கோட்டையை பிடிப்பார்களா குமாரர்கள்?

Must read

காங்கிரஸ் தலைவரான பின் ராகுல்காந்தியும், தி.மு.க.தலைவரான பின் மு.க.ஸ்டாலினும் எதிர் கொள்ளும் முதல் மக்களவை தேர்தல் இன்னும் நான்கு மாதங்களில் நடைபெற உள்ளது.
அரசியல் ஆளுமைகளுக்கு வயது உச்சவரம்பில் இருந்து விலக்கு அளிக்கும் பட்சத்தில் இருவரும் ‘இளம்’ தலைவர்களே.

செங்கோட்டை, ராகுலின்-இலக்கு.
செயிண்ட் ஜார்ஜ் கோட்டை, ஸ்டாலினின்-கனவு.
இருவரின் தந்தையரும் ஏற்கனவே வீற்றிருந்த கொலு மண்டபங்கள்.

ராகுலுக்கான பாதையில் மாயாவதி,அகிலேஷ்,சந்திரசேகர ராவ், நவீன் பட்நாயக் என சில தடைக்கற்கள் குறுக்கிட்டாலும் ,அவற்றை தாண்டி செல்வதில் அவருக்கு பெரிதாக சிரமமில்லை.
கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து காங்கிரஸ் ‘மேஜிக்’ எண்ணை எட்டி விட்டால்- இவர்களே ,ராகுல் அரி யணை ஏற –படிக்கற்களாக நின்றாலும் ஆச்சர்யம் இல்லை.
மக்களைவை தேர்தலுக்கான முன்னோட்டம் என்று கணிக்கப்பட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில், மோடியை வீழ்த்தி ‘செமிபைனலில்’ ஜெயித்து விட்டார்-ராகுல்.
நாட்டின் பிரதமரை தீர்மானிப்பதில் இந்தி ‘பெல்ட்’எனப்படும் வடக்கு பிராந்தியமே பிரதான பங்கு வகிக்கிறது.
இந்த பிராந்தியத்தை சேர்ந்த மத்திய பிரதேசம், ராஜஸ்தான்,சத்தீஷ்கர் ஆகிய 3 மாநிலங்களில் அண்மையில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. தோற்று விட்டது.கடந்த மக்களவை தேர்தலில் இந்த மாநிலங்கள் 62 பா.ஜ.க. எம்;பி.க்களை டெல்லிக்கு அனுப்பியது.
நடத்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை வைத்து கணக்கிட்டால்- இந்த 3 மாநிலங்களில் இருந்து இருபது சொச்சம் எம்.பி.க்களே பா.ஜ.க.வுக்கு கிடைப்பார்கள்.இந்த மாநிலங்களில் காங்கிரசுடன் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் உடன்பாடு வைத்துக்கொண்டால் ஒற்றை இலக்க தொகுதிகளே பா.ஜ.க.வுக்கு கிடைக்கும் என்பதே –நிதர்சனம்.
வடக்கில் உள்ள மற்றொரு பிரதான இந்தி மாநிலம்- உத்தரபிரதேசம்.கடந்த மக்களவை தேர்தலில் இங்கு மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி 73 இடங்களை அள்ளியது.அங்கே இப்போது அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதியும்,மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் உடன்பாடு கண்டுள்ளன.கடந்த தேர்தல் கணக்கை கூட்டிக்கழித்து பார்த்தால் இரு கட்சிகளுக்கும் 42 இடங்கள் கிடைக்கும் என்கிறது புள்ளி விவரம்.
வடக்கு நிலவரம் தேய்பிறையாக தொடர –தென்னகத்தில், கர்நாடகம் தவிர பா.ஜ.க.வுக்கு தளங்கள் இல்லை என்பதே நிஜ நிலவரம்.
ஆக-
இன்றைய தேதியில் மோடியை விட ராகுல்காந்தியே செங்கோட்டையை பிடிக்கும் வாய்ப்புகள் இருப்பதாக
சொல்கிறார்கள்- அரசியல் நிபுணர்கள்.

ஸ்டாலின் –ஜாதகம் எப்படி?
ராகுலைப்போல் அத்தனை சாதகமாக இல்லை.
கலைஞர் இருந்தபோதே செயல் தலைவர் பதவியில் இருந்து அவர் தான் தி.மு.க.வை வழி நடத்தினார்.
அ.தி.மு.க. பிளவு பட்ட நிலையில் நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. தோற்றதோடு காப்புத்தொகையையும் இழந்தது –ஸ்டாலினின் தனிப்பட்ட தோல்வி என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
எனினும் கலைஞரைப்போல் தி.மு.க.வின் ஒற்றை முகமாக இருப்பதாலும்,புதிய தோழமைகளாலும், தமிழகத்தில் -மக்களவை தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக ஸ்டாலின் இருப்பது உண்மை.
ஆனால் சட்டப்பேரவை தேர்தல் களம் முற்றிலுமாக மாறுப்பட்டிருக்கும்.
முதல்வர் நாற்காலிக்கான பந்தயத்தில் எடப்பாடி பழனிச்சாமி தவிர, ஸ்டாலினுடன் ரஜினி ,கமல்,டி.டி.வி.தினகரன் ஆகியோரும் பங்கேற்பது உறுதியாகி விட்டது.


இது கயிறு இழுக்கும் போட்டியாக இருக்கும் பட்சத்தில்- வலுவான தோழமைகள் மட்டுமே ஸ்டாலினுக்கு வெற்றிக்கோப்பையை பெற்றுக்கொடுக்கும் என்பதே நிஜம்.

–பாப்பாங்குளம் பாரதி

More articles

Latest article