கலப்புத் திருமண தம்பதி மீது கொலைவெறித் தாக்குதல் :
நெடுமாறன் கண்டனம்
தமிழர் தேசியத்தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில், ‘’ஒருவரையொருவர் விரும்பி காதலித்து திருமணம் செய்து கொண்ட சங்கர்,கௌசல்யா ஆகியோரை பட்டப்பகலில் உடுமலைப்பேட்டை பேருந்து நிலையம் முன்பாக சாதி வெறியர்கள் வெட்டிச் சாய்த்த செய்தி அனைவரையும் அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளது.
கலப்பு மணம் செய்து கொள்பவர்களுக்கு எதிராக இத்தகைய கொலைகளை சாதி வெறியர்கள் கொஞ்சமும் அச்சமின்றி செய்யும் போக்கு நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். கொலைகாரர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என வற்புறுத்துகிறேன். சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க அரசு முன்வரவேண்டும்’’என்று தெரிவித்துள்ளார்.