IPS
 
காவல்துறையில் நான்கு வகை தேர்வுகள் உண்டு. . முதல்வகை, காவலராக தேர்வு செய்வது. இப்படி தேர்வு செய்யப்படுபவர்கள் அதிகபட்சம் இன்ஸ்பெக்டர் பதவி வரை வருவார்கள்.
இரண்டாம் வகை, நேரடியாக உதவி ஆய்வாளராக தேர்வு பெறுவது. இவர்கள் அதிகபட்சம் உதவி கமிஷனர் ஒருசிலர் கூடுதல் துணை  கமிஷனர் வரை பதவி உயர்வு பெறுவர்.
மூன்றாவது…   “குரூப் ஒன்று” தேர்வு எழுதி நேரடியாக உதவி கமிஷனர் அல்லது டிஎஸ்பியாக நியமனம் பெறுபவர். இவர்கள் அதிகபட்சமாக ஐஜி  வரை பதவி உயர்வு பெறலாம். ஒரு சிலர் ஏடிஜிபி வரை பதவி உயர்வு பெற்றதும் உண்டு.  கடைசி சில வருடங்களில் இவர்களுக்கு ஐபிஎஸ் அந்தஸ்து கிடைக்கும்.
நான்காவது…   நேரடியாக சர்வீசஸ் எக்சாம் எழுதி ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு பெறுவது. இவர்கள் உதவி கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்படுவர். இவர்கள் மட்டுமே டிஜிபி அந்தஸ்து வரை வர முடியும். நிர்வாக படிப்பு படித்ததால் மத்திய அரசு பணிக்கும் செல்ல முடியும். பணிக்கு வந்த குறுகிய காலத்தில் கிடுகிடுவென பதவி உயர்வு இவர்களுக்கு வருவதால் முக்கிய பொறுப்புகளில் இந்த பிரிவினர்தான் அமர்வர்.
ஆனால், “தற்போது தமிழக காவல்துறையில் நிலைமை தலைகீழாக இருக்கிறது.  தகுதி வாய்ந்த ஐபிஎஸ் அதிகாரிகள் பலர் இருக்கையில் அவர்கள் முக்கியத்துவம் இல்லாத பணிகளில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.  தமிழகத்தின் நிர்வாக பொறுப்புகள் , உளவுத்துறை , நுண்ணறிவு உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் குருப் ஒன் மூலம் வந்து ஐபிஎஸ் ஆன அதிகாரிகளே நியமிக்கப்பட்டுள்ளனர்” என்ற குமுறல் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மட்டத்தில் எழுந்துள்ளது.
உதாரணமாக ஐஜி அந்தஸ்த்தில் உள்ள இந்த குரூப் ஒன் அதிகாரிகள் தமிழகத்தின் வடக்கு ,தெற்கு ,மேற்கு , மத்தி ஆகிய நான்கு மண்டலத்துக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் மாநில உளவுத்துறை ஐஜியும், சென்னையின் நுண்ணறிவு துறை ஐஜியும் குரூப் ஒன் அலுவலர்களே. நெல்லை ஆணையரும் குரூப் ஒன் அலுவலரே.  சென்னை வடமேற்கு மண்டல கூடுதல் ஆணையரும் குரூப் ஒன் அலுவலரே . இதுபோன்ற நிலை இதற்கு முன்னர் இருந்தது இல்லை என்கின்றனர்.
அதுவும் தமிழகத்தின் நான்கு மண்டல ஐஜிக்களும், உளவுத்துறை ,நுண்ணறிவு , ஐஜியும் குரூப் ஒன் அலுவலர் என்பது ஐபிஎஸ் அதிகாரிகள் மத்தியில் குமுறலை ஏற்படுத்தியுள்ளது.
“ஐபிஎஸ் தேர்வு எழுதி வரும் அதிகாரிகள் முக்கிய நிகழ்வுகளில் மாற்று கருத்து எதாவது இருந்தால் தெரிவிப்பார்கள்.  இது நிர்வாகத்துக்கு நல்லது. ஆனால் டிஜிபி அஷோக்குமார் , முக்கிய நிர்வாக பணிகளில் வேண்டுமென்றே குரூப் ஒன் அலுவலர்களை நியமித்துள்ளார். இவர்கள் மாற்று கருத்தே கூறாமல் சொன்னதை செய்வார்கள். இப்படிப்பட்டவர்கள்தான்” என்றும் வருத்தப்படுகிறார்கள் ஐ.பி.எஸ். அதிகாரிகள்.
“இது போன்ற நியமனங்கள் தமிழகத்தின் நிர்வாகத்தையும் தேக்கமடைய செய்யும் இது காவல்துறையை கையில் வைத்துள்ள முதல்வருக்கு தெரியுமா என்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் குமுறுகின்றனர்.
“தேர்தல் நடத்தைவிதி அமலுக்கு வந்துவிட்டது. இனி மாறுதல்களுக்கும் வழி இல்லை… இந்த நேரத்தில் புலம்பி என்ன ஆகப்போகிறது..”  என்ற குரலும் ஐ.பி. எஸ். வட்டாரத்தில் ஒலிக்கிறது.
–  டைகர் முத்து