புதுக்கோட்டை:
“உச்சநீதிமன்ற உத்தரவை மீறி, ஜல்லிக்கட்டு நடத்தினால் கைது செய்யப்படுவார்கள்” என்கிற எச்சரிக்கை, ஆயிரக்கணக்கான காவலர்கள் குவிப்பு என்று மதுரை மாவட்ட வாடிவாசல்கள் (ஜல்லிக்கட்டு நடக்கும் இடம்) ரணகளமாகிக்கொண்டிருக்கின்றன. ஆனால், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த ஊரில் ஜல்லிக்கட்டு நடந்து முடிந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள ராபூசல் கிராமம்தான் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த ஊர். இங்கு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் பல நாட்களாக நடந்துவந்தன. இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை வித்தகவே மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது.
ஆனால் இலுப்பூர் பகுதி முழுவதும் கடந்த ஒரு மாதமாகவே ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஒத்திகை நடந்து வந்தது. இரண்டு வாரங்களுக்கு முன்பு அதை கண்காணிக்கச் சென்ற காவல்துறையைச் சேர்ந்த ஒருவரை மாடு முட்டியதில் அவர் காயம்பட, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றியியதாகவும் தகவல் பரவியது. அமைச்சர் விஜயபாஸ்கரின் தொகுதி என்பதால் காவல்துறையினர் இந்த தகவலை வெளியில் விடவில்லையாம்.
இந்நிலையில், பொங்கல் தினமான நேற்று காலை பத்து ஜல்லிக்கட்டு மாடுகளை, அமைச்சரின் சொந்த ஊரான ராபூசலில் உள்ள ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு கொண்டு வந்து, ஜல்லிக்கட்டை நடத்தியிருக்கிறார்கள். இந்த தகவல் காவல்துறையினருக்கு தெரிந்து, அவர்கள் அங்கு செல்வதற்குள் ஜல்லிக்கட்டு நடந்து முடிந்துவிட்டதாம்.
காவல்துறையினர், “அங்கு ஜல்லிக்கட்டு நடக்கவில்லை. மாடுகளை வைத்து பூஜைதான் நடந்தது” என்று ரிப்போர்ட் அனுப்பிவிட்டார்களாம்.