டில்லி,
காவிரி வழக்கில் விசாரணை முடிவடையாததால், நாளையும் விசாரணை நடைபெறும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து உள்ளது.
காவிரி நீர் பங்கீடு வழக்கில் நிரந்தர தீர்வு காணும் வகையில் காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.  ஆனால் மத்திய அரசு இதை ஏற்க மறுத்துவிட்டது.
இதற்கிடையே இரு மாநிலங்களிலும் நீர் நிலைமையை அறிய காவிரி உயர்மட்ட தொழில் நுட்ப குழுவை அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன் படி மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் ஜி.எஸ்.ஷா தலைமையிலான நிபுணர்கள் குழுவை மத்திய அரசு அமைத்தது.
sc1
இந்த குழுக்கள் இரு மாநிலத்திலும் ஆய்வு செய்து சுப்ரீம் கோர்ட்டில் நேற்று அறிக்கை தாக்கல் செய்தனர்.
ஆனால், ஜி.எஸ்.ஷாவின் அறிக்கை ஒருதலைப்பட்சமாக இருந்தது. கர்நாடகாவுக்கு ஆதரவாகவே அவரது அறிக்கை இருந்தது
இந்த நிலையில் காவிரி நீர் வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.  அரசு வக்கீல் தாமதமாக வந்ததால் விசாரணையை நீதிபதிகள் 15 நிமிடம் தாமதமாக தொடங்கினர்.
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல் காவிரி நிபுணர் குழு அறிக்கை ஒருதலைப்பட்சமாக இருப்பதாக கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக ஆட்சேபனை மனுவை தாக்கல் செய்ய இருப்பதாகவும், அதற்கு கோர்ட்டு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு வக்கீல் கூறினார்.
காவிரிநீர் வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று கர்நாடக அரசு வக்கீல் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து வழக்கு விசாரணையை பிற்பகலுக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
பிற்பகல் விசாரணை தொடங்கியதும், இவ்வழக்கில் நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், 5 நீதிபதிகள் அமர்வு விசாரிக்க வேண்டும் என்பது பரிசீலனைக்குரியது என்றும், இந்த கோரிக்கை பற்றி அரசியல் சாசனப்படி முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தனர்.
மத்திய அரசு வக்கீல் வாதாடும்போது, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும், நாடாளுமன்றம் மற்றும் மத்திய அரசுக்கு மட்டுமே அந்த அதிகாரம் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இன்று வாதம் நிறைவடையாத நிலையில் நாளையும் விசாரணை தொடரும் என நீதிபதிகள் அறிவித்தனர்.
மேலும், மறு உத்தரவு வரும் வரை ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவு தொடரும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், அந்த உத்தரவின்படி தமிழகத்திற்கு கர்நாடக அரசு 2000 கன அடி காவிரி நீர் திறந்து விட வேண்டும் என உத்தரவிட்டனர்
ஜி.எஸ்.ஷா தலைமையிலான நிபுணர் குழுவின் அறிக்கை மீது ஆட்சேபனை இருந்தால் அக்டோபர் 25-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்.
சட்டம் ஒழுங்கு விவகாரத்தை இரு மாநில அரசுகளும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்’ என்றும் நீதிபதிகள் தங்கள் வலியுறுத்தினர்.