்லை. அரசியல்வாதி மாதிரி, “இது சரியில்ல அது சரியில்லை” என்று பேட்டி மேல் பேட்டி கொடுக்கிறார்” என்று கூறினேன்.இப்போது அதுதான் நடக்கிறது. தனது அரசியல் ஆசைகளை, யாரையோ தூண்டிவிட்டு கூட்டம் நடத்தச் சொல்லி ரசிக்கிறார் சகாயம்.

அவர் அமைதியாக, தனக்கான கூட்டத்தை ரசிப்பதில் இருந்து அனைவரும் புரிந்துகொள்ளலாம்.  வேண்டுமானால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் இறங்கி முதல்வர் என்ன… பிரதமர்கூட ஆகட்டுமே…!

அதைவிடுத்து சிலரை தூண்டிவிட்டு இப்படி பேரணி நடத்தவைக்கக்கூடாது..இது ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு அழகல்ல” என்று காட்டமாக நம்மிடம் சொன்னார் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி முருகன்.

ஆதரவு, எதிர்ப்பு.. இரண்டுக்கும் இடையில் தனது மவுனத்தைத் தொடர்கிறார் சகாயம்.. அவர் மனதில் என்ன இருக்கிறதோ?

  • டி.வி.எஸ். சோமு

 

More articles

2 COMMENTS

Latest article